பனை மரத்தை வெட்டுவதற்கு கலெக்டரின் அனுமதி அவசியம்..

தென்காசி மாவட்டத்தில் பனை மரத்தினை வெட்டுவதற்கு மாவட்ட ஆட்சித் தலைவரின் அனுமதி அவசியம் என மாவட்ட நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டு உள்ளது. கற்பக விருட்சம் என்று அழைக்கப்படும் பனைமரம் தமிழர்களின் மாண்போடும், வரலாற்றோடும் பிணைந்து காணப்படும் மாநில மரமாக திகழ்கிறது. பனை மரத்தின் அனைத்து பாகங்களும் ஏதோ ஒரு வகையில் விவசாயிகளுக்கு பயனளித்து வருகிறது. பனை மரத்தின் ஓலைகள் ஓலைச் சுவடிகள் ஆகவும், கூரை அமைக்கவும், ஜாடிகள், பாய்கள், கைவினைப் பொருட்கள் மற்றும் உண்ணக் கூடிய பொருட்களான பனை வெல்லம், பனைச் சர்க்கரை, பதநீர்  நுங்கு ஆகியவற்றிற்கு பயன்படுத்தப் பட்டு தமிழரின் வாழ்வில் ஒரு அங்கமாக விளங்குகிறது.

 

பணங் கிழங்கில் கார்போஹைட்ரேட் இரும்புச்சத்து மற்றும் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. நுங்கில் நீர்ச்சத்து அதிகமாக உள்ளதால் உடல் வெப்பத்தை குறைக்க உதவுகிறது. பனை மரங்களை வளர்ப்பதன் மூலம் மண் அரிப்பை தடுக்கவும், மண் வளத்தினை பாதுகாக்கவும், மழை நீர் வீணாகாமல் நிலத்தடி நீர் சேமிப்பை அதிகரிக்கவும் முடியும். பனை மரத்தினை வெட்டுவதற்கான வழிகாட்டு முறைகளை தற்பொழுது தமிழக அரசு வெளியிட்டு உள்ளது.

 

தவிர்க்க முடியாத சூழ்நிலையில் பனைமரம் வெட்டுவதற்கு மாவட்ட ஆட்சித் தலைவரின் அனுமதி அவசியமாகும். இது தொடர்பாக அனுமதி வேண்டி தனிநபர் மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள் வேளாண்மை உழவர் நலத்துறையின் உழவன் செயலியில் விண்ணப்பிக்க வேண்டும். பனை மரங்களை வளர்ப்பதை ஊக்குவிக்கும் பொருட்டு ஒரு பனை மரத்தை வெட்டினால் அதற்கு ஈடாக பத்து பனை மரக்கன்றுகளை நட்டு வளர்ப்பதை உறுதி செய்ய வேண்டும்.

 

மனுதாரர் பனை மரங்களை அனுமதி உரிய பெற்ற பின்னரே வெட்ட வேண்டும். தோட்டக்கலை துறையின் மூலமாக பனை மேம்பாட்டு இயக்கம் திட்டத்தின் கீழ் பனை மரங்கள் நடுவதை ஊக்குவிக்கும் வகையில் பனை விதைகள், பனங் கன்றுகள் மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.

 

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!