Grindr எனும் ஆன்ட்ராய்டு ஆப் மூலம் மக்களை மிரட்டி பணம் நகை செல்போன் பறித்த மர்ம கும்பலை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதியை சேர்ந்த ஒருவரை தவறான உறவுக்கு தூண்டும் grindr-app மூலம் தொடர்பு கொண்டு சுரண்டை காவல் நிலைய பகுதிக்கு அவரை வரவழைத்து முறைகேடாக இருப்பது போல் வீடியோ எடுத்து மிரட்டி அவரை தாக்கி பணம், செல்போன் மற்றும் நகைகளை மர்ம நபர்கள் பறித்து சென்றுள்ளனர். இது குறித்து அவர், சுரண்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார். ஏற்கனவே இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் குறித்து போலீசார் விசாரித்து வந்த நிலையில், இச் சம்பவம் குறித்தும் தீவிர விசாரணை நடத்த தென்காசி எஸ்பி சீனிவாசன் உத்தரவிட்டார்.
அதன் பேரில், ஆலங்குளம் டிஎஸ்பி ஜெயபால் பர்னபாஸ், சுரண்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தி இதில் ஈடுபட்ட வீகேபுதூரை சேர்ந்த கருப்பசாமி, (25), சுடலை மகாராஜா(21), சுரண்டையை சேர்ந்த அரவிந்த் (21), ராமர் (19), மணிகண்டன் (18), மதியழகன் (20), மலரவன் (19), அழகு சுந்தரம் (19), முத்துக்குமார் (19), ஆகிய 9 பேரை கைது செய்தனர். இதில் சம்பந்தப்பட்ட லட்சுமணன் (19) என்பவரை தேடி வருகின்றனர். மேலும் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ரூ20 ஆயிரம் ரொக்கம், 8 செல்போன்கள், 2 அரிவாள், வெள்ளி கொலுசு, மற்றும் வெள்ளி மோதிரத்தை பறிமுதல் செய்தனர்.
இது குறித்து போலீசார் கூறுகையில், பொதுமக்களும் இது போன்ற குற்ற செயல்புரியும் எண்ணத்தோடு சமூக வலைதளங்கள், பிற தகவல் ஊடகங்கள் ஆகியவற்றிலும் தங்களை அணுகும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும். இதுபோன்ற ஏமாற்று செயலின் மூலம் பாதிக்கப்படாமல் கவனமாக இருக்கவும் அறிவுறுத்தப்படுகிறது. இதுபோன்ற குற்ற செயல்களால் பாதிக்கப்படுபவர்கள் புகார் கொடுக்க தயங்காமல் உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க மாநில காவல் கட்டுப்பாட்டு அறை தொடர்பு எண் 100, அல்லது தென்காசி மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 98840 42100 என்ற எண்ணிலோ தொடர்பு கொண்டோ அல்லது வாட்சப் மூலம் தகவல் தெரிவிக்கலாம்.
Grindr App மற்றும் அதைப்போன்று வேறு செயலிகளை பயன்படுத்தி பொதுமக்களை மிரட்டி வழிப்பறி செய்யும் நபர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
செய்தியாளர்- அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.