தென் மாவட்டங்களில் இன்று (02.12.2024) பலத்த காற்று வீசும் எனவும், செங்கோட்டையில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தென்காசி வெதர்மேன் ராஜா தெரிவித்துள்ளார். இது பற்றிய அவரது வானிலை அறிவிப்பில், புயல் சின்னமானது அரபிக்கடல் ஈரப்பதத்தை இழுப்பதால் கேரளா மற்றும் தமிழக மலை மாவட்டங்களில் மேற்கு திசை காற்று வலுவடைந்துள்ளது. வழக்கமாக தென்மேற்கு பருவமழை தீவிரமாக உள்ள காலத்தில் காற்று வீசுவது போல இன்று தென் மாவட்டங்களில் பலத்த காற்று வீசும்.
குறிப்பாக கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் மணிக்கு 55 கிமீ வேகத்தில் இன்று சூறைக்காற்று வீசும். தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை சாத்தான் குளம், திருச்செந்தூர், குலசேகரன் பட்டினம், கயத்தாறு, கடம்பூர் ஆகிய இடங்களிலும் வலுவான மேற்கு திசைகாற்று வீசும். நெல்லை மாவட்டத்தில் ராதாபுரம், திசையன்விளை, உவரி, கூடன்குளம் மானூர் ஆகிய இடங்களிலும் பலத்த காற்று வீசும்.
கேரளாவில் இருந்து வீசும் பலத்த காற்றானது, செங்கோட்டை கணவாய் வழியாக தென்காசிக்குள் நுழைந்து சுரண்டை, ஊத்துமலை, மானூர் கயத்தாறு, கழுகுமலை, பசுவந்தனை, ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம் வரை காற்றின் வேகம் மிக அதிகமாக இருக்கும்.
மேலும், செங்கோட்டையில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. இன்று (02.12.2024) தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர் ஆகிய மூன்று தாலுகாவில் விட்டு விட்டு மழை தொடரும். குற்றால அருவிகளும் களைகட்டும். மாஞ்சோலை கோதையாறு மலைப்பகுதிகளிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. இவ்வாறு வெதர்மேன் ராஜா தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.