மகள் படித்து பட்டம் பெற வீட்டில் இருக்கும் கடைசி பொருளான மறைந்த கணவர் நினைவாக வைத்திருந்த தாலியை விற்று கல்விக்கட்டணம் செலுத்த முயன்ற ஏழைத்தாய் . அடகு கடைக்காரர் மூலம் கேள்விப்பட்டு கல்லூரி கல்விக்கட்டணம் உள்ளிட்டவற்றை முழுமையாக செலுத்தி தாயின் தாலியை மீட்ட சமூக ஆர்வலர் .
நாகப்பட்டிணம் மாவட்டம், சிக்கல் கிரமத்தை சேர்ந்தவர் முருகதாஸ் – பெரியநாயகி தம்பதிகள் . இவர்களுக்கு ரோகிணி,துர்காதேவி என்ற இரு மகள்கள் உள்ளனர் .
முருகதாஸ் அன்றாடம் கூலி வேலைக்கு சென்று சொற்ப வருமானத்தில் குடும்பத்தை நடத்தி வந்திருக்கிறார் . திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 2022ம் ஆண்டு மரணமடைந்த நிலையில் செய்வதறியாமல் திகைத்து போன பெரியநாயகி ஒற்றை பெற்றோராக தனது இரு மகள்களையும் வறுமையுடன் போராடி வளர்த்து ஆளாக்கி வந்துள்ளார் .
வீடுகளில் சமைப்பது , இட்லி மாவு அரைத்து விற்பது போன்ற சிறு சிறு வேலைகளை செய்து அதிலிருந்து வரும் வருமானத்தில் தனது மூத்த மகளான ரோகிணியை தனியார் கல்லூரியில் பிஎஸ்சி ஐடி படிக்க வைத்திருக்கிறார் .
குடும்ப சூழ்நிலையை பார்த்த இரண்டாவது மகள் துர்காதேவி பள்ளிப்படிப்புடன் தனது கல்வியை நிறுத்திவிட்டு கிடைத்த வேலைக்கு சென்று குடும்ப வருமானத்துக்கு தன்னால் ஆன சிறு உதவியை செய்துவர அக்கம்பக்கத்தினர் , தெரிந்தவர்கள் , உறவினர்கள் என எல்லோரிடமும் கடன் வாங்கியும் வீட்டிலிருக்கும் பண்ட பாத்திரங்களை விற்றும் மகளுக்கு கல்லூரி கல்விக்கட்டணம் செலுத்தி இறுதியாண்டு வரை படிக்க வைத்த நிலையில் இறுதி பருவத்துக்கு கல்வி கட்டணம் , தேர்வு கட்டணம் , இதர கட்டணம் என பெருந்தொகை தேவைப்பட்டுள்ளது . எங்கும் கடன் கேட்க முடியாமல் தவித்த நிலையில் தனது கணவரின் நினைவாக வைத்திருந்த கடைசி நகையான தாலியை விற்று அதிலிருந்து வரும் தொகையை கொண்டு கல்லூரிக்கு கட்டணம் செலுத்த முடிவு செய்து அடகு கடைக்கு சென்றுள்ளார் .
பழைய நகை என்பதால் கல்லூரிக்கட்டணம் செலுத்தும் அளவுக்கு விலை போகாது என்பதை அறிந்த பெரியநாயகி செய்வதறியாது திகைத்துள்ளார் . இக்கட்டான சூழ்நிலையை புரிந்துகொண்ட அடகுகடைக்காரர் தஞ்சையில் உள்ள ஜோதி அறக்கட்டளை செயலர் பிரபு ராஜ்குமார் க்கு இது பற்றி தெரிவித்த நிலையில் உடனடியாக மாணவி ரோகினியின் கல்விக்கட்டணம் உள்ளிட்ட கல்லூரிக்கு உண்டான கட்டணத்தை முழுமையாக செலுத்தி மாணவியின் இறுதியாண்டு கல்வி தடைபடாமல் இருப்பதை உறுதி செய்துகொண்டதுடன் அடகு கடைக்கு விற்பனைக்கு செல்ல இருந்த மாணவியின் தாய் பெரியநாயகியின் தாலியையும் மீட்டு கொடுத்துள்ளார் .
எங்கே தனது கல்வியானது கல்லூரிக்கு செலுத்த வேண்டிய கட்டண பாக்கியால் நின்று பட்டம் கிடைக்கமல் போய் விடுமோ என்ற மாணவியின் ஏக்கத்தையும் கணவர் நினைவாக இருக்கும் ஒரே ஒரு பொருளான தாலியும் நமது கைவிட்டு போய்விடுமோ என்ற தாயின் அச்சத்தையும் போக்கிய ஜோதி அறக்கட்டளை நிர்வாகத்தின் செயல் சிக்கல் பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
You must be logged in to post a comment.