திருக்குர்ஆனின் ஒளியில் விஞ்ஞானம்..!

திருக்குர்ஆனின் ஒளியில் விஞ்ஞானம்..!

மனம் என்னும் மாயக்கண்ணாடி.!

அத்தியாயம் 11

“உங்களுக்கு பின்னால் இத்தூதர் (முஹம்மது) உங்களை அழைத்துக்கொண்டு இருக்கும் போது எவரையும் திரும்பி பார்க்காமல் நீங்கள் (மலைமேல்) ஏறிச் சென்றதை எண்ணிப்பாருங்கள்.!உங்களுக்கு வெற்றி தவறியதற்காகவும், துன்பம் ஏற்பட்டதற்காகவும், நீங்கள் கவலைப்படாமலிருப்பதற்காக அதைவிடப் பெருங்கவலையை அவன் உங்களுக்கு பரிசளித்தான்.நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.” (அல்குர்ஆன் 3:153)

மனித மனம் ஒரு மாயக்கண்ணாடி. அதில் சிறிய கவலைகளையும், பெரியதாக பெருக்கிக் காட்டும். மனதில் வலிமை என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் மிக முக்கியமானது. மனதின் வலிமையை கூட்டுகிற செயல்களை மனிதன் முன்னெடுக்க வேண்டும். மனதின் வலிமையை கூட்டுவதில் ஆன்மீக பயிற்சி மிக முக்கியமானது. உடற்பயிற்சிகள் உடலை வலுவாக்குவது போல மனதின் பயிற்சிகள் மனதை வலுவாக்கும். குறிப்பாக நேர்மறை சிந்தனைகள் (Posstive thinking) மனதை வலுவாக்கும். நேர்மறை சிந்தனைகளின் போது சுரக்கிற ஹார்மோன்கள் மனதை நிம்மதி பெற வைக்கும். மனதில் ஒரு நிகழ்வின் கவலையை தேக்கிக் கொண்டு அதனை யோசித்துக் கொண்டே இருப்பவன் உடைந்து போகிறான். மன வலுவற்றவர்கள் தற்கொலை (Suicide)‌செய்து கொள்ளும் அளவிற்கு துவண்டு போய் விடுகின்றனர். இந்தியாவில் தற்கொலை விகிதம் 10.3% சதவீதமாக உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. கடந்த முப்பது ஆண்டுகளில் தற்கொலை 43 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்தியாவில் 71% தற்கொலைகள் 44 வயதிற்கு உட்பட்டவர்களால் நடைபெறுகின்றன. தற்கொலைகள் பதிவாவதைவிட அதிக அளவில் நடைபெறுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. பெண்கள், மாணவர்கள், தற்கொலைகள் அதிகம் நிகழ்கின்றன. மாணவர்களுக்கு தேர்வில் தோல்வி, கேட்டது கிடைக்காதது, காதல் தோல்வி, பெண்களுக்கும் காதல் தோல்வி, குடும்பச் சுமை, பொருளாதார போதாமை, தவறான உறவுகள் என பல காரணங்கள் கூறப்படுகின்றன. இஸ்லாம் தற்கொலையை கடுமையாக வெறுத்து ஒதுக்குகிறது. தற்கொலை செய்து கொண்டவர்கள் சொர்க்கம் செல்ல முடியாது என்று கடுமையாக எச்சரிக்கிறது. இறைவனின் கருணையாக, இறைவனின் அன்பளிப்பாக வழங்கப்பட்ட உயிரை இறைவனாகவே எடுத்துக்கொள்ளும் நேரம் வராதவரை, விலை மதிப்பற்ற உயிரை தானாகவே போக்கிக்கொள்ள எவருக்கும் உரிமையில்லை. உலகில் ஏராளமான அழுத்தங்களை மனித மனம் சந்திக்கிறது. மனதின் உள் அழுத்தங்களும், வெளி அழுத்தங்களும், மனிதனை நிலை குலைய வைத்து விடுகின்றன. இன்றைக்கு மனநோயாளிகளின் எண்ணிக்கைகள் நாள்தோறும் அதிகரித்து வருகின்றன.

இந்தியாவில் ஏறக்குறைய ஆறுகோடி மனநோயாளிகள் இருப்பதாக குடும்பநலத்துறை அமைச்சர் பாராளுமன்றத்தில் பதிவு செய்கிறார். நன்றாகப் படித்தவர்கள், பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையில் உள்ளவர்கள், சமூக அந்தஸ்த்தில் உயரிய அடுக்குகளில் இருப்பவர்கள் என பேதமில்லாமல் தற்கொலை செய்து கொள்ள என்ன காரணம்? மனம் ஒரு மாயக்கண்ணாடி. அது எல்லாவற்றையும் பெருக்கியே (அதிகப்படுத்தியே) காட்டும். இதற்கான தீர்வை இஸ்லாமிய நெறியும், திருக்குர்ஆனும் வழங்குகிறதா மேலுள்ள திருக்குர்ஆன் வசனத்தில் சிறு கவலையை போக்க பெருங்கவலையை பரிசளித்தான் என்பதின் ரகசியம் என்ன?

திருக்குர்ஆன் ஒளியில் விஞ்ஞானம்..! தொடர்ந்து ஆராய்வோம்..!

“கப்ளிசேட்”

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!