தென்காசி மாவட்டத்தில் வெளி மாநில கனிம வள லாரிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருப்பதாகவும், இதற்கு விரைவில் முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் எனவும் இயற்கை வள பாதுகாப்பு சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து இயற்கை வள பாதுகாப்பு சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்காசி மாவட்டத்தில் வெளி மாநில கனிம வள லாரிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. கனிம வள லாரிகளில் கொள்ளளவை அதிகரித்து ஓவர் லோடு குவித்து கொண்டு அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றி செல்கின்றனர். இதனால் புதிதாக போடப்பட்டுள்ள தார் சாலைகள் வெகு விரைவில் சேதம் அடைகின்றன. ஆங்காங்கே பெரிய நகரங்களுக்கு கொண்டு செல்லும் குடிநீர் அந்த கனரக வாகனங்களால் உடைப்பு ஏற்பட்டு இந்த கோடை காலத்தில் தண்ணீர் வீண் விரயம் ஆவது மட்டுமல்லாமல் குடிநீர் மாசுபடுகின்றது.
மேலும், கனிம வளங்களில் இருந்து கிடைக்கின்ற வருவாயை விட சாலைகளை மீண்டும் போடுவதற்கும், குடிநீர் குழாயை சரி செய்வதற்கும் அரசுக்கு அதிகமான தொகை செலவு ஏற்படுகிறது. சாலையில் செல்லும் பொது மக்கள் மிகுந்த அச்சத்தோடு பயணம் செய்கின்ற சூழலும் உருவாகி உள்ளது. மாவட்ட நிர்வாகம் விதித்த நேரக் கட்டுப்பாட்டையும் மீறி குழந்தைகள் பள்ளி செல்லும் நேரங்களிலும் மிக கனரக கனிம வள வாகனங்கள் இயக்கப்படுகின்றன. அவ்வப் போது கனிமவள கனரக வாகனங்களால் விபத்துகளும் ஏற்பட்டு வருவதால், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் போது பெரும் அச்சத்தோடு அனுப்பி வைக்கின்றனர். ஆக மொத்தம் கேரளாவிற்கு செல்லும் கனரக வாகனங்களால் பொது மக்களிடயே மிகுந்த அச்சம் ஏற்பட்டுள்ளது. சாலை விதிகளையும் மோட்டார் வாகனச் சட்டத்தையும் மீறி கனிம வள வாகனங்கள் பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் சாலையில் இயக்கப்படுகின்றன.
ஒவ்வொரு ஊரிலும் குவாரிகள் கிராமச் சாலைகளிலே அமைந்து உள்ளது. கிராமச் சாலைகளில் ஒரு யூனிட்டுக்கு மேல் வாகனங்கள் இயக்கக் கூடாது என்று தடை விதித்தாலே அளவுக்கு அதிகமான கனிம வளம் கொண்டு செல்வதற்கு முற்றுப் புள்ளிக்கு வைக்க முடியும். கிராமச் சாலைகளில் 10 யூனிட்டுக்கு மேல் வாகனங்கள் செல்வது விதி மீறல். சட்டப்படி தான் கிராம சாலைகளில் மிக கனராக வாகனங்கள் செல்கின்றதா என்பது கண்காணிக்கப் பட வேண்டும். பெர்மிட் இல்லாமல் அதிக ஓவர் லோடு ஏற்றி செல்லும் வாகனங்களால் அரசுக்கு அதிகமான வரி இழப்பு ஏற்படுகின்றது. இது குறித்து அரசியல் கட்சிகள் சட்ட மன்றத்தில் குரல் எழுப்பாதது வேதனை அளிக்கிறது.
தென்காசி மாவட்டத்தின் மிக முக்கிய பிரச்சினையாக மாறி உள்ள கனிம வள விவகாரத்தில், பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள், பள்ளி செல்லும் குழந்தைகள், தென்காசி மாவட்டத்தின் இயற்கை வள பாதுகாப்பு போன்றவற்றை கருத்தில் கொண்டு இந்த கனிம வள கொள்ளையை ஒரு முடிவுக்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தென்காசி மாவட்ட இயற்கை வள பாதுகாப்பு சங்கத்தின் தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ரவி அருணன் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்