திருக்குர்ஆனின் ஒளியில் விஞ்ஞானம்..!
ஓரங்களில் குறையும் பூமி..!
அத்தியாயம் 17
“பூமியை,அதன் ஓரங்களில் குறைப்பதற்காக நாம் பூமிக்கு வருவதை அவர்கள் காணவில்லையா?அல்லாஹ்வே தீர்ப்பளிப்பான்.அவனது தீர்ப்பை ஒத்திவைப்பவர் எவருமில்லை.அவன் விரைந்து விசாரிப்பவன்.
(அல்குர்ஆன்13:41)
கடற்கோள்களால் (சுனாமி) நிலங்கள் மூழ்கடிக்கப்பட்டுள்ளன. தென்தமிழகத்திற்கு தெற்கே லெமூரியா கண்டம் இருந்ததாகவும், அது ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே கடலில் மூழ்கி விட்டதாகவும், ஆய்வாளர்கள் அறிவிக்கின்றனர். அதுபோல குமரிக்கண்டமும் அதிலிருந்த சிறப்புவாய்ந்த நகரங்களும் கடற்கோள்களால் காணாமல் போய்விட்டன. சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற இலக்கியங்களில் அற்புத நாகரீகமும், வணிகமும் செழித்தோங்கும் நகராக வர்ணிக்கப்பட்ட காவிரிப்பூம்பட்டினம் என்ற சோழர்களின் தலைநகரம், மிகச்சிறந்த துறைமுகப் பட்டினமான இந்நகரம் இன்று பூம்புகாராக சுருங்கிவிட்டது. பெரும்பகுதிகளை கடல் தனக்குள் புதைத்துக் கொண்டது. இன்றைக்கு சிறிய ஊராக காட்சி அளிக்கிற கொற்கை அன்று பாண்டியப் பேரரசின் செல்வாக்கு மிக்க துறைமுகமாக திகழ்ந்தது. அரபுநாடுளிலிருந்து குதிரைகள் இங்கு
அதிக அளவில் வந்திறங்கின.
இங்கிருந்து அரபு மற்றும் கிரேக்க நாடுகளுக்கு முத்து, பவழம் மற்றும் மிளகு, பட்டை,லவங்கம் மெல்லிய பட்டு ஆகியவைகள் ஏற்றுமதி செய்யப்பட்டன.
இன்று கடல் விழுங்கியது போல
ஒரு எச்சமாக சிறு ஊராக அது காட்சி அளிக்கிறது. இந்தியாவில் சிந்துச்சமவெளி நாகரிகத்தில் மொகஞ்சதாரோ, ஹரப்பா போன்ற மிகச்சிறந்த நகரங்கள் பூமிக்குள் புதைந்துபோய் விட்டன. ஈராக்கில் மிகச்சிறந்த தொன்மையான நாகரீகமாக கருதப்பட்ட மெசபடோமியா நாகரீகத்தின் நகரங்கள் பூமிக்குள் புதைந்து காணாமல்
போய்விட்டன. இன்றைக்கு தமிழமண்ணின் தொன்மையையும், நாகரீகத்தையும், பறைசாற்றுகிற திராவிட கலாச்சாரங்களின் அடையாளமான பலநகரங்களின் புதைபொருள்கள், கீழடி போன்ற தொல்லியல் ஆய்வுகள் மூலம் வெளிவருகின்றன. பூமியில் வெப்பம் அதிகரித்து, பனிப்பாறைகள் உருகி, கடலில் கலந்து கடலின் மட்டங்கள் அதிகரிப்பதாகவும்,
அதனால் பல நகரங்கள் தண்ணீரில் மூழ்கி, பல பெரும் நகரங்கள் அழிந்துவிடும் என்ற எச்சரிக்கை தகவல்கள், பூமியின் பரப்பளவு ஏதோ ஒருவகையில் குறைந்து வருவதை அறிவிக்கிறது. ஒருகாலத்தில் இந்தியாவில் செல்வச் செழிப்புடன் காணப்பட்ட பலநகரங்கள் ஏதோ ஒருவகையில் காணாமல் போனது இன்றும் மர்மமாகவே உள்ளது. அவைகளை தேடும் குழுக்களும் தொடர்ந்து தேடிக்கொண்டு இருக்கின்றன. பீஹாரில் வைசாலி என்ற நகரம் மிகப்பெரிய குடியரசின் தலைநகரமாக இருந்துள்ளது.
இந்த நகரம் பௌத்த மதத்துடன் தொடர்புள்ளது. இந்த நகரம் மூன்று சுற்றுச்சுவர்களுடன் வாயில்கள், கண்காணிப்பு கோபுரங்கள் என இருந்த நகரை காணவில்லை.
