தென்காசி மாவட்டத்தில் விபத்தில் சிகிச்சை பெற்று வந்த சுரண்டை பேரூராட்சி முன்னாள் தலைவர் முதலுதவி தாமதம் ஆகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தென்காசி மாவட்டம் சுரண்டை சிவ குருநாதபுரத்தை சேர்ந்தவர் டி.கே.எம். மாதாள பாண்டியன்.வயது (70). இவர் சுரண்டை பேரூராட்சியாக இருந்த போது 10 ஆண்டுகள் பேரூராட்சி மன்ற தலைவராக பணியாற்றினார். இவர் கடந்த 30ஆம் தேதி மாலை 6 மணி அளவில் கடையம் அருகே உள்ள மாதாபுரத்தில் அவருக்கு சொந்தமான செங்கல் சூளையில் பணி முடிந்து சுரண்டை நோக்கி இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது சுரண்டை நகராட்சி பகுதிக்குட்பட்ட பாவூர்சத்திரம் செல்லும் சாலையில் தனியார் மதுபான கடை அருகே வந்த போது எதிர்பாராத விதமாக மதுபான கடையில் இருந்து வெளியே வந்த நபர் ஒருவர் சாலையை கடந்துள்ளார். அப்போது நிலை தடுமாறி பைக்கிலிருந்து கீழே விழுந்த மாதாள பாண்டியனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த சுரண்டை போலீசார் மற்றும் விவசாயப் பணியில் ஈடுபட்டிருந்த பொது மக்கள் அவரை மீட்டுள்ளனர். சுரண்டையில் அரசு மருத்துவமனை இல்லாததால் அவருக்கு முதலுதவி சிகிச்சை கூட அளிக்க முடியவில்லை எனவும், ஆம்புலன்ஸ் வருவதற்கு தாமதம் ஆகியதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து தென்காசி அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக பாளையங் கோட்டை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு கடந்த ஒரு வாரமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி மாதாள பாண்டியன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சுரண்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர்- அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.