திருக்குர்ஆனின் ஒளியில் விஞ்ஞானம்..!

திருக்குர்ஆனின் ஒளியில் விஞ்ஞானம்..!

மழையின் ரகசியங்கள்..!

அத்தியாயம் 19

“அல்லாஹ் மேகங்களை இழுத்து அவற்றை ஒன்றாக்குவதையும், பின்னர் அதை அடுக்கடுக்காக அமைப்பதையும் நீர் அறியவில்லையா? அதன் மத்தியில் மழை வெளிப்படுவதைக் காண்கிறீர்! வானத்திலிருந்து அதில் உள்ள (பனி) மலைகளிலிருந்து ஆலங்கட்டியையும் இறக்குகிறான். தான் நாடியோருக்கு அதைப் பெறச் செய்கிறான். தான் நாடியோரை விட்டும் திருப்பி விடுகிறான். அதன் மின்னல் ஒளி பார்வைகளைப் பறிக்கப் பார்க்கிறது.” (அல்குர்ஆன் 24:43)

மழையை ரசிக்கிறோம். மழையின் ரகசியங்களை அறிந்துகொள்வோம்.

இடியும்,மின்னலும் ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகளைப் போல மின்னலைத் தொடர்ந்து இடி ஓசை வரும்.மின்னல் ஒளியாகவும்(Light) இடி ஒலியாகவும் (Sound) இருப்பதால், ஒலியை விட ஒளி வேகமாக பரவுவதால் மின்னலை முதலாவதாகவும், இடியை இரண்டாவதாகவும் பார்க்கிறோம்.

மின்னல் என்பது மழைமேகத்தில் தீப்பொறி போல உருவாகும் மின்பொறிக் கீற்றாகும். இது நிகழும்போது அதிக வெப்பமும், ஒளியும்உண்டாகும். இடி என்பது மின்னலின்போது உருவாகும் மிகப்பெரிய ஒலி ஆகும். எல்லா மேகங்களும் நீரை சேமித்து வைப்பதில்லை. அதிகளவு நீரை சேமித்து வைக்கும் மேகங்களே மழையாக பொழிகின்றன. நீர் மேகம் இல்லாத காரணத்தால்தான் எல்லா இடங்களிலும் மழை பொழிவதில்லை. மேகத்திலிருக்கும் நீர்த்துளிகளின் அடர்த்தி அதிகமானதும், பூமியின் ஈர்ப்பு விசையின் காரணமாக கீழ்நோக்கி மழையாக பெய்கின்றன. வான் மழையின் ரகசியம் இவ்வசனத்தில் விவரிக்கப்படுகிறது.வானில் மழை நீர் எவ்வாறு சேமிக்கப்பட்டு, பூமியில் பொழிகின்றது என்ற அறிவியல் உண்மை ஆச்சரியப் படுத்துகிறது. பூமியில் உள்ள நீரை சூரியன் நீராவியாக மாற்றிமேலே இழுத்துச்சென்று அந்தரத்தில் மேகமாக நிறுத்தியிருப்பதை‌ அறிவோம். மேகங்களின் பிரமாண்டம் ஆச்சரியமானது. மேலே இழுத்துச் செல்லப்படும் நீராவியானது, ஒன்றோடு ஒன்றாக இணைத்து ஆலங்கட்டி (பனிக்கட்டி) தொகுப்பாக மாற்றப்படுகிறது. இந்த பனிக்கட்டிகள் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கப்பட்டு 1000அடிமுதல் 30,000அடிவரை உயர்கின்றது. 30,000 அடிஎன்பது 9 கிலோ மீட்டரைவிட அதிகம். இது உலகின் பெரிய மலையான இமயமலையைவிட அதிகம். இவ்வளவு பெரியமலையின் அளவுக்கு பனிக்கட்டிகள், செங்குத்தாக அடுக்கப்பட்டு, மின் காந்த தூண்டுதல் ஏற்பட்டவுடன் பனிக்கட்டிகள் உருகி மழையாக கொட்டுகின்றன. இது மழையின் ரகசியமாகும்.

இதுபோன்று பெய்யும் மழை நீரே குடிநீராகவும், விவசாயத்திற்கும், கால்நடைகளுக்கும் பயனளிக்கிறது. வானத்திலிருந்து அளவோடு தண்ணீரை இறக்கினோம். அதை பூமியில் தங்கவைத்தோம். அதை போக்கிவிடுவதற்கும் ஆற்றலுடையவர்கள் என்று திருக்குர்ஆனின் இந்த வசனமும் ஏராளமான உண்மைகளை வெளிப்படுத்துகிறது. நிலத்தடி நீர் எங்கிருந்து வருகிறது என்பதை நாம் யோசித்திருக்கிறோமா? பூமியின் மேற்பரப்பில் தண்ணீர் இருப்பதுபோல், பூமியின் கீழ்ப்பரப்பிலும் பெரிய ஆறுகளும், ஏராளமான தண்ணீரும் உள்ளன. இந்த நிலத்தடிநீர் கடல்வழியாக‌‌ பூமிக்கு வருவதாக நம்பினார்கள். உண்மையில் ஆகாயத்திலிருந்து பெய்யும் மழை பூமியால் உறிஞ்சப்பட்டு அந்த நீர்தான் பூமியில் நிலத்தடி நீராக சேமித்து வைக்கப்பட்டுள்ளது என்று கி.பி.1580 ஆம் ஆண்டு கண்டுபிடித்தனர். இதனால்தான் கடலுக்கு அருகிலுள்ள நிலத்தடி நீர் உப்பாக‌ இருப்பதில்லை. ஆகவே, நிலத்தடிநீரை சேகரிக்கும் வசதியுள்ள ஆறுகள்,  குளங்கள், கிணறுகள் எங்கு உள்ளனவோ, அங்கு குடியிருப்புகளை அமைத்துக்கொள்ள இந்த வசனம் வழிகாட்டுகிறது. உலகத்தின் ஆரம்பகால மனித குடியிருப்புகளும் நீர் நிலைகளின் அருகிலேயே அமைந்தது.

பூமிக்கடியில் நீர் தானாக உற்பத்தி ஆவதில்லை. பூமிக்குள் நீர் உறிஞ்சி சேமிக்கப்படுகிறது‌ என்ற உண்மையை திருக்குர்ஆன் விவரிக்கிறது.

இன்றைக்கும் தென் ஆப்ரிக்காவின் கேப்டவுன் நகரம் நிலத்தடி நீரில் பூஜ்யமாகி இருக்கிறது. இது போன்று ஏராளமான நகரங்களுக்கு எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. நாம் நினைத்தால் நீரை போக்கியும் விடுவோம் என்ற திருக்குர்ஆனின் வரிகள் ஆச்சரியப் படுத்துகிறது.

திருக்குர்ஆன் ஒளியில் விஞ்ஞானம்..! நாளை மற்றொரு புதிய செய்தியை ஆராய்வோம்…!

‘கப்ளிசேட்’

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

Leave a Reply

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!