திருக்குர்ஆனின் ஒளியில் விஞ்ஞானம்..!
நீரை சுமக்கும் மேகங்கள்…!
அத்தியாயம் 18
நீங்கள் அருந்தும் தண்ணீரைப் பற்றிச் சிந்தித்தீர்களா? (திருக்குர்ஆன் 56:68)
மேகத்திலிருந்து அதை நீங்கள் இறக்கினீர்களா? அல்லது நாம் இறக்கினோமா? (திருக்குர்ஆன் 56:69)
நாம் நினைத்திருந்தால் அதை உப்பு நீராக்கியிருப்போம். நீங்கள் நன்றி செலுத்த மாட்டீர்களா? (திருக்குர்ஆன் 56:70)
“நீர் இன்றி அமையாது உலகு” என்ற வரிகள் நீரின் அவசியத்தை உணர்த்துகின்றன. “மூன்றாம் உலகப்போர்” ஏற்பட்டால் அது தண்ணீருக்காகவே ஏற்படும் என்கின்றனர் நீரியல் நிபுணர்கள். உலகில் இயற்கையாக கிடைக்கும் தண்ணீரை காசுகொடுத்து வாங்கும் மனநிலையை உருவாக்கிய கார்ப்பரேட்டுகள், அதற்கு துணைபோன அரசாங்கங்கள் என இயற்கையின் விதியை மீறும் அநியாயங்கள். உலகின் எந்த உயிரினமும் நீரின்றி வாழமுடியாது. நம்மைச்சுற்றியுள்ள காற்றிலும், நம்மைச்சுமந்து நிற்கும் பூமியிலும் தண்ணீர் உள்ளது. இந்த பூமி “நீர்க்கோளம்” என்றழைக்கப்படுகிறது. உலகின் பரப்பில் 70% தண்ணீர் பரவியிருப்பதும், அந்த நீரில் 70.7%உப்புநீரும், மீதியுள்ள 29.3%நல்ல நீருமாகும். சூரியவெப்பத்தால் கடல்நீர் ஆவியாகி மேலே சென்று மேகங்களாகத் திரண்டு தூய்மையான மழைநீராகப் பொழிகிறது. உப்பு நீர் ஆவியாகி மேலே சென்று, நல்ல தூய்மையான மழை நீராக பொழிய, மேகத்தில் என்ன நிகழ்ந்ததோ என்ன ரசாயன வித்தைகள் நிகழ்ந்ததோ, அதை யார் நிகழ்த்தினார்களோ, என்று விஞ்ஞானிகள் யோசிக்கையில்,
நிகழ்த்தியவன் இறைவன் என்று மேலுள்ள திருக்குர்ஆன் வசனம் சான்று பகர்கிறது. மழைநீரே உலகத்தின் நீர்களிலேயே அதிக தூய்மையானதும், இயற்கையானதும் ஆகும். குளோரின், புளோரைடு போன்ற உப்புகள் இல்லாததால் சமையலுக்கும், குடிப்பதற்கும் மிகவும் ஏற்ற நீராகும்.
தண்ணீரை இறைவனைத் தவிர வேறு யாரும் உற்பத்தி செய்துவிடமுடியாது. எல்லா உயிரினங்களுக்கும் அடிப்படை மூலப்பொருள் தண்ணீர்தான் என்பதை திருக்குர்ஆன் விவரிக்கிறது. “வறண்ட பூமியை நோக்கி தண்ணீரை நாமே ஓட்டிச் செல்கிறோம்” என்பதை அவர்கள் காணவில்லையா? அதன் மூலம் பயிர்களை வெளிப்படுத்துகிறோம். அதிலிருந்து அவர்களும், அவர்களது கால்நடைகளும் சாப்பிடுகின்றனர். அவர்கள் சிந்திக்க மாட்டார்களா?” (திருக்குர்ஆன் 32:27),
என்ற திருக்குர்ஆன் வசனம் கூறுவதை ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். சிலர் செயற்கை மழை என்பதை மனிதன் பொழிய வைத்துவிட முடியும் என்று தவறாக எண்ணுகின்றனர். செயற்கை மழை என்பது செயற்கையாக மழைமேகத்தை உருவாக்கி மழை பெய்யச்செய்வதல்ல. வளிமண்டலத்தில் இருக்கின்றன மேகங்கள்,நாம் மழை பெய்ய வேண்டும் என்று நினைக்கிற இடத்திற்கு மேலே வரும்போது, வேதிப் பொருட்களைத்தூவி மழை பெய்யச் செய்வதாகும்.இதை Cloud seeding மேகவிதைப்பு முறை என்பர்.MGR அவர்கள் முதல்வராக இருந்தபோது வறட்சியாக இருந்தபோது இதுபோன்ற முறை முயற்சி செய்யப்பட்டு அது தோல்வியில் முடிவடைந்தது. மனிதன் மேகங்களையோ மழையையோ செயற்கையாக உருவாக்க முடியாது என்ற திருக்குர்ஆனின் கூற்றை விஞ்ஞானமும் உறுதிப்படுத்துகிறது.
திருக்குர்ஆன் ஒளியில் விஞ்ஞானம்..! நாளை மற்றொரு புதிய செய்தியை ஆராய்வோம்..!
‘கப்ளிசேட்’

