திருக்குர்ஆனின் ஒளியில் விஞ்ஞானம்..!
மன அமைதியே மாமருந்து..!
அத்தியாயம் 12
“பின்னர் கவலைக்குப்பிறகு
உங்களுக்கு மன அமைதியை ஏற்படுத்த சிறுதூக்கத்தைத் தந்தான்.உங்களில் ஒரு பகுதியினருக்கு அது மேலிட்டது. இன்னொரு பகுதியினரை கவலை பிடித்துக்கொண்டதுஅவர்கள் அல்லாஹ்வைப் பற்றி உண்மைக்கு மாறான அறியாமை காலஎண்ணம் கொண்டனர்”!
…..வசனம் தொடர்கிறது…!
(அல்குர்ஆன் 3:154)
உலகில் மனிதனுக்கு வழங்கப்பட்டுள்ள
நன்மைகளும், தீமைகளும் ஒரு தேர்வின் வினாத்தாள் என்று கூறப்படுகிறது. உலகில் கெட்டவர்கள் சிறப்பாக வாழும்போது, நல்லவர்கள் சிரமப்படும் போது, இறைவன் ஒருவன் இருந்தால் இப்படி நடக்குமா? என்று சிலருக்கு குழப்பம் ஏற்படுகிறது. பொதுவாக சிலருக்கு குறைந்த நன்மைகளும், நிறைய தீமைகளும் இறைவனால் வழங்கப்பட்டதைப் போலவும், சிலருக்கு நிறைய நன்மைகளும், குறைந்த தீமைகளும் இறைவனால் வழங்கப்பட்டதை போலவும் தோன்றும். இந்த உலக வாழ்க்கையின் எதார்த்தங்களை புரிந்து கொண்டு இறைவன் வழங்கிய வாழ்க்கையை அனுபவித்து வாழத்துவங்கும் போது கவலையின் வாசல்கள் அடைபட்டு போகும்.நன்மைகளும், தீமைகளும் அவன் புறத்திலிருந்து வருகின்றது என்ற ஆழமான ஆன்மீகப் புரிதல் கவலையை இல்லாமலேயே ஆக்கிவிடும். திருக்குர்ஆன் கவலையை மறக்க ஒரு மன இயல் மந்திரத்தை ஒரு நிகழ்வின் மூலம் சொல்லித் தருகிறது.உஹதுப் போர்களத்தில் பெருமானாரின் (ஸல்….) ஒரு கட்டளையை முஸ்லீம்களின் ஒரு பிரிவினர் மீறிய போது, வெற்றி கைநழுவிப் போனதுடன், ஏராளமான உயிரிழப்புகளும், காயங்களும் ஏற்பட்டன. இதனால் முஸ்லீம்கள் மிகுந்த மனச்சோர்வுடன் தளர்ந்து போய் இருந்தபோது, அதைவிட பெருங்கவலையாக பெருமானார் (ஸல்..) கொல்லப்பட்டார்கள் என்ற வதந்தி பரவியது. தோல்வி என்ற ஒரு கவலையுடன் முஸ்லீம்கள் இருந்தபோது பெருமானார்(ஸல்..) கொல்லப்பட்டார்கள் என்ற பெருங்கவலை தோல்வி போன்ற சிறு கவலையை மறக்கச் செய்தது. பெருமானார் (ஸல்..) உயிரோடு இருக்கிறார்கள் என்ற தகவல் கிடைத்தவுடன் முஸ்லீம்கள் உத்வேகம் பெற்று மீண்டும் போரிட்டு வெற்றி பெற்றார்கள். இந்த நிகழ்வு சிறு கவலை இருந்தபோது, அதைவிட பெருங்கவலை ஒன்று கூறப்பட்டால், சிறிய கவலைகள் மறந்து போகும். பெரிய கவலையும் புனையப்பட்டது என்று அறிந்தால் கவலையே இல்லாமல் ஆகிவிடும் என்பது இன்றைய மனோதத்துவ மருத்துவம் கூறும் செய்தியாகும். இன்றைய மன அழுத்தங்களுக்கு (Mental depression) சிகிச்சை அளிக்கும் மனோதத்துவ (psychiatrist) மருத்துவர்கள், முதலில் கவுன்சிலிங்
என்னும் மனோதத்துவ உரையாடலை நடத்துகிறார்கள். அதிலிருந்து அவர்களின் மனச்சிதைவுக்கான
(Mental disorders) காரணங்களை அறிந்து கொண்டு, அவர்களை பாதிப்பிலிருந்து மீட்க புதிய கற்பனையான புனைவுத் தகவல்களை கூறி, அவர்களின் மனங்களில் மாற்றங்களை ஏற்படுத்த முயலுகின்றனர். இந்த முறை தோல்வி அடையும் போதுதான், அவர்களை தூங்க வைத்து மனஅமைதி ஏற்படுத்த மருத்துவர்கள் முயலுகின்றனர். இந்த நடைமுறை, சிறுகவலை தீர பெருங்கவலையை கூறுவது, பிறகு தூங்கவைத்தல் போன்ற இன்றைய நவீன மனஇயல் சிகிச்சை முறைகளை அன்றே விவரித்த திருக்குர்ஆனின் வரிகள் மன ஆரோக்கியத்தின் வழிகாட்டலாக இருக்கிறது.
திருக்குர்ஆன் ஒளியில் விஞ்ஞானம்…!
நாளை மற்றொரு
புதிய செய்தியை ஆராய்வோம்…!
கப்ளிசேட்


You must be logged in to post a comment.