தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனையில் மூதாட்டிக்கு உயர்தர எலும்பு முறிவு அறுவை சிகிச்சை; அரசு மருத்துவ குழுவினர் சாதனை..

தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 97 வயது மூதாட்டிக்கு, உயர்தரமான எலும்பு முறிவு அறுவை சிகிச்சை செய்து மருத்துவர். ஜெஸ்லின் தலைமையிலான மருத்துவ குழுவினர் சாதனை படைத்துள்ளனர். தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் செங்குந்தர் தெருவை சேர்ந்தவர் இரத்தினம்மாள். வயது 97. வாகன விபத்தில் காயம் ஏற்பட்டு தென்காசி மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் சேர்ந்தார். அவருக்கு வலது கால் தொடை எலும்பு முறிந்து உடனடியாக அறுவை சிகிச்சை செய்யும் நிலையில் இருந்தார். ஆனால் அவருக்கு இருதய பிரச்சனை, நுரையீரல் பிரச்சனை மற்றும் ரத்த கொதிப்பு போன்ற பிரச்சனைகள் இருந்ததால் அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்வதில் சிறிது தாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில், மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் ஜெஸ்லின் முழு முயற்சியில், பொது மருத்துவர், இருதய மருத்துவர், மயக்க மருத்துவர் மற்றும் எலும்பு மருத்துவர்கள் உடன் ஆலோசித்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கு தேவையான அனைத்து பரிசோதனைகளும் செய்யப்பட்டு முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய தீர்மானிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நோயாளி 97 வயது முதியவர் என்பதை கருத்தில் கொண்டு பொது மருத்துவர் மற்றும் இருதயவியல் மருத்துவரின் முழு ஒத்துழைப்புடன், அனைத்து பரிசோதனைகளும் செய்யப்பட்டு மயக்கவியல் மருத்துவர் சுரேஷ் மில்லர் மற்றும் அகமது பீவி இருவரும் நோயாளியை அறுவை சிகிச்சைக்கு தயார் செய்தனர். மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின் முதியவரின் உறவினர்களுடன் பேசி, இந்த சிக்கலான அறுவை சிகிச்சை செய்யும் போது ஏற்படும் சாதக பாதகமான விளைவுகளை எடுத்துக் கூறி, அவர்களிடம் அறுவை சிகிச்சைக்கு ஒப்புதல் பெற்று தந்தார். 

இதனையடுத்து புதன்கிழமை காலை (31.07.2024) 10 மணி அளவில் சிக்கலான, உயர்தரமான அறுவை சிகிச்சை என்பதை கருத்தில் கொண்டு எலும்பு முறிவு மருத்துவர் ராம்சுந்தர், மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் ஜெஸ்லின் ஆகியோர் இணைந்து வெற்றிகரமாக அறுவை சிகிச்சையை செய்து முடித்தனர். தற்போது நோயாளி முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட வார்டில் நலமுடன் உள்ளார்.

துரிதமாக செயல்பட்டு நோயாளிக்கு விரைவாக இந்த உயர்தரமான அறுவை சிகிச்சை செய்ய ஒத்துழைத்த எலும்பு முறிவு மருத்துவர் ராம்சுந்தர், மயக்கவியல் மருத்துவர் சுரேஷ் மில்லர் மற்றும் அகமது பீவி, பணியிலிருந்த செவிலியர்கள், செவிலிய உதவியாளர்கள், இரத்த வங்கி அலுவலர்கள், என அனைத்து பணியாளர்களையும், முக்கியமாக தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை மருத்துவர்களின் மீது நம்பிக்கை வைத்து முதியவருக்கு அறுவை சிகிச்சை செய்ய ஒப்புதல் நல்கிய அவரது உறவினர்களை மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் ஜெஸ்லின் பாராட்டினார்.

இணை இயக்குனர் நலப் பணிகள் மரு. பிரேமலதா தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை மருத்துவ குழுவினரை பாராட்டியதோடு, தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனை நிர்வாகத்திற்கு பாராட்டுக்கள் தெரிவித்தார். மேலும் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் சிறப்பாக செயல்பட்டு வரும் தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனை மருத்துவர்களையும், பணியாளர்களையும் பாராட்டினார். தென்காசி மருத்துவமனை ஏற்கனவே NQAS மற்றும் LAKHSHYA தேசிய தரச் சான்றிதழ் பெற்றுள்ளது எனவும், கடந்த வருட காயகல்ப தேர்வில் தமிழகத்தில் முதலிடம் பெற்று சிறப்புடன் செயல்படுகிறது என்பதையும் சுட்டி காட்டினார்.

மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின் கூறும் போது, தென்காசி மருத்துவமனையில் அனைத்து தினங்களிலும் 24 மணி நேரமும் அவசர சிகிச்சை பிரிவு முழு அளவில் இயங்கி வருகிறது. சிக்கலான பொது அறுவை சிகிச்சை 24 மணி நேரமும் முதலமைச்சரின் இன்னுயிர் காப்போம் திட்டம் மற்றும் முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டம் மூலம் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது. இந்த மருத்துவ சேவையினை பொதுமக்கள் முழுமையாக பயன்படுத்தி பயன் பெற வேண்டுமென கேட்டுக் கொண்டார்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!