தென்காசி மக்களவை தொகுதியில் அதிமுக பாஜக வேட்பாளர்களை வீழ்த்தி வெற்றி வாகை சூடிய திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார்..
தென்காசி தொகுதியில் திமுக வேட்பாளர் டாக்டர் ராணி ஸ்ரீ குமார் எதிர்த்து போட்டியிட்ட அதிமுக மற்றும் பாஜக வேட்பாளர்களை வீழ்த்தி அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். தென்காசி மக்களவை தனி தொகுதியில் திமுக சார்பில் டாக்டர் ராணி ஸ்ரீகுமார், அதிமுக சார்பில் டாக்டர் கிருஷ்ணசாமி, பாஜக சார்பில் ஜான்பாண்டியன், நாம் தமிழர் கட்சி சார்பில் இசைமதிவாணன், பி.எஸ்.பி கட்சி சார்பில் மகேஷ்குமார், பி.டி.பி கட்சி சார்பில் சீதா, வி.கே.வி.ஐ.பி கட்சி சார்பில் இராமசாமி, தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில் உமா மகேஸ்வரி, சுயேட்சை வேட்பாளர்கள் கற்பகவல்லி, மன்மதன், கிருஷ்ணசாமி, முத்தையா, பி. கிருஷ்ணசாமி, ஆறுமுகசாமி, ராஜசேகர் உள்ளிட்ட 15 பேர் போட்டியிட்டனர். இந்நிலையில் ஜூன்.04 காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதில் ஆரம்பம் முதலே திமுக வேட்பாளர் டாக்டர் ராணி ஸ்ரீகுமார் முன்னிலையில் இருந்து வந்தார். தொடர்ந்து 25 சுற்றுகளிலும் திமுக வேட்பாளர் முன்னிலை வகித்தார். இந்நிலையில் இறுதியாக 4 லட்சத்து 25 ஆயிரத்து 679 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமியை விட 1,96,199 வாக்குகளும், பாஜக வேட்பாளர் ஜான்பாண்டியனை விட 2,16,854 வாக்குகளும் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
தென்காசி மக்களவை தொகுதியில் இரண்டாவது இடத்தை அதிமுக வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமியும், மூன்றாவது இடத்தை பாஜக வேட்பாளர் ஜான்பாண்டியனும், நான்காவது இடத்தை நாம் தமிழர் வேட்பாளர் இசை மதிவாணனும் பெற்றனர். இதில் திமுக வேட்பாளர் டாக்டர் ராணி ஸ்ரீகுமார் 4 லட்சத்து 25 ஆயிரத்து 679 வாக்குகளும், அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட டாக்டர் கிருஷ்ணசாமி இரண்டு லட்சத்து 29 ஆயிரத்து 480 வாக்குகளும், பாஜக கூட்டணியில் போட்டியிட்ட ஜான் பாண்டியன் இரண்டு லட்சத்து எட்டு ஆயிரத்து 825 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இசை மதிவாணன் ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 335 வாக்குகளும், சுயேட்சை வேட்பாளர் கற்பகவல்லி 6314 வாக்குகளும், பகுஜன் சமாஜ் கட்சி மகேஷ் குமார் 3554 வாக்குகளும், ராமசாமி 3412 வாக்குகளும், மன்மதன் 3278 வாக்குகளும், சீதா 2476 வாக்குகளும், மூ. கிருஷ்ணசாமி 1833 வாக்குகளும், உமா மகேஸ்வரி 1655 வாக்குகளும், பா.கிருஷ்ணசாமி 1350 வாக்குகளும், ஆறுமுகசாமி 1313, வாக்குகளும், ராஜசேகர் 993 வாக்குகளும், முத்தையா 1457 வாக்குகளும் பெற்றனர். நோட்டாவுக்கு 17,565 வாக்குகளும் பதிவானது. அதிமுக மற்றும் பாஜக வேட்பாளர்களை தவிர நாம் தமிழர் கட்சி உள்பட 12 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்.

தென்காசி பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் டாக்டர் ராணி ஸ்ரீகுமாருக்கு தேர்தல் நடத்தும் அலுவலரும், தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவருமான ஏ.கே.கமல் கிஷோர், தேர்தல் பார்வையாளர் அர்ச்சனாதாஸ் பட்நாயக் மற்றும் தேர்தல் பொதுப் பார்வையாளர் டோபேஸ்வர் வர்மா ஆகியோர் முன்னிலையில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வே.ஜெயபாலன், தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான ஈ. ராஜா, முன்னாள் மாவட்ட செயலாளர் மா.செல்லத்துரை, தென்காசி நகர திமுக செயலாளரும் நகர்மன்ற தலைவருமான ஆர்.சாதிர், செங்கோட்டை நகர திமுக செயலாளர் வழக்கறிஞர் ஆ.வெங்கடேசன், திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் டாக்டர் ராணி ஸ்ரீகுமார் பேசியதாவது, தென்காசி பாராளுமன்ற தொகுதியில் மக்கள் வழங்கிய மகத்தான வரலாற்று சிறப்புமிக்க வெற்றியினை முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாளுக்கு மக்கள் அளித்த பரிசாகவே கருதுகிறேன். இந்த வெற்றியை திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பிக்கிறேன். இந்த வெற்றிக்கு மிகவும் உறுதுணையாக இருந்த திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி, தென்காசி மாவட்ட பொறுப்பு அமைச்சர் கே.கே.எஸ். எஸ்.ஆர். ராமச்சந்திரன், தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வே.ஜெயபாலன், வடக்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் ஈ.ராஜா எம்.எல்.ஏ மற்றும் அனைத்து திமுக நிர்வாகிகள் மற்றும் அனைத்து கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தென்காசி தொகுதி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான அத்தனை முயற்சிகளையும் மேற்கொள்வேன். அடிப்படை வசதிகள் குறித்து பொதுமக்கள் முன்வைக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு உரிய நடவடிக்கை எடுப்பேன் என்று கூறினார். செய்தியாளர் சந்திப்பின் போது, தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வே.ஜெயபாலன் தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜா எம்எல்ஏ, முன்னாள் மாவட்ட செயலாளர் மா.செல்லத்துரை, ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் எம்எல்ஏ உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.