இடைகால் ஊராட்சியில் ரூ.34.50 இலட்சம் மதிப்பில் கால் நடை மருந்தக கட்டடம் திறப்பு..

இடைகால் ஊராட்சி பகுதியில் ரூ.34.50 இலட்சம் மதிப்பில் கால்நடை மருந்தக கட்டடம் திறப்பு..

தென்காசி மாவட்டம் இடைகால் ஊராட்சியில் கால்நடை மருந்தக புதிய கட்டடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் திறந்து வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையின் படி 06.03.2024 அன்று தென்காசி மாவட்டம் இடைகால் ஊராட்சியில் ரூ.34.50 இலட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கால்நடை மருந்தக கட்டடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் திறந்து வைத்து கட்டட வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சர் தென்காசி மாவட்டத்தில் புதிய திட்டங்களை செயல்படுத்தி புதிய கட்டடங்களை திறந்து வைத்து மக்களின் நலன் கருதி பல்வேறு நலத் திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். இடைகாலில் புதிதாக திறக்கப்பட்ட கால்நடை மருந்தக கட்டிடத்தில் கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்துதல், குடற்புழு நீக்கம் செய்தல், செயற்கை முறை கருவூட்டல், சினைப் பரிசோதனை, மலடுநீக்க சிகிச்சை மற்றும் அனைத்து வகையான சிகிச்சைகளும் மேற்கொள்ளப்படும்.

புதிய கால்நடை மருந்தகத்தினால் இடைகால், நயினாரகரம், பொய்கை ஆகிய கிராமங்களில் உள்ள கால்நடைகள் பயன்பெறும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்துள்ளார். விழாவின் தொடக்கத்தில் திருநெல்வேலி கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் மரு.கே.ஆர்.ஸ்ரீஹரி வரவேற்புரை ஆற்றினார். விழா ஏற்பாடுகளையும், கால்நடைகளுக்கு சிகிச்சைப் பணிகளையும் இடைகால் கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவர் தனலெட்சுமி மேற்கொண்டார்.

நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் தி.உதயகிருஷ்ணன், கடையநல்லூர் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் பா.சுப்பம்மாள் பால்ராஜ், ஊராட்சி ஒன்றிய குழுத்துணைத் தலைவர் ஐவேந்திரன் தினேஷ், இடைகால் ஊராட்சி மன்றத் தலைவர் இ.முத்தம்மாள் இலங்கமுத்து, ஊராட்சி மன்ற துணைத்தலைவர் எஸ்.முத்துராமலிங்கம், தென்காசி கட்டட கட்டுமானம் மற்றும் பராமரிப்புப் பணி கோட்ட செயற்பொறியாளர் அனிதா சாந்தி மற்றும் உறுப்பினர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!