தென்காசியில் மின்வாரிய களப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு வகுப்பு மற்றும் தலைக்கவசம் வழங்கல்..

தென்காசி மற்றும் கடையநல்லூர் கோட்டத்தில், பணிபுரியும் மின்வாரிய களப்பணியாளர்களுக்கான பாதுகாப்பு வகுப்பு மற்றும் தலைக்கவசம் வழங்கும் நிகழ்ச்சி தென்காசி தனியார் பள்ளியில் வைத்து நடைபெற்றது. திருநெல்வேலி மண்டல தலைமை பொறியாளர், டேவிட்ஜெபசிங், பாதுகாப்பு வகுப்பிற்கு தலைமை தாங்கி பேசுகையில், விநியோகத்தில் பணிகள் மேற்கொள்ளும் போதும் இயற்கை இடர்பாடுகளான சூறைக்காற்று, இடி, மின்னல், தீடிர் மழை, நேரங்களில் பாதுகாப்புடன் பணிபுரிவதற்கான பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து விளக்கிக் கூறினார். மேலும் விநியோகத்தில் பணி புரியும் பொழுது பாதுகாப்புக்காக உபயோகப்படுத்த வேண்டிய நில இணைப்பு சாதனம், (EARTH ROD) இடுப்புகயிறு,(BELTROPE) கையுறை, (GLOVES) ஆகிய பாதுகாப்பு சாதனங்களின் செயல்பாடுகள்‌ மற்றும் தன்மைகள் பற்றி விளக்கி கூறினார்.

இருசக்கர வாகனத்தில் செல்லும் பொழுது தலைக்கவசம் அணிந்து பயணிக்கவும், பணிகளை மேற்கொள்ளும் முன் மின்னோட்டம் நிறுத்தப்பட்டதை உறுதி செய்த பின்பு பணிகள் மேற்கொள்ளவும், ஏற்கனவே நடைபெற்ற மின் விபத்துக்கள் பற்றி ஆராய்ந்து வரும் காலங்களில் எவ்வாறு பணிபுரிந்தால் மின் விபத்துகளில் இருந்து தவிர்த்துக் கொள்ளலாம் என்பதை பற்றி முழுமையாக விளக்கிக் கூறி களப்பணிகள் மேற்கொள்ளும் கம்பியாளர் மற்றும் களப்பணி உதவியாளர்களின் உயிர் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக மின்னழுத்த உணரி தலைக்கவசம் வழங்கி அனைவரும் பாதுகாப்புடன் பணிபுரியுமாறு கேட்டுக்கொண்டார்.

இந்த பாதுகாப்பு வகுப்பில் முன்னிலை வகித்து பேசிய திருநெல்வேலி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் செல்வராஜ், மின்கம்பங்கள், மின் மாற்றிகள் மீது ஏறி நின்று பழுது நீக்கத்தின் போது எக்காரணம் கொண்டும் கைபேசி (Cell phone) எடுத்துப் பேசக்கூடாது. அப்படி பேசினால் அதனால் ஏற்படும் சிந்தனை சிதறல் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். விநியோகத்தில் பணி புரியும் போது பாதுகாப்பு செயலி (TNEB SAFETY APP) மூலம் உறுதித் தன்மை செய்யப்பட்ட பின்பு பணிகள் மேற்கொள்வதற்கு பாதுகாப்பு செயலியின் எளிய வழிகாட்டுதல் முறைகள் பற்றியும், சீரான மின் விநியோகம் வழங்கும் பணிகள் பற்றியும் விளக்கி கூறினார். 

இந்த பாதுகாப்பு வகுப்பில் மண்டல பாதுகாப்பு உதவி செயற்பொறியாளர் செந்தில் ஆறுமுகம், தென்காசி மற்றும் கடையநல்லூர் கோட்டத்தை சேர்ந்த உதவி செயற்பொறியாளர்கள், தென்காசி டவுண், தென்காசி கிராமப்புறம் ,செங்கோட்டை நகர்ப்புறம், செங்கோட்டை கிராமப்புறம் ,ஆய்க்குடி, பாவூர்சத்திரம், வீரகேரளம்புதூர், ஆவுடையானூர், சுந்தரபாண்டியபுரம், வடகரை, கடையநல்லூர் டவுண், கடையநல்லூர் தெற்கு, கடையநல்லூர் வடக்கு, கடையநல்லூர் கிராமபுறம், சேர்ந்தமரம், நயினாரகரம், மூளிக்குளம், வீரசிகாமணி, வாசுதேவநல்லூர், ராயகிரி, சிவகிரி கிராமப்புறம் ,சிவகிரி நகர்ப்புறம் மற்றும் கட்டுமானம், உப மின் நிலையங்களை சேர்ந்த உதவி மின் பொறியாளர்கள், ஆக்க முகவர்கள், மின்பாதை ஆய்வாளர்கள், கம்பியாளர்கள், களப்பணி உதவியாளர்கள் உட்பட அனைவரும் கலந்து கொண்டு பாதுகாப்புடன் பணிபுரிவோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பாதுகாப்பு வகுப்பிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தென்காசி மற்றும் கடையநல்லூர் கோட்ட செயற்பொறியாளர்கள் திருமலை குமாரசாமி மற்றும் கற்பகவிநாயகம் ஆகியோர் செய்திருந்தனர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!