தென்காசி மாவட்டத்தில் சலவைத் தொழிலாளி முத்துக் குமார் “மகாத்மா காந்தி” விருது வழங்கி சமூக நல ஆர்வலர்களால் பாராட்டப்பட்டார். தென்காசி மாவட்டம் பொட்டல்புதூர் பகுதியை சேர்ந்த சலவைத் தொழிலாளி முத்துக்குமார். அருகில் உள்ள வெங்காடம்பட்டி பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் திருமாறன் தவறுதலாக தனது பேண்ட் பாக்கெட்டில் பணத்தை வைத்து விட்டு கால் சட்டையினை சலவை செய்வதற்கு அனுப்பியிருந்தார். அந்த பணத்தை எண்ணிக் கூட பார்க்காமல் நேர்மையுடன் திருமாறனிடம் ஒப்படைத்தார் சலவைத் தொழிலாளி முத்துக் குமார்.

இந்நிலையில் அவரது நேர்மையினை பாராட்டி “மகாத்மா காந்தி விருது” வழங்கி பாராட்டு விழா நடைபெற்றது. பொட்டல் புதூர் ஆர்.சி.பள்ளி அருகே உள்ள நேர்மையாளர் குமாரின் அயனிங் சென்டருக்கு முக்கிய பிரமுகர்கள் தேடிச் சென்று “மகாத்மா காந்தி” விருதினை வழங்கி அவரை பாராட்டினர். இந்த நிகழ்ச்சிக்கு சமூக நல ஆர்வலர் வெங்காடம் பட்டி பூ. திருமாறன் தலைமை தாங்கினார். எம். எஸ்.பி காய்கனி கடை சுப்பிரமணிய பாண்டியன், டெய்லர் காவூர் கனகராஜ், முக்கூடல் பல் மருத்துவர் ஏகலைவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தினமலர் நிர்வாக இயக்குனர் தினேஷ், செங்கோட்டை காந்திய வாதி விவேகானந்தன், சமூக நல ஆர்வலர் திருமாறன் ஆகியோர் நேர்மைக்கான “மகாத்மா காந்தி” விருதை சலவை தொழிலாளி முத்துக் குமாருக்கு வழங்கினர்.
பொட்டல்புதூர் ஆர்.சி. பள்ளி தலைமை ஆசிரியர் அந்தோணி கெமில்டன், பாராட்டு விழாவில் பள்ளி மாணவ மாணவியர் மற்றும் ஆசிரியையுடன் கலந்து கொண்டார். அப்போது, பள்ளிக் குழந்தைகளுக்கு நேர்மை, சத்திய வாழ்வு, மனத் தூய்மை ஏற்பட இது போன்ற மனிதர்களும், சம்பவங்களும் துணை நிற்கும் என திருமாறன் தெரிவித்தார். பிறர் பொருளுக்கு ஆசைப்படாத சலவையாளர் முத்துக் குமாருக்கு விருது வழங்கப்பட்டதை அறிந்த பொட்டல் புதூர் பொது மக்கள், வியாபாரிகள், பெண்கள் உள்ளிட்ட அனைவரும் அவரை பாராட்டினர். வருகை தந்த அனைவருக்கும் குமாரின் பெற்றோர்கள் நன்றி கூறினர். விழாவில் கலந்து கொண்ட மாணவ மாணவியருக்கு டாக்டர். விஜி நினைவாக அப்துல் கலாம் நூல்களை மதுரை பாலு மற்றும் திருமாறன் வழங்கினர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.