ஜெயலலிதா மகள் என்ற ஒரே காரணத்திற்காக ஆளுங்கட்சியினரும், எதிர்க்கட்சியினரும், பிரச்சாரம் செய்யவிடாமல் தடுப்பதாக ‘ஜெயலட்சுமி’ குற்றச்சாட்டு..

ஜெயலலிதா மகள் என்ற ஒரே காரணத்திற்காக ஆளுங்கட்சியினரும், எதிர்க்கட்சியினரும் என்னைப் பிரச்சாரம் செய்யவிடாமல் தடுத்து வருவதாக தேனி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் ஜெயலட்சுமி குற்றம்சாட்டியுள்ளார்.

தேனி நாடாளுமன்றத் தொகுதியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மகள் என்று தன்னைக் கூறிக்கொள்ளும் பிரேமா என்கிற ஜெயலட்சுமி சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுகிறார்.

செய்தியாளர்களை சந்தித்துப் பேட்டி கொடுத்த ஜெயலட்சுமி பேசியதாவது:

தேர்தல் பிரச்சாரத்திற்கு அனுமதி பெற தேர்தல் ஆணையம் சார்பில் கொடுக்கப்பட்டுள்ள செயலி வேலை செய்யவில்லை. இது குறித்து நேரில் சென்று கேட்டாலும் எங்களுக்கு முறையான பதில் கொடுக்காமல் அலைக்கழிக்கிறார்கள்.

அதிமுக, திமுக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் வாக்காளர்களுக்கு 500 முதல் 1000 ரூபாய் கொடுக்க உள்ளதாக தகவல் வருகிறது. எங்களைப் போல் நேர்மையாக நின்று வெற்றி பெற வேண்டும் இல்லை என்றால் தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவிப்பேன்.

பிரச்சாரம் செய்வதற்கும் மக்களை சந்திப்பதற்கும் எனக்கு அனுமதி கொடுக்க மறுக்கின்றனர். மற்ற கட்சியினருக்கு பிரச்சாரம் செய்ய 30 முதல் 40 வாகனங்கள் அனுமதி கொடுக்கின்றனர். ஆனால் எங்களுக்கு மூன்று வாகனங்கள் கூட அனுமதி கொடுப்பதில்லை.

தேர்தல் அலுவலகத்தில் இருந்து 200 மீட்டர் தொலைவில் தான் கட்சி அலுவலகம் வைத்துள்ளேன் ஆனால் 100 மீட்டருக்குள் கட்சி அலுவலகம் வைத்திருப்பதாக கூறி அலுவலகத்திற்கு அனுமதி அளிக்க மறுக்கின்றனர். ஜெயலலிதா மகள் என்பதால் ஆளுங்கட்சியினரும் எதிர்க்கட்சியினரும் என்னை பிரச்சாரம் செய்ய விடாமல் தடுத்து வருகின்றனர்.

நான் செல்லும் இடங்களில் எல்லாம் பொதுமக்கள் என்னிடத்தில் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஆயிரம் ரூபாய் கொடுக்கின்றனர். நீங்கள் எவ்வளவு பணம் கொடுக்கப் போகிறீர்கள் என்று என்னிடம் கேட்கிறார்கள்.

வாக்குக்கு பணம் கொடுப்பதை கண்காணிக்க எங்கள் தரப்பில் 100 பேர் கேமராவுடன் கண்காணித்து வருகிறோம். அதையும் மீறி பணம் கொடுப்பவர்கள் மீது தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்து தேர்தலை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுப்போம் என்று கூறியுள்ளார்..

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!