நிலக்கோட்டையில் மீண்டும் கொள்ளையர்கள் அட்டகாசம்! வீட்டின் பூட்டை உடைத்து பல லட்சம் கொள்ளை! அடுத்தடுத்த வீடுகளில் கொள்ளை முயற்சி! கலக்கத்தில்பொதுமக்கள்..?
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட சந்தன மாரியம்மன் கோவில் தெருவில் வசிப்பவர் சுந்தரம் இவர் டீக்கடையில் பணி செய்து வருகிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு தனது நிலத்தை விற்பனை செய்துள்ளார். அதன் மூலம் வந்த பணத்தை தனது வீட்டில் வைத்துள்ளார்.
கடந்த சில நாட்களாக சுந்தரத்துக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் கடந்த இரு தினங்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு திண்டுக்கல்லில் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று நள்ளிரவு ஆறுக்கும் மேற்பட்ட மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து வீட்டில் இருந்த 13 லட்சம் பணம் மற்றும் நகையை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
அதேபோல் அவரது வீட்டின் அருகில் உள்ள பகவதி ராஜன் மற்றும் பெரிய காளியம்மன் கோவில் தெரு, கோலாட்ட அம்மன் கோயில் தெரு உள்ளிட்ட பகுதிகளிலும் ஆறுக்கும் மேற்பட்ட வீடுகளின் பூட்டை உடைத்து திருட முயற்சி செய்துள்ளனர்.
நள்ளிரவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் கோலாட்ட அம்மன் கோவில் தெரு வழியாக வந்துள்ளனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக இரண்டு பேர் நின்றதை கண்டு காவல்துறையினர் கூப்பிட்டு விசாரித்துள்ளனர்.
அது சமயம் போலீசார் மீது ஐந்துக்கும் மேற்பட்டோர் திடீரென கற்களை வீசி அங்கிருந்து தப்பியுள்ளனர்.
போலீசார் மற்றும் அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும் திருடர்களைப் பிடிக்க ஓடி உள்ளனர். ஆனால் திருடர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு நிலக்கோட்டை காவல் துறை துணை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தலைமையில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். திண்டுக்கல்லில் இருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டு விசாரணையும் நடைபெற்று வருகிறது.
சில தினங்களாக இது போன்ற சம்பவங்கள் நிலக்கோட்டை பகுதிகளில் நடைபெறாமல் இருந்தது.
தற்போது மீண்டும் வீடுகளில் திருடு போகும் சம்பவங்கள் நிலக்கோட்டை பொதுமக்கள் மத்தியில் மிகவும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இரவு நேரங்களில் போலீசார் அதிகமாக ரோந்து பணிகளில் ஈடுபட்டு இது போன்ற சம்பவங்களை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நிலக்கோட்டை பகுதியில் இந்ந கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
You must be logged in to post a comment.