பொட்டல்புதூர் பகுதியில் சலவை தொழிலாளி ஒருவர் தனது நேர்மையான செயற்பாட்டால் அனைத்து சமுதாய மக்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். தென்காசி மாவட்டம் கடையம் அருகில் உள்ள ஊர் பொட்டல் புதூர் பகுதியை சேர்ந்த சலவை தொழிலாளி குமார். தினமும் ஊர் மக்களின் துணியினை சலவை செய்து இஸ்திரி போட்டுக் கொடுக்கும் பணியினை செய்து வருகிறார். இந்த நிலையில், அருகில் உள்ள வெங்காடம் பட்டியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பூ.திருமாறன் பெரிய தொகையை தவறுதலாக பேண்ட் பாக்கெட்டில் வைத்து அதனை சலவைக்கு அனுப்பி வைத்து விட்டார். மறுநாள் துணியை வாங்கப் போகும் போது நேர்மை மிகுந்த சலவைத் தொழிலாளி குமார், திருமாறனிடம் ஒரு பேப்பரில் மடக்கிய பணக்கற்றையை தந்து இது உங்கள் கால் சட்டையில் இருந்தது என ஒப்படைக்கிறார்.
அந்த பணம் எவ்வளவு என்று கூட எண்ணிப் பார்க்காமல் உரியவரிடம் ஒப்படைத்த சலவைத் தொழிலாளியின் நேர்மை மிகுந்த செயல்பாடு அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. இது குறித்து சலவை தொழிலாளி குமார் கூறுகையில், தனது உழைப்பினால் கிடைக்கும் பணம் மட்டுமே போதுமானது. மற்றவர் பணத்தில் எனக்கு ஆசை இல்லை என்றார். சமூக நல ஆர்வலர் திருமாறன் கூறுகையில், இந்த நேர்மையாளர் அனைவருக்கும் பாடம் கற்றுத் தரும் ஆசிரியராக திகழ்கிறார். “மனிதன் எப்படி வாழ வேண்டும்” என்பதனை உணர்த்தும் ஒரு உத்தமர் என்றார். வணிகம் நிறைந்த பொட்டல் புதூர் பகுதியில் வசிக்கும் அனைத்து சமுதாய மக்களும் சலவை தொழிலாளி குமாரை பாராட்டி வருகின்றனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.