திருக்குர்ஆனின் ஒளியில் விஞ்ஞானம்..!
கருத்தரிப்பின் அதிசயங்கள்..!
அத்தியாயம் 13
“பிரசவலி அவரை ஒருபேரீச்சைமரத்தின் அடிபாகத்திற்கு கொண்டு சென்றது. “நான் இதற்கு முன்பே இறந்து அடியோடு மறக்கடிக்கப் பட்டவளாக இருந்திருக்கக் கூடாதா?”என்று அவர் கூறினார். (அல்குர்ஆன் 19:23)
அன்னை மர்யம் (அலை) அவர்கள் நபி ஈசா (அலை) அவர்களை பிரசவிக்கும் நேரத்தில் ஏற்பட்ட வலியால் வேதனையுற்றார்கள். பொதுவாக, மிகவும் கொண்டாட்டமாக துவங்குகிற திருமணங்களும், அதை ஒட்டிய சடங்கு, சம்பிரதாயங்களும், ஒரு பெண் கருத்தரித்து விட்டால் அந்தக் குடும்பங்களில் ஏற்படுகிற மகிழ்ச்சிகளும் அளவில்லாதது. ஒருகாலத்தில் ஏராளமான குழந்தைகளை பெற்றனர்.இப்போது காலம் மாறி இரண்டாகி அதுவும் ஒன்றாகிப்போனது. இன்றைய உணவுகளும், கலாச்சாரங்களும், புதிய மரபுவழி நோய்களும், குழந்தை கருத்தரித்தலை இல்லாமல் ஆக்குகிறது. பல லட்சக்கணக்கான விந்தணுக்களில் ஒரு அணு சினைமுட்டையுடன் இணைந்து கருத்தரித்தலை நிகழ்த்துகிறது. விந்தணுவும்,சினை முட்டையும் இணைந்தாலும், எல்லா நேரங்களிலும் கருத்தரித்தல் நிகழ்ந்து விடுவதில்லை. ஒரு ஆண் உறவுகொள்ளும் போது அவனிடமிருந்து 2-4 மி.லி விந்து நீர் வெளியாவதாகவும், அந்த விந்து நீரில் 100-300மில்லியன் விந்தணுக்கள் காணப்படுவதாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பெண்ணின் சினைப்பையில் இருந்து வெளியாகும் சினைமுட்டையின் உயிர்க் காலம் 24 மணி நேரமாகும். ஆணின் விந்தணு 24 -48 மணிநேரத்தில், ஒரு பெண்ணை கருத்தரிக்க செய்யும் சக்தியை இழந்து விடுகிறது.
இந்த நிகழ்வுகள் சரியாக நிகழ்ந்தாலே கருத்தரிக்கும் வாய்ப்பு இருப்பதாலேயே, திருக்குர்ஆனில் இறைவன், அவன் நினைத்தவர்களுக்கு குழந்தையை தருவதாகவும், சிலரை மலடாக ஆக்கிவிடும்தாகவும் அறிவிக்கிறான். (Perfect programer) ஒரு கருத்தரித்தலுக்கு பல லட்சங்கள் செலவு செய்து குழந்தை பிறக்க வைக்க புதிய தொழில் நுட்பங்களும், கருத்தரித்தல் நிலையங்களும் ஒவ்வொரு தெருவிற்கும் வந்துவிட்டது.
குழந்தை பெறுவதற்கு நிறைய செலவு செய்யவேண்டும் என்று ஆகிவிட்ட சூழலில் இயற்கையான பிரசவங்கள் குறைந்தும், “சிசேரியன்” என்ற பிரசவ முறை இன்று சர்வசாதாரணமாகி விட்டது.குழந்தை பெறுவதற்கு முன் ஏற்படுகிற பிரசவ வலியும்(Labour pain), குழந்தை பெறும்போது ஏற்படுகிற வலியும், பிரசவமும் ஒவ்வொரு பெண்ணிற்கும் “இரண்டாம் பிறப்பு” என்று கூறுவார்கள்.
இதனையே அன்னை மர்யம் (அலை) அவர்களும் அனுபவித்தார்கள். இறைவனின் ஆற்றலால் கருவுற்ற அவர்கள், தங்களின் பிரசவவலியால் பேரீச்சை மரத்தின்கீழ் மறைவாக ஒதுங்கியதையும், அன்னை மர்யம் (அலை) தான் முன்பே இறந்துபோயிருக்கக்கூடாதா? இந்த வலியை இல்லாத நிலையை அடைந்திருப்பேனே? என்றெல்லாம் வலியால் புலம்புவதை மேற்கண்ட திருக்குர்ஆன் வசனம் நமக்கு உணர்த்துகிறது.
பிரசவத்திற்கான எளிய முறையை கூறும் குர்ஆனின் வசனங்களை, இன்றைய நவீனகால பிரசவ முறைகளில் அமல்படுத்தி வெற்றி காண்கிறார்கள். திருக்குர்ஆன் கூறும் பிரசவ முறையும், அதன் பயன்களும் ஆச்சரியப் படுத்துகிறது.
திருக்குர்ஆன் ஒளியில் விஞ்ஞானம்..! திருக்குர்ஆன் கூறும் பிரசவ முறையை தொடர்ந்து ஆராய்வோம்..!
‘கப்ளிசேட்’

