இராமநாதபுரம், அக்.29- இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தின் இரு நுழைவாயில்களிலும் ஒவ்வொரு ஆண்டும் தற்காலிகமாக அமைக்கப்படும் பந்தலுக்கு பதிலாக பொதுமக்கள் நலன்கருதி தமிழ்நாடு அரசால் ரூ.1 கோடியே 55 லட்சத்து 34 ஆயிரம் மதிப்பில் 2 மண்டபம் அமைக்கப்படும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.
தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள் என்று வீர முழக்கமிட்ட சுதந்திரப் போராட்ட வீரர் பசும்பொன் தேவர். ராமநாதபுரம் மாவட்டம். பசும்பொன்னில் மிகுந்த வசதி படைத்த ஜமீன் குடும்பத்தில், 1908-ஆம் ஆண்டு அக். 30ல் பிறந்தார். பள்ளிப்படிப்பை மட்டுமே முடித்திருந்தாலும், அந்நிய நாட்டினரால் அடிமைப்பட்டிருந்த அடித்தள மக்களின் அன்றாட வாழ்க்கையே போராட்டமாக இருந்ததைக் கண்ணுற்ற தேவர், அம்மக்களின் வாழ்வு மேம்பட தன்னை அர்ப்பணித்தார். ஆங்கிலேய அரசை எதிர்த்துப் போராட, சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் தலைமையில் உருவாக்கப்பட்ட இந்திய தேசிய ராணுவத்திற்கு தமிழகத்தில் இருந்து பெரும் படையை திரட்டி அனுப்பிய பெருமை தேவரைச் சாரும். 1920-ஆம் ஆண்டு அப்போதைய மெட்ராஸ் மாகாணத்தில் ராமநாதபுரம், திருநெல்வேலி பகுதிகளில் அமலில் இருந்த மிகவும் கொடுமையான குற்றப்பரம்பரை சட்டத்திற்கு எதிராக முதன் முதலில் போராடி அச்சட்டத்தை அகற்றியவர் தேவர் ஆவார்.
1932 ஜூன் 22ல் அகில இந்திய பார்வர்டு கட்சியை நிறுவி நேதாஜி சுபாஷ் சந்திர போஸூடன் இணைந்து செயல்படல். 1952-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் அருப்புக்கோட்டை நாடாளுமன்ற தொகுதி, முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதியிலும் போட்டியிட்டு, இரண்டிலும் வெற்றி என பல்வேறு உச்சங்களைத் தொட்டவர் தேவர். “வங்கத்தில் நேதாஜி தமிழகத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்’ எனத் தலைவர் கலைஞரால் போற்றப்பட்டவர். இத்தகைய பல்வேறு சிறப்புகளை கொண்ட விடுதலை போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்த நாள் தமிழ்நாடு அரசால் அக்.30-ஆம் நாள் அரசு விழாவாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது. இவ்விழாவில், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பொதுமக்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி வருகின்றனர். நினைவிடம் முன் ஒரு சிறிய இடத்தில் குறுகிய நேரத்தில் அதிக கூட்டம் கூடுவதால் மக்கள் திறந்த வெளியில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. வெயில், மழையில் இருந்து அவர்களைப் பாதுகாக்கவும், கூட்ட நெரிசலை தடுக்கவும் ஒவ்வொரு ஆண்டும் விழாவின் போது நினைவிடம் முன் தற்காலிக கொட்டகை, பந்தல், தடுப்பு அமைக்கப்பட்டு வருகிறது. தேவர் ஜெயந்தி விழாவின்போது, கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டும், வெயில், மழையிலிருந்து பாதுகாக்க ஒரு நிரந்தர மண்டபம் அமைத்து தர வலியுறுத்தி அரசுக்கு மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதன்படி, பசும்பொன்னில் முத்துராமலிங்கதேவர் நினைவிடத்தின் இரு நுழைவாயில்களிலும் தற்காலிகமாக அமைக்கப்படும் பந்தலுக்கு பதிலாக மக்கள் நலன்கருதி ரூ.1 கோடியே 55 லட்சத்து 34 ஆயிரம் மதிப்பில் 2 மண்டபங்கள் தமிழ்நாடு அரசு சார்பில் அமைக்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









