தென்காசி நகராட்சியில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் சுற்றிதிரியும் மாடுகளை பிடிக்கும் பணி தீவிரம்..
தென்காசி நகராட்சியில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் பெரும் இடையூறாக சாலையில் சுற்றித் திரியும் மாடுகளை பிடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. நகராட்சிகளின் நிர்வாக மண்டல இயக்குனர், திருநெல்வேலி- விஜயலட்சுமி உத்தரவின் படியும், தென்காசி நகர் மன்ற தலைவர் ஆர்.சாதிர் ஆலோசனையின் படியும், தென்காசி நகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் அறிவுரையின் படியும், நகராட்சி சுகாதார அலுவலர் முகமது இஸ்மாயில் தலைமையில் ஆய்வாளர்கள் மகேஸ்வரன், ஈஸ்வரன் மற்றும் துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் துரைசாமி, முத்து மாரியப்பன், சுடலை மற்றும் தூய்மை இந்தியா திட்ட பணியாளர்களுடன் மாடுகள் பிடிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. தென்காசி நகராட்சி பகுதிகளில் பொது மக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறையும், அச்சுறுத்தலையும் ஏற்படுத்தும் வகையில் மாடுகள் உரிமையாளர்களால் சாலைகளில் அலைய அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்த கால்நடைகள் மூலம் பொதுமக்களுக்கு விபத்துக்கள் நேர அதிக வாய்ப்புகள் இருப்பதாலும், போக்குவரத்திற்கு மிகுந்த இடையூறாக இருப்பதாலும், இது தமிழ்நாடு உள்ளாட்சிகள் சட்டம்-1998 பிரிவுகளின் படி குற்றச் செயலாக இருப்பதாலும் அத்தகைய மாடுகள் நகராட்சி மூலம் பிடிக்கப்படும். முதல் முறை, இரண்டாவது முறை குற்றங்களுக்கு தலா ரூ.5000, ரூ.10,000 என ஒவ்வொரு மாடுகளுக்கும் அபராதமாக விதிக்கப்படுவதுடன் மாடுகளை பராமரிக்கும் கட்டணம் நாளொன்றுக்கு ரூ.500 வசூல் செய்யப்படும். எனவே மாட்டின் உரிமையாளர்கள் அவர்களுக்கு சொந்தமான மாடுகளை அவரவர்களுக்கு சொந்தமான இடங்களில் தொழுவம் அமைத்து தமிழ்நாடு பொது சுகாதார சட்ட விதிகளுக்கு உட்பட்டு பராமரிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது. தவறும் பட்சத்தில் மாடுகள் பிடிக்கப்பட்டு மூன்றாவது முறையாக இருப்பின் அவை நகராட்சி மூலம் பொது ஏலம் விடப்படும் என்ற விவரம் தெரிவிக்கப்படுகிறது. எனவே மாட்டின் உரிமையாளர்கள் பொது நலனை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் இப்பணிகளுக்கு ஒத்துழைப்பு நல்குமாறு தென்காசி நகர் மன்ற தலைவர் ஆர்.சாதிர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.