திருக்குர்ஆனின் ஒளியில் விஞ்ஞானம்.!

திருக்குர்ஆனின் ஒளியில் விஞ்ஞானம்.!

தாய்ப்பால்.!

அத்தியாயம் 43

பாலூட்ட வேண்டும் என்று விரும்புகிற (கண)வனுக்காக (விவாகரத்துச் செய்யப்பட்ட) தாய்மார்கள் தமது குழந்தைகளுக்கு முழுமையாக இரண்டு ஆண்டுகள் பாலூட்ட வேண்டும். அவர்களுக்கு நல்ல முறையில் உணவும் உடையும் வழங்குவது குழந்தையின் தந்தைக்குக் கடமை. சக்திக்கு உட்பட்டே தவிர எவரும் சிரமம் தரப்பட மாட்டார். பெற்றவள் தனது பிள்ளையின் காரணமாகவோ, தந்தை தனது பிள்ளையின் காரணமாகவோ சிரமம் கொடுக்கப்பட மாட்டார்கள். (குழந்தையின் தந்தை இறந்து விட்டால்) அவரது வாரிசுக்கு இது போன்ற கடமை உண்டு. இருவரும் ஆலோசனை செய்து மனம் விரும்பி பாலூட்டுவதை நிறுத்த முடிவு செய்தால் இருவர் மீதும் எந்தக் குற்றமும் இல்லை. உங்கள் குழந்தைகளுக்கு (வேறு பெண் மூலம்) பாலூட்ட வேண்டும் என நீங்கள் விரும்பினால் (பெற்றவளுக்குக்) கொடுக்க வேண்டியதை நல்ல முறையில் கொடுத்து விட்டால் உங்கள் மீது எந்தக் குற்றமுமில்லை. அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நீங்கள் செய்வதை அல்லாஹ் பார்ப்பவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்!

(திருக்குர்ஆன் 2:233)

பாலூட்டும் காலங்கள் முழுமையாக இரண்டு ஆண்டுகள் என்று திருக்குர்ஆன் கூறுகிறது.

லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியின் டாக்டர் தெரிசா நோரட் இது குறித்து ஆய்வு செய்து தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு மார்பக புற்று நோய் வருவதற்கு வாய்ப்புகள் குறைவு என்றும், ரத்தம் ஓட்டம் சீராகும் எனவும்,சுவாசப்பிரச்சினைகள் ஏற்படாது என்றும் கண்டறிந்துள்ளார்.

தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதும் வெகுவாக(17%) குறைகிறது. மேலும் நீரழிவு நோயிலிருந்து பாதுகாப்பு கிடைக்கிறது. இங்கிலாந்து நாட்டில் ஆராய்ச்சியாளர்கள் ஐரோப்பாவிலுள்ள ஒன்பது நாடுகளில் 12 ஆண்டுகளாக 3,80,000 பெண்களை பரிசோதித்ததில் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு புற்றுநோய் வருவதில்லை என்று கூறுகிறார்கள். தாய்ப்பால் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. மேலும், தொற்று நோய்கள், வயிற்றுப்போக்கு, உடல்பருமன், நீரழிவு, ஆஸ்துமா, திடீர் குழந்தை மரணங்கள் போன்ற பல நோய்களின் அபாயத்தை குறைக்கிறது. தாய்ப்பால் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு மிக முக்கியமான பல ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது.

மன ரீதியாக தாயுடன் குழந்தைக்கு நல்ல பிணைப்பை(Bonding )தாய்ப்பால் உருவாக்குகிறது.

தாய்ப்பால் எந்த செலவுகளும் இல்லாமல், தூய்மையானதாக கிடைக்கிறது. புட்டிப்பால்கள் ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் பாதிப்புகள், நோய்க்கிருமி பாதிப்புகள் இல்லாமல் குழந்தையின் ஆரோக்கிய மேம்பாட்டிற்கு தாய்ப்பால் மிக அவசியமானது. தாய்ப்பாலில் புரதச்சத்து (Protein) மிக அதிக அளவில் உள்ளது.இதனால் குழந்தைகளின் தசை வளர்ச்சியானது வேகமாக இருக்கிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

அமெரிக்காவின் சாண்டியாகோவில் அமைந்திருக்கும் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் மனித பால் நிறுவனத்தை(Human milk Institute) வைத்து இருக்கிறார்கள்.

தாய்ப்பால் விற்கப்படுகிறது. மேற்குலக நாடுகளில் பெரியவர்கள் வாங்கி பயன்படுத்துகிறார்கள்.

தாய்ப்பாலில் இருந்து கிடைக்கும் மிக அதிகமான நன்மைகளை கருத்தில் கொண்டு, தாய்ப்பால் சுரக்காத பெண்கள் தங்கள் குழந்தைகளுக்கு செவிலித்தாய்களை ஏற்பாடு செய்து பாலூட்ட வைத்தார்கள். இஸ்லாமும் இதன் நன்மைகளை கருத்தில் கொண்டு அங்கீகரிக்கிறது.

தாய்ப்பாலால் ஏற்படும் நன்மைகளை ஒருபெண் சரியாக புரிந்து கொண்டால், தனது குழந்தைக்கு எப்பாடுபட்டாவது பாலூட்டி விடுவாள் என்று இன்றைய மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

இன்றைய நவீன நாகரிகம், பெண்களை தாய்ப்பால் கொடுப்பதில் இருந்து தடுக்கிறது. மேலும் மார்பக காம்புகளில் வலி,வெடிப்பு,பால் அதிகமாக சுரக்கும் போது மார்பகங்களில் ஏற்படும் வலி,

பால் கொடுக்க பொறுமை இல்லாதது, பொது இடங்களில் பால் கொடுப்பதில் சிக்கல்கள், பால் சரியாக சுரக்காவிட்டால் ஏற்படும் கவலைகள், தாயின் உணவுகளால் குழந்தைக்கு ஏற்படும் தீங்குகள், தாய் எடுக்கும் மருந்துகளால் குழந்தைக்கு தீங்குகள், வேலைக்கு செல்லும் பெண்களுக்கான நேரமின்மை அழகு குலைந்துவிடும் என்ற மேற்கத்திய மனநிலை, என்று பல காரணங்களால் இன்று குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் சூழல்கள் மாறி வருகிறது.

தாய்ப்பாலை முறையாக பராமரித்து கொடுப்பதில் உதவி செய்ய இன்று “Lactation consultant” வந்துவிட்டார்கள்.

“தாய்ப்பாலை திரவதங்கம்” என்றும் அது மாயசக்தியின் பிறப்பிடம் என்றும் நிபுணர்கள் கூறுகிறார்கள். ஒருவேளை தாய்க்கு பாலூட்டுவதில் சிரமங்கள் இருந்தால், செவிலித்தாய் மூலமாவது தாய்ப்பால் ஊட்டவேண்டும் என்று திருக்குர்ஆன் கூறுவதிலிருந்து, தாய்ப்பால் எவ்வளவு அவசியமானது என்பதை புரிந்து கொள்ளலாம்.

திருக்குர்ஆனின் ஒளியில் விஞ்ஞானம்..! நாளை மற்றொரு செய்தியை ஆராய்வோம்..!

‘கப்ளிசேட்’

Leave a Reply

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!