திருக்குர்ஆனின் ஒளியில் விஞ்ஞானம்..!
வலிகளை உணரும் தோல்கள்.!
அத்தியாயம் 10
“நமது வசனங்களை மறுப்போரை பின்னர் நரகில் கருகச்செய்வோம். அவர்களின் தோல்கள் கருகும் போதெல்லாம் அவர்கள் வேதனையை உணர்வதற்காக வேறு தோல்களை அவர்களுக்கு மாற்றுவோம். அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமிக்க வனாகவும் இருக்கிறான்.” (அல்குர்ஆன் 4:56)
தோல்களில்தான் வலிகளை உணரும் “வலியுணர்த்தி நரம்புகள்” (Pain receptors) உள்ளன. இதை சமீபத்திய 100 ஆண்டுகளுக்குள் விஞ்ஞானம் கூறுகிறது.தோல் கரிந்துவிட்டால் மூளை எந்த வேதனையையும் உணராது என்பது சமீபத்திய கண்டுபிடிப்பாகும். அதனால்தான் சிறிய அறுவைச் சிகிச்சைகளை தோல் மரத்துப்போகும் ஊசிகளை (Local anaesthesia) மட்டும் கொடுத்து செய்யப்படுகிறது.இந்த மயக்கமருந்து, செலுத்தப்படும் பகுதிகளை மட்டும் மரக்கவைத்துவிடும்.
நோயாளி தன் முழு உணர்வுடன் தனக்கு செய்யப்படும் அறுவை சிகிச்சையை பார்க்கவும்,உணரவும் முடியும். அதனால்தான் தீக்காயத்தால் தோல் முழுவதும் கருகிக் போனவர்கள் வேதனையால் துடிக்காமல் இருப்பதை காண்கிறோம். வேதனைகளை உணர்வதற்காக தோல்களை மாற்றுவோம் என்று 1447 ஆண்டுகளுக்கு முன்பு இறங்கிய திருக்குர்ஆனின் வசனம் நம்மை ஆச்சரியப் படுத்துகிறது. ஸிந்தானி என்ற அறிஞர், அரபுலகத்திற்கு வந்த தாய்லாந்தை சேர்ந்த தெகதத் தெஜாசென் என்ற ஆய்வாளரிடம், குர்ஆனின் மேலுள்ள வசனத்தை சுட்டிக்காட்டி அறிவியல் விளக்கம் கேட்டார்.1983 ஆம் ஆண்டு ரியாத் நகரில் ஸிந்தானி குழவினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மருத்துவ அறிவியல் மாநாட்டில், தெஜாசென் சமர்பித்த மருத்துவக் கட்டுரையில் வலியுணரும் தோல்கள் என்று குறிப்பிட்டு திருக்குர்ஆனின் வசனத்தை ஆச்சரியம் (Miracle) என்று விவரித்தார். அவர் திருக்குர்ஆனின் இந்த வசனத்தால் ஈர்க்கப்பட்டு உடனடியாக முஸ்லீமாக மாறினார். அவரின் மாணவர்கள் பலரும் அவரைப் பின்பற்றி முஸ்லீமாக மாறினார்கள். தாய்லாந்தில் ஏராளமான உரைகள் மூலம் இஸ்லாத்தை மக்களுக்கு புரிய வைத்தார். வலியுணர்த்திகள், சதை(muscles), மூட்டு(Joints), எலும்பு(Bone), உள்ளுறுப்பு(viscera) இவைகளில் இருப்பதைப்போல தோலிலும்(Skin) இருப்பதை மனிதன் அறிந்து கொண்டான். மேலும் தோலில் பல உணர்த்திகள் (Receptors) இருக்கின்றன. தொடுஉணர்த்தி, குளிர் உணர்த்தி,வெப்ப உணர்த்தி போன்றவைகளும் தோலில் உள்ளதால் அந்த உணர்வுகளையும் நம்மால் அறியமுடிகிறது. வெப்பத்தால் வலி உணரும் (Thermo receptors) தோலில் அதிக அளவில் உள்ளன. இதுபோன்ற பல அறிவியல் கண்டுபிடிப்புகள் திருக்குர்ஆனின் வசனங்களை உண்மைப் படுத்துகிறது.
திருக்குர்ஆன் ஒளியில் விஞ்ஞானம்.. நாளை மற்றொரு புதிய செய்தியை ஆராய்வோம்..!
“கப்ளிசேட்”


You must be logged in to post a comment.