தென்காசி மாவட்டத்தில் செய்தியாளர்களுடன் பயணம் செய்து தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற இயக்கத்தின் மூலம் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் துரை. இரவிச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க செய்தியாளர்கள் பயணம் மேற்கொள்ளப்பட்டது. தமிழ்நாடு அரசு, ஒரே தொழில் செய்யக்கூடிய மகளிர் குழு உறுப்பினர்களை ஒருங்கிணைத்து குறுந்தொழில் தொகுப்புகளாக உருவாக்கி மேம்படுத்தப்படும் என்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை, சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சரால் சட்டசபையில் அறிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, ஆலங்குளம் வட்டாரம் வாடியூர் ஊராட்சியில் தையல் தொழிலில் ஆர்வமுள்ள பெண்களை ஒருங்கிணைத்து “அக்னிசிறகுகள்” ஆயத்த ஆடைகள் தொழில் தொகுப்பு உருவாக்கப்பட்டது. இதில் தற்போது 30 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களது பிரதான தொழிலாக மஞ்சள் பை தைத்து விற்பனை செய்து வருகின்றனர். அனைத்து உறுப்பினர்களுக்கும் கூட்டமைப்பு மூலம் இயந்திரங்கள் கொள்முதல் செய்வதற்கு தலா ரூ.40,000 கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும் தொழில் தொகுப்பை வலுப்படுத்த நபார்டு வங்கி உதவியுடன் சணல்பை தைப்பதற்கான பிரத்யேகப் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. வீடுகளில் பீடி சுற்றி வந்த பெண்களுக்கு மாற்று தொழிலாக தையல் தொழிலை கற்று கொண்டு மாதம் ரூ.6,000 வரை சம்பாதித்து வருகின்றனர்.






மேலும், ஆலங்குளம் வட்டாரம் அய்யனார்குளம் ஊராட்சியில் தமிழ்நாடு அரசின் சமுதாய திறன் பள்ளி பயிற்சி திட்டத்தின் கீழ் 20 நபர்களுக்கு 4 சக்கர வாகனம் ஓட்டுதல் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதை பார்வையிடப்பட்டது. இதில் 8 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பயிற்சி முடிவில் அனைவருக்கும் ஓட்டுநர் உரிமம் பெற்று வழங்குவதுடன் பல்வேறு அரசு திட்டங்களின் மூலம் கடனுதவி வழங்கி சுய தொழில் புரிவதற்கான வழிவகை செய்யப்படும். தொடர்ந்து, நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் சுரண்டை சித்தி விநாயகர் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் கடந்த 7 வருடங்களாக 13 பெண்கள் இணைந்து பெட்டிக்கடையை நடத்தி வருகிறார்கள். அந்த கடைக்கு தற்போது வரை 4 முறை வங்கி கடன் பெறப்பட்டு முறையாக கடன் தொகைகளை திருப்பி செலுத்தி உள்ளனர். குழு உறுப்பினர்களில் 7 நபர்கள் சிறு தொழில் செய்து வருகிறார்கள். 2 உறுப்பினர்களின் தொழில்கள் பார்வையிடப்பட்டது. ஈஸ்வரி என்பவர் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். ஆண்கள் மட்டுமே செய்து வரும் வடிவமைத்தல் மற்றும் நெகிழ்வு அச்சிடுதல் (Desinging and Flex Printing ) தொழிலினை சசிகலா என்பவர் செய்து வருகிறார். குழுவின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளது.
தென்காசி வட்டாரம், குத்துக்கல்வலசை ஊராட்சியில், அழகுக் கலை பயிற்சி வழங்கும் சமுதாய திறன் வளர்ப்புப் பள்ளி பார்வையிடப்பட்டு பயனாளிகளுடன் கலந்துரையாடப்பட்டது. குத்துக்கல்வலசை மையத்தில் ஆண்டு செயல் திட்டம் (AAP) வட்டாரங்களான சங்கரன்கோவில், தென்காசி, வாசுதேவநல்லூர், ஆலங்குளம், மேலநீலிதநல்லூர் மற்றும் கடையநல்லூர் சுய உதவிக் குழு உற்பத்திப் பொருட்கள் பார்வையிடப்பட்டது. வட்டார வணிகவள மையத்தில் தொழில் கடன் பெற்று தொழில் வளர்ச்சி பெற்ற தொழில் முனைவோருடன் கலந்துரையாடப்பட்டது. தென்காசி வட்டார வணிக வள மைய பதிவேடுகள் பார்வையிட்டு செயல்பாடுகள் ஆய்வு செய்யப்பட்டு, குத்துக்கல்வலசை ஊராட்சி இமயம் மகளிர் குழுவை சார்ந்த 14 தொழில் முனைவோருக்கும் 1 நபருக்கு ரூ.50,000 வீதம் மொத்தம் ரூ.7.00 இலட்சம் தொழில் கடன் வழங்கப்பட்டுள்ளது.
கணக்கப்பிள்ளை வலசை ஊராட்சியில், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பின் மதி மகள் சிறிய அளவிலான தொழில் தொகுப்பு 1. பாத்திரம் வாடகைக்கு விடுதல். 2. மதி மகள் ஆயத்த ஆடையகம் ஆகிய வளர்ச்சி பணிகளை செய்தியாளர்களுடன் இணைந்து பார்வையிட்டு சுயஉதவி குழுவினர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் துரை. இரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். இந்த ஆய்வின் போது, திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) மதி இந்திரா பிரியதர்ஷினி, உதவி திட்ட இயக்குநர் சிவக்குமார், மாரிஸ்வரன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ரா. ராமசுப்பிரமணியன் மற்றும் அனைத்து பத்திரிகையாளர்கள், ஒளிப்பதிவாளர்கள், புகைப்படக்காரர்கள், துறை சார்ந்த அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









