தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனையில் சமத்துவ தின உறுதி மொழி ஏற்பு..

தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனையில் சமத்துவ தின உறுதி மொழி ஏற்பு..

தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் சமத்துவ தின உறுதிமோழியை ஏற்றுக்கொண்டனர். இந்தியாவின் சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் பிறந்த தினமான ஏப்ரல் 12 ஆம் நாள் ஆண்டு தோறும் சமத்துவ நாள் ஆக அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில் தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவரின் அறிவுறுத்தலின்படி தென்காசி மாவட்ட அரசு மருத்துவமனையில் சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் பிறந்த தினத்தை முன்னிட்டு ஏப்.12 வெள்ளிக்கிழமை இன்று சமத்துவநாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

“சாதி வேறுபாடுகளுக்கு எதிராகவும், சாதிகளின் பெயரால் நடக்கும் சமூக அடக்கு முறைகளுக்கு எதிராகவும் தொடர்ந்து போராடி, ஒதுக்கப்பட்டவர்களின் உரிமைகள் மற்றும் சமத்துவத்திற்காக வாழ்நாள் முழுவதும் குரல் கொடுத்து எளிய மக்களின் உரிமைகளை பற்றி விழிப்புணர்வு ஊட்டிய அரசியலமைப்புச் சட்டத்தை வகுத்துத் தந்த அண்ணல் அம்பேத்கருடைய பிறந்த நாளில் சாதி வேறுபாடுகள் ஏதுமில்லாத சமத்துவ சமுதாயத்தை அமைக்க நாம் அனைவரும் பாடுபடுவோம் என்றும், சக மனிதர்களை சாதியின் பெயரால் ஒருபோதும் அடையாளம் காணமாட்டேன் என்றும் சக மனிதர்களிடம் சமத்துவத்தை வாழ்நாள் முழுவதும் கடைபிடிப்பேன் என்றும் உளமார உறுதி கூறுகிறேன் என்ற உறுதி மொழியை அனைவரும் ஏற்றனர்.

இந்நிகழ்ச்சியில், தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையின் கண்காணிப்பாளர் மருத்துவர் இரா.ஜெஸ்லின் முன்னிலை வகித்தார். உறைவிட மருத்துவர் செல்வபாலா தலைமை தாங்கினார். மேலும் மூத்த மருத்துவர்கள் கீதா, ராஜேஷ், சுவர்ணலதா, விஜயகுமார், நிர்மல், அன்னபேபி, செவிலியர் கண்காணிப்பாளர்கள் வள்ளி (நிலை.1) திருப்பதி, ராஜாதி ஜெகதா, வசந்தி மற்றும் செவிலியர்கள், செவிலிய பயிற்சி மாணவ மாணவியர்கள், பாதுகாவலர்கள், துப்புரவு பணியாளர்கள், அலுவலக உதவியாளர்கள் என அனைவரும் கலந்து கொண்டு சமத்துவ நாள் உறுதிமொழியை ஏற்றனர். மேலும் மருத்துவமனையின் கண்காணிப்பாளர் இரா.ஜெஸ்லின் மருத்துவமனையில் பணிபுரியும் பணியாளர்கள் அனைவருக்கும் தீண்டாமை ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

இந்திய அரசியலமைப்பின் 17வது பிரிவு தீண்டாமையை ஒழிப்பதற்கும், அனைத்து குடிமக்களுக்கும் சம உரிமைகளை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்ட ஒரு முக்கியமான விதியாகும். இருப்பினும், இதனை திறம்பட செயல்படுத்த பல சவால்கள் உள்ளன. அமலாக்கமின்மை, ஆழமான வேரூன்றிய சமூக தப்பெண்ணங்கள், சாதி அடிப்படையிலான அரசியல், விழிப்புணர்வு இல்லாமை மற்றும் போதிய சட்ட ஆதரவின்மை ஆகியவை கடக்க வேண்டிய குறிப்பிடத்தக்க சவால்களில் சில. இந்த சவால்களை எதிர்கொள்வது மற்றும் ஒவ்வொரு தனிமனிதனும் அவர்களின் சாதி அல்லது சமூக அந்தஸ்தைப் பொருட்படுத்தாமல் கண்ணியத்துடனும் மரியாதையுடனும் நடத்தப்படும் ஒரு சமூகத்தை உருவாக்குவது அவசியம். அப்போது தான் நீதியான சமத்துவ சமுதாயம் என்ற இலக்கை நாம் உண்மையாக அடைய முடியும். இவ்வாறு மருத்துவமனையில் பணிபுரியும் அனைத்து நிலை பணியாளர்களுக்கும் சமத்துவ நாள் பற்றிய விழிப்புணர்வை மருத்துவ கண்காணிப்பாளர் இரா.ஜெஸ்லின் வழங்கினார். நிகழ்ச்சியின் முடிவில் செவிலியர் கண்காணிப்பாளர் திருப்பதி நன்றி கூறினார்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

Abubakker Sithik

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!