தஞ்சை மாநகரில் காமேல் சபை குருக்களால் 1987ஆம் ஆண்டு முதல் அற்புத குழந்தை இயேசுவின் சிறப்பு பக்தி ஆரம்பிக்கப்பட்டு. அதன்மூலம் அனைத்துத் தரப்பினரும் குழந்தை இயேசுவின் அற்புதங்களையும், அதிசயங்களையும் பெற்று வருகின்றனர்.
மகிமைநிறைந்த அற்புத குழந்தை இயேசுவின் ஆண்டு பெருவிழா கடந்த வியாழன் அன்று திருக்கொடி யேற்றத்துடன் ஆரம்பிக்கப்பட்டு 8 நாட்களாக ஒவ்வொரு நாளும் மாலை திருஜெபமாலை, சிறப்புத் திருப்பலி, குணமளிக்கும் ஜெபக்கொண்டாட்டம் என சிறப்பு வழிபாடுகள் மற்றும் பல்வேறு நிறுவனங்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
இறுதி நவநாளை சிறப்பிக்கும் பொருட்டு அற்புத குழந்தை இயேசுவின் திருவிழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. நாள் முழுவதும் சிறப்புத் திருப்பலிகளும், வழிபாடுகளும் நடைபெற்றன.
சிறப்பு அழைப்பாளராக கும்பகோணம் மறைமாவட்டம் மேனாள் ஆயர் மேதகு F. அந்தோணிசாமி அவர்கள் கலந்துகொண்டு திருவிழா சிறப்பு தெய்விக கூட்டுத்திருப்பலி நிறைவேற்றி, அனைவருக்கும் அற்புத குழந்தை இயேசுவின் ஆசீரைப் பெற்றுத் தந்தார்.
விழாவின் சிறப்பு அம்சமாக மாபெரும் இறையருளோடும். பல்வேறு புனிதர்களின் திருவுருவம் தாங்கிய ஆசீரோடும் அமைக்கப்பட்ட அற்புத குழந்தை இயேசுவின் மகிமைத்தேர் புனிதம் செய்யப்பட்டு அலைகடல் போன்ற பக்தர்கள் கூட்டத்தின் நடுவே அலங்கார மின்விளக்குகள் ஜொலிக்கச் சென்றது.
திருவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்காக சிறப்பு அபிஷேக வழிபாடு, பல்வேறுபட்ட நோய்களுக்கும், உடலில் ஏற்படும் பிரச்சினைகளுக்கும் குணமளிக்கும் புனித எண்ணெய் பூகம் சடங்கு, மனம் அமைதிபெற தேவையான தீர்த்த சடங்கு, திருமணவரம், குழந்தைவரம் வேண்டுவோருக்கு சிறப்பு வழிபாடுகள், உடல்நலமற்ற குழந்தைகளுக்கு ஆசீர் தொட்டிலில் சிறப்பு ஜெபம் ஆகியவை நடைபெற்றன. இறுதியாக திவ்ய நற்கருணை ஆசீர், திருக்கொடியிறக்கத்துடன் விழா நிகழ்ச்சிகள் நிறைவுற்றன அனைத்து மதங்களையும் சார்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருவிழாவில் கலந்துகொண்டு அற்புத குழந்தை இயேசுவின் ஆசீரைப் பெற்றுச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. திருவிழாவை முன்னிட்டு அனைவருக்கும் சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. வானவேடிக்கை நடைபெற்றது.
அற்புத குழந்தை இயேசு திருத்தலத்தின் அதிபர் அருட்தந்தை சுரெஷ்குமார் அனைத்து நிகழ்வுகளுக்கும் தலைமை தாங்கி, விழாவிற்கு உதவி செய்த, கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். மேலும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அதிபர் தந்தையின் தலைமையில் இல்லத் தந்தையர்கள், கார்மேல் சபை குருக்கள், கார்மேல் மூன்றாம் சபையினர், மூன்று மணி ஜெபக்குழுவினர், பவுர்ணமி ஜெபக்குழுவினர், திருத்தல தன்னார்வ தொண்டர்கள், மதர் தெரசா பவுண்டேசன் குழுவினர், திருத்தல அலுவலர்கள் மற்றும் பல்வேறு அமைப்பை சார்ந்த தன்னார்வலர்கள் ஆகியோர் இணைந்து செய்திருந்தனர்.
You must be logged in to post a comment.