கடையநல்லூரில் உலக சாதனை படைத்த பள்ளி மாணவிக்கு பாராட்டு விழா; கல்வியாளர்கள் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று வாழ்த்து..

கடையநல்லூரில் உலக சாதனை படைத்த பள்ளி மாணவிக்கு பாராட்டு விழா; கல்வியாளர்கள் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று வாழ்த்து..

உலக சாதனை படைத்த கடையநல்லூர் மாணவி ஷப்ரினுக்கு பாராட்டு விழா மசூது தைக்கா பள்ளியில் நடந்தது. இதில் கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு மாணவி ஷப்ரினை பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தனர். தென்காசி மாவட்டம் கடையநல்லூர் மசூது தைக்கா மேல் நிலைப் பள்ளியைச் சார்ந்த 12 ஆம் வகுப்பு மாணவி மை. ஷப்ரின். வேதியியல் பாடத்தில் உள்ள நவீன தனிம வரிசை அட்டவணையில் (Modern Periodic Table) உள்ள 118 தனிமங்களின் பெயர்களை முன்னோக்கிய திசையில் கூறிக் கொண்டே பின்னோக்கிய திசையில் அதன் குறியீடுகளை 2.51 நிமிடத்தில் எழுதி INTERNATIONAL BOOK OF RECORDS என்ற உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்தார்.

இதை தொடர்ந்து தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் துரை. ரவிச்சந்திரன் குடியரசு தினத்தன்று மாணவி M. ஷப்ரினை வாழ்த்தி கௌரவித்தார். இந்நிலையில் மாணவி ஷப்ரின் உலக சாதனையைப் போற்றும் விதமாக பாராட்டு விழா மசூது தைக்கா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 07.02.2024 அன்று நடைபெற்றது. இவ்விழாவிற்கு மசூது தைக்கா கல்விக் குழுமத்தின் சார்பாக பள்ளி தாளாளரும், பட்டத்து சாகிப் மௌலவி அல்ஹாபிழ் உ.மு.செ. ஹஸன் மக்தூம் ஆலிம் சாஹிப் பாஸில் மன்பஈ தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் மு. சிக்கந்தர் ரஹிமான் முன்னிலை வகித்தார். இந்நிகழ்வில் பள்ளித் தலைமை ஆசிரியர் மு. சிக்கந்தர் ரஹிமான் வரவேற்றார். பட்டத்து இளவல் உ.மு.செ.ஹ. செய்யது மஸ்வூது ஆலிம் அதாயி கிராத் ஓதினார். மெளலவி உ.மு.செ. அப்துல் வாஹித் சாஹிப் ரஹ்மானி தொடக்கவுரை ஆற்றினார். பின்னர் பள்ளி தாளாளர் பட்டத்து சாகிப் மௌலவி அல்ஹாபிழ் உ.மு.செ. ஹஸன் மக்தூம் ஆலிம் சாஹிப் பாஸில் மன்பஈ தலைமையுரை நிகழ்த்தினார்‌. இன்றைய காலகட்டத்தில் கல்வியின் முக்கியத்துவம் குறித்தும், குறிப்பாக பெண் கல்வியின் அவசியம் மற்றும் தேவைகள் குறித்தும் வலியுறுத்தி பேசினார். உலக சாதனை படைத்த மாணவி மை. ஷப்ரின் முயற்சியைப் பற்றியும் இதற்கு வழிகாட்டியாக இருந்த அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மு. சிக்கந்தர் ரஹிமான் மற்றும் வேதியியல் ஆசிரியர் முகம்மது இர்சாத், உறுதுணையாக இருந்த அனைத்து ஆசிரிய ஆசிரியைகளையும் பாராட்டினார்‌.

நிகழ்விற்கு பால அருணாச்சலபுரம் அரசு உயர் நிலைப்பள்ளி, ஆய்க்குடி அமர்சேவா சங்கம் மேல்நிலைப் பள்ளி தாளாளர், தலைமை ஆசிரியர், கடையநல்லூர் தாருஸ்ஸலாம் மேல்நிலைப் பள்ளி, பேட்டை முஸ்லீம் மேல்நிலைப் பள்ளி, மேலப்பாளையம் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் பள்ளியின் நலம் விரும்பிகள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சாதனை மாணவிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர். மேலும், இப்பள்ளியின் பணி நிறைவு பெற்ற தலைமை ஆசிரியர்கள் முகம்மது அலி, முகம்மது அனீபா, முகம்மது புகாரி, முகம்மது உசேன் மற்றும் பணிநிறைவு பெற்ற ஆசிரியர்கள் பரமசிவன், அமானுல்லா, பீர் முகம்மது, செய்யது அன்பியா, அப்துல்காதர், பாலச்சந்தர், உதுமான் ஆகியோரும் கலந்து கொண்டு உலக சாதனை மாணவியை வாழ்த்தினர். இந்த நிகழ்ச்சியை பள்ளி உடற்கல்வி ஆசிரியர் முகம்மது தஸ்லீம் தொகுத்து வழங்கினார். பள்ளி உதவி தலைமையாசிரியர் நன்றி கூறினார்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!