ஜனநாயகத்தையும், கூட்டாட்சி தத்துவத்தையும் குழிதோண்டி புதைக்கும் திட்டம் ஒரே நாடு ஒரே தேர்தல்! தஞ்சையில் நடைபெற்ற மக்கள் அதிகாரம் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய அரசுக்கு கண்டனம்
நடைபெற்று முடித்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த மசோதா குறித்து எதிர்க்கட்சிகளின் பல்வேறு கண்டனங்களை ஒன்றிய பாஜக அரசு சந்தித்துள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி,ஒன்றிய அரசை கண்டித்து தஞ்சாவூர் பனகல் கட்டிடம் அருகில் இன்று மாலை 5:30 மணிக்கு மக்கள் அதிகாரம் சார்பில் மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் மக்கள் அதிகாரம் மாவட்ட செயலாளர் தேவா தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் அருள் முன்னிலை வகித்தார். மக்கள் அதிகாரத்தின் மாநில பொருளாளர் காளியப்பன் ஆர்ப்பாட்டத்தினை துவக்கி வைத்து பேசியதாவது, பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து பாஜகவும் மோடியும் பேசி வந்த ஒரே நாடு ஒரே தேர்தல் என்கிற திட்டத்தை சட்டம் ஆக்கி அமல்படுத்துவதற்கான முயற்சிகளை தொடங்கி விட்டனர். ஒரே நாடு ஒரே மொழி, ஒரே பண்பாடு ஒரே வரி என்று எல்லாவற்றையும் மைய அதிகாரத்தின் கீழ் கொண்டு வருவதற்கான பாசிச முயற்சிகளின் கடைசி முன்னெடுப்பு ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது. இந்தியாவில் தேர்தலுக்கு ஏராளமாக செலவழிக்க வேண்டி இருக்கிறது, எப்போதும் நாடு முழுவதும் எங்கேனும் ஒரு இடத்தில் தேர்தல் நடந்து கொண்டே இருக்கிறது; இதன் விளைவாக அரசு நிர்வாகத்தை தொடர்ச்சியாக நடத்த முடியவில்லை, தேர்தல்வேண்டும் விதிமுறைகளின் காரணமாக மக்கள் நலத் திட்டங்களை நடைமுறைப்படுத்த முடியவில்லை என சொத்தையான காரணங்களைச் சொல்லி ஜனநாயகத்தையும் கூட்டாட்சி கோட்பாட்டையும் ஒழித்துக் கட்டி ஆர் எஸ் எஸ் கனவு காண்கின்ற இந்துராஷ்டிரத்தை அதாவது இந்து மத வெறியர்களின் பார்ப்பன சனாதன சர்வாதிகாரத்தை நிறுவுவதற்கும்,தேர்தல் முறையே முற்றாக ஒழித்து அதிபர் ஆட்சி முறையைக் கொண்டு வருவதற்கும் போடப்பட்டிருக்கும் மக்கள் விரோதத் திட்டம் தான் ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது. அதுமட்டுமின்றி மாநிலங்களுக்கு இருக்கும் சில உரிமைகள்,கார்ப்பரேட் முதலாளிகள் இயற்கை வளங்களைச் சூறையாடுவதற்கு தடையாக இருக்கின்றன. அதனை நீக்கி அதானி, அம்பானி போன்ற குஜராத் பார்ப்பன பணியா முதலாளிகள் தேசவளங்களைத் தடை யின்றிக் கொள்ளை அடிக்கவும் இவர்களுக்கு ஒரே நாடு என்ற ஏற்பாடு தேவைப்படுகிறது. ஒரே நாடு என்பது இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரான ஒரு கோட்பாடு. இந்தியா என்பது ஒரு நாடு அல்ல இது மாநிலங்களின் ஒன்றியமே. தவிர இந்தியா என்பதும் ஒரு தேசமாக இருந்ததில்லை. எனவே மொழி வழி மாநிலங்களின் உரிமைகளையும், பண்பாட்டையும், ஜனநாயகத்தையும் ஒழித்துக் கட்ட முயற்சிக்கும் ஆர்எஸ்எஸ் பாஜக மோடி கும்பலின் இந்த சதித்திட்டத்தை அனைவரும் இணைந்து முறியடிக்க வேண்டும் என்று காளியப்பன் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில இணைச் செயலாளர் ராவணன், இடதுசாரிகள் பொதுமேடை ஒருங்கிணைப்பாளர் துரை.மதிவாணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் வெ.சேவையா, தமிழ் தேச மக்கள் முன்னணி நிர்வாகி பொறியாளர் துரை.அசோகன், மக்கள் அதிகாரம் திருவாரூர் மாவட்ட செயலாளர் சண்முகசுந்தரம், காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு நிர்வாகி அருண் சுபாஷ், ஆதித்தமிழர் பேரவை இளைஞர் பேரவை நிர்வாகி பிரேம் நிவாஸ்,புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி ஒருங்கிணைப் பாளர்கள் சாமிநாதன், லட்சுமணன், மாவட்ட செயலாளர் தாமஸ், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
You must be logged in to post a comment.