பூமியில் புதையுண்ட ஆதிச்சநல்லூர்,
மற்றும் கிருட்டிணாபுரத்தில் நடைபெற்ற தொல்லியல் துறை ஆய்வுகளில்,இந்த நகரங்கள் சிறப்பான சுரங்கத் தொழில் நகரங்களாக இருந்துள்ளன. சுட்ட செங்கற்கள், உருக்கிய உலோக கசடுகள்,உலையில் இடப்பட்ட கரிக்கட்டைகள், பயன்படுத்தப்பட்ட தாது மூலப்பொருள்கள், ஆகியவற்றின் அடிப்படையில், இப்பகுதியில் கிடைத்த தங்கம்,இரும்பு, தாமிரம்,ஆகியவை உள்ளூரிலேயே உருக்கப் பட்டவையாகும். ஆதிச்சநல்லூர் ஒரு சிறந்த தொழில் நகரமாகவும் விளங்கியது. இங்கு மிக உயர்தரமான இரும்புஎஃகும், பலதரப்பட்ட உலோகப் பொருட்களும் தயார் செய்யப்பட்டன. வெண்கலத்தில் மிக உயர்தொழில் நுட்பத்துடன் கலை அழகுப் பொருட்கள் தயாரிக்கப்பட்டன. தேனிரும்பு,வார்ப்பு இரும்பு,எஃகு இரும்பு, ஆகியவற்றை தயாரித்துள்ளனர். இரும்புக் கருவிகள் மூலம் கப்பல் கட்டும் தொழிலும் சிறந்து விளங்கியது. இதுபோன்ற பல தொழில் வளம்மிக்க நகரங்கள் இயற்கையின் பேரழிவுகளால் பூமியில் புதையுண்டு போய் பூமியின் பரப்பளவில் குறைந்து போயின. பூமியில் கார்பன்டை ஆக்ஸைடு மற்றும் பல நச்சுவாயுக்களின் பயன்பாடுகளால் பூமி விரைந்து வெப்பமாகிறது.
இதனால் பனிப்பாறைகள் உருகி கடல்நீர் மட்டம் உயருகிறது. இமயமலை போன்ற பெருமலைகளே உருகி காணாமல் போகும்போது, நீருக்குள் நிலப்பரப்பு மூழ்கிப் போகிறது.
ஆழ்ந்து சிந்திக்கும்போது, சூற்றுச்சூழல் மாறுபாடுகளால் இந்த உலகத்தின் பரப்புகள் குறைவதோடு உலகின் நிலைத்தன்மையும் மாறுவதை புரியமுடிகிறது. இதுபோன்ற இயற்கையின் பேரழிவுகளால்,
பூமியின் எந்தப்பகுதி புதையுண்டு போனாலும், மொத்த அளவீடுகளில்,
பூமியின் ஓரங்களே குறைந்து வருவது
நமக்கான செய்தியாகும். பூமியில் பல்வேறு நிலப்பரப்புகளை உருவாக்குவதில் ஈடுபடும் செயல்முறை, அதாவது மலைகள், சமவெளிகள் மற்றும் பீடபூமிகள், எண்டோஜெனிக் மற்றும் எக்ஸோஜெனிக் ஆகும்.
பூகம்பங்கள் மற்றும் எரிமலை வெடிப்புகள் போன்ற எண்டோஜெனிக் சக்திகள் விரைவான மாற்றத்தையும் பேரழிவையும் கூட ஏற்படுத்துகின்றன.
எக்ஸோஜெனிக் சக்திகள் வானிலை, அரிப்பு மற்றும் படிவு ஆகியவற்றை உள்ளடக்கியது. வானிலை மற்றும் அரிப்பு என்பது இரண்டு செயல்முறைகள், அவை தொடர்ந்து ஒன்றிணைந்து செயல்படுகின்றன, பூமியின் மேற்பரப்பை தேய்த்து குறைக்கின்றன. அல்லாஹ்வே தீர்ப்பளிப்பான் என்ற திருக்குர்ஆனின் வசனம் போல, அவனது தீர்ப்பாகவே ஏராளமான நகரங்கள் இல்லாமல் போயின. திருக்குர்ஆன் வரிகள் மீண்டும் நம்மை ஆச்சரியப் படுத்துகின்றன.
திருக்குர்ஆன் ஒளியில் விஞ்ஞானம்..!
நாளை வேறொரு புதிய செய்தியை ஆராய்வோம்..!
‘கப்ளிசேட்’

