90 ஆடுகள் உயிரிழந்த பெரும் சோகம்; நிவாரணம் வழங்க வலியுறுத்தல்..

தென்காசி மாவட்டத்தில் பெய்த கன மழை காரணமாக ஆட்டுப் பண்ணைக்குள் தண்ணீர் புகுந்து 90 ஆடுகள் உயிரிழந்ததால் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது. ஆடுகளை இழந்துள்ளவர்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டு வருகிறது. தென்காசி மாவட்டம் ஆய்க்குடி பேரூராட்சி கம்பிளி கிராமத்தில் கிருஷ்ணசாமி என்பவரின் தோப்பில், கம்பிளி பகுதியை சேர்ந்த மாரியப்பன், சாம்பவர் வடகரையை சேர்ந்த குத்தால ராமன் ஆகிய இருவரும் ஆட்டு பண்ணைகள் அமைத்து பராமரித்து வருகின்றனர். இந்நிலையில் தென்காசி மாவட்டத்தில் இரண்டு நாட்கள் பெய்த கனமழையின் காரணமாக ஆட்டுப் பண்ணைக்குள் தண்ணீர் புகுந்து 90 ஆடுகள் உயிரிழந்தது. இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆடுகள் உயிரிழப்பு குறித்து தகவலறிந்த ஆய்க்குடி பேரூராட்சி செயல் அலுவலர், தமிழ்மணி, மன