தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் ஆதார் சேவை மைய கட்டிடத்தில், தமிழ்நாடு அரசின் புதிய இ-சேவை மையம் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் துவங்கி வைக்கப்பட்டுள்ளது. புதிய இ-சேவை மையத்தினை 18.12.2024 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் துவக்கி வைத்தார். பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது, தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்றைய தினம் புதிய இ-சேவை துவங்கி வைக்கப்பட்டுள்ளது.

புதிய இ-சேவை மையத்தில், சாதிச் சான்றிதழ், இருப்பிடம் மற்றும் பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், முதல் பட்டதாரி சான்றிதழ் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் சான்றிதழ், விவசாய வருமானச் சான்றிதழ், வாரிசு சான்றிதழ், குடிப்பெயர்வு சான்றிதழ் சிறு குறு விவசாயி சான்றிதழ், வசிப்பிட சான்றிதழ், ஆண் குழந்தை இல்லை என்பதற்கான சான்றிதழ், கலப்பு திருமண சான்றிதழ், சொத்து மதிப்பு சான்றிதழ். திருமணம் ஆகாதவர் என்பதற்கான சான்றிதழ், விதவைச் சான்றிதழ், அடகு வணிகர் உரிமம், இயற்கை இடர்பாடுகளினால் இழந்த பள்ளி அல்லது கல்லூரி சான்றிதழின் நகல் பெறச் சான்றிதழ் போன்ற 17 வகையான சான்றிதழ்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
மேலும், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம், அன்னை தெரசா அம்மையார் நினைவு அனாதை பெண் திருமண உதவித்திட்டம். ஈ.வே.ரா மணியம்மை நினைவு விதவை மகள் திருமண உதவித் திட்டம், தர்மாம்பாம்மாள் அம்மையார் நினைவு விதவை மறுமண உதவித்திட்டம், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண உதவித் திட்டம், பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்-1, பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம்-2, இணையவழி பட்டா மாறுதல் போன்ற 7 வகையான அரசு நலத்திட்ட உதவிகளுக்கும் விண்ணப்பிக்கலாம். எனவே, பொது மக்கள் அனைவரும் புதிதாக துவங்கப்பட்டுள்ள அரசு இ-சேவை மையத்தில் சான்றிதழ்களுக்கும், நலத்திட்ட உதவிகளுக்கும் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் சீ.ஜெயச்சந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அமிர்தலிங்கம், வட்டாட்சியர் (கேபிள் டிவி) செல்வன் மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.