கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்; தென்காசி மாவட்ட பயனாளிகள் முதல்வருக்கு நன்றி..

தமிழ்நாட்டில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்; தென்காசி மாவட்ட பயனாளிகள் முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றி..

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயன்பெற்று வரும் தென்காசி மாவட்ட பயனாளிகள் தமிழ்நாடு முதலைமச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளனர். “காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மானப் பெரிது (குறள் -102) என்னும் வள்ளுவன் வாக்கிற்கிணங்க, தகுந்த சமயத்தில் செய்த உதவி சிறிதாக இருந்தாலும் அது உலகத்தை விட பெரிதாக மதிக்கப்படும். மகளிருக்கு சொத்துரிமையும் உள்ளாட்சி அமைப்புகளில் தனி இட ஒதுக்கீடு அளித்தது முதல் தற்போது கட்டணமில்லா பேருந்து பயணம் வழங்கியது வரை மகளிரின் நலன் காத்து அவர்களது உரிமைகளை நிலைநாட்டுவதில் எப்போதும் அக்கறையுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசின் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் இரண்டு நோக்கங்களைக் கொண்டது. பிரதிபலன் பாராமல் வாழ்நாளெல்லாம் ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களின் உழைப்புக்குக் கொடுக்கும் அங்கீகாரம் முதன்மையானது. அடுத்து, ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை என்பது, பெண்களின் வாழ்வாதாரத்திற்கு உறுதுணையாக இருந்து, வறுமையை ஒழித்து, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சுயமரியாதையோடு அவர்கள் வாழ்வதற்கு சமூகத்தில் உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதாகும். 

மகளிரின் சமூக பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக அறிவிக்கப்பட்டிருக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் என்பது குடும்பத் தலைவிகளுக்கு அவரவர் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும். நடைபாதையில் வணிகம் செய்திடும் மகளிர், அதிகாலையில் கடற்கரை நோக்கி விரைந்திடும் மீனவ மகளிர், கட்டுமானத் தொழிலில் பணிபுரியும் மகளிர், சிறிய கடைகள், வணிகம் மற்றும் சிறுதொழில் நிறுவனங்களில் சொற்ப ஊதியத்தில் பணிபுரியும் மகளிர், ஒரே நாளில் ஒன்றுக்கு மேற்பட்ட இல்லங்களில் பணிபுரியக்கூடிய பெண்கள் என பல்வேறு வகைகளில் தங்கள் விலை மதிப்பில்லா உழைப்பைத் தொடர்ந்து வழங்கி வரும் பெண்கள் இந்தத் திட்டத்தால் பயள்பெறுவார்கள். ஒவ்வொரு ஆணின் வெற்றிக்காகவும், அவரவர் குழந்தைகளின் கல்வி, உடல் நலம் காக்கவும் இந்தச் சமூகத்திற்காகவும், வீட்டிலும், வெளியிலும் ஒரு நாளைக்குப் பல மணி நேரம் பெண்கள் உழைத்துக் கொண்டு இருக்கிறார்கள். பெண்களின் உழைப்பை முறையாக அங்கீகரித்திடவே பெண் உரிமையை நிலைநாட்டிய கலைஞர் பெயரால் இந்த மகளிர் உரிமைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பெண்களின் உழைப்பு ஆண்களுக்கு நிகராகவே அமைந்திருந்தது. இன்றளவும் பல குடும்பங்களில் குறிப்பாக பொருளாதாரத்தைச் சுமக்கும் முதுகெலும்பாகவும் பெண்கள் இருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. குறைவாக மதிப்பிடப்படும் பெண்களின் உழைப்புக்கான பொருளாதார மதிப்பை அங்கீகரிக்கவும், விவசாயம், வீட்டு வேலை போன்ற குறைந்த ஊதியம் பெறும் வேலைகளில் ஈடுபட்டுள்ள ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு பொருளாதார சுதந்திரத்தை வழங்கிடவும் இந்த மாபெரும் திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தினை பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான 15.09.2023 அன்று காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவில் தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் குடும்பத் தலைவிகளுக்கு உரிய விதிமுறைகளைப் பின்பற்றி மாதந்தோறும் 1000 ரூபாய் அவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கும் இந்தத் திட்டத்தின் மூலம் 1 கோடியே 15 இலட்சம் குடும்பத் தலைவிகள் பயனடைந்துள்ளனர்.

தென்காசி மாவட்டத்தைப் பொறுத்தவரையில் இத்திட்டத்தின் வாயிலாக 1,82,656 குடும்பத் தலைவிகள் பயன் பெற்றுள்ளனர். கலைஞர் உரிமைத்தொகை திட்டத்தில் குடும்பத் தலைவிகள் தெரிவித்த கருத்துக்கள் பின்வருமாறு: (ஆவுடையம்மாள், தென்காசி) : என் பெயர் ஆவுடையம்மாள். சொந்த ஊர் தென்காசி. முதலமைச்சர் அவர்கள் மகளிருக்காக உரிமைத்தொகை ஆயிரம் ரூபாயை அறிவித்து வழங்கி வருகிறார்கள். இந்த பணம் குடும்பத்திற்கு மிகவும் உதவியாக உள்ளது. இதனால் எங்கள் எங்கள் குடும்பத்திற்கு அத்தியாவசியத் தேவையான மளிகைப் பொருட்கள் மற்றும் இதர சில்லரைச் செலவுகளை எங்களால் சமாளிக்க முடிகிறது. இதனால் எங்களுக்கு மாதம் 1000 ரூபாய் சேமிக்க முடிகிறது. ஒவ்வொரு மாதமும் ஆயிரம் ரூபாய் கிடைப்பதால் எங்கள் குழந்தைகளுக்கு தேவையானவற்றை எங்களால் வாங்க முடிகிறது. இதனால் எங்கள் குடும்பம் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த நிதியை ஒதுக்கிய முதலமைச்சர் அவர்களுக்கு மிக்க நன்றி.

பார்வதி தென்காசி மாவட்டம் அழகப்பபுரம்: என் பெயர் பார்வதி. சொந்த ஊர் தென்காசி மாவட்டம் அழகப்பபுரம் கிராமம். முதலமைச்சர் அவர்கள் மகளிருக்காக உரிமைத்தொகை ஆயிரம் ரூபாயை அறிவித்து இருக்கிறார்கள். மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் கிடைப்பதால் எங்கள் குடும்பச் செலவுகளுக்கு இந்த பணம் பயன்படுகிறது. எந்த ஒரு அரசும் இது போல் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கியது இல்லை. எங்களைப் போல் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு இந்த தொகை மிகவும் உதவியாக உள்ளது. எங்கள் குழந்தைகளின் சின்னச் சின்ன தேவைகளை நிறைவேற்றவும், அத்தியாவசியத் தேவைக்கும் இத்தொகை உதவியாக உள்ளது. இந்த நிதியை எங்களுக்கு வழங்கிய தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு நாங்கள் மிகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா.இளவரசி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ரா.ராமசுப்பிரமணியன், தென்காசி மாவட்டம்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!