பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில், ரைஸ்மில் உரிமையாளரை காரில் கடத்திச் சென்ற நான்கு நபர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். தென்காசி மாவட்டம் கடையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோவிலூத்து பகுதியில் ரைஸ்மில் வைத்து நடத்தி வருகிறார் உதயகுமார். இவர் கடந்த வருடம் கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த சூரியகுமார் என்ற நபரிடம் நெல் கொள்முதல் செய்து விட்டு, அதில் ஒரு குறிப்பிட்ட தொகையை மட்டும் திருப்பி கொடுத்து பாக்கி பணம் கொடுக்காமல் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை உதயகுமாரின் ரைஸ்மில்லிற்கு காரில் வந்த சூரியகுமார், சுரேஷ், ஹரி கிருஷ்ணன், பிரதீபன் மற்றும் இருவர் உதயகுமாரிடம் பிரச்சனை செய்து உதயகுமாரின் காருடன் அவரை அங்கிருந்து கடத்திச் சென்றுள்ளனர்.
இது குறித்து உதயகுமாரின் தந்தை கொடுத்த புகாரின் பேரில், குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் படி தனிப்படை அமைக்கப்பட்டு, கடலூர் மாவட்டம் பண்ருட்டி தனலட்சுமி நகர் சங்கர் என்பவரின் மகன் சூரியகுமார் (31), பண்ருட்டி வில்வா நகர் பகவதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த பாலகிரு்ணன் மகன் சுரேஷ் (39), கடலூர் புதுப்பாளையம் படைவீட்டு அம்மன் கோவில் தெருவை சேர்ந்த சிவ சண்முகம் மகன் ஹரிகிருஷ்ணன் மற்றும் விராலிமலை மேலப்பட்டகுடி அய்யனார் கோவில் தெருவை சேர்ந்த நவநீத குமார் என்பவரின் மகன் பிரதீபன் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர். விரைந்து செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்து கடத்தப்பட்ட நபரை மீட்ட காவல் துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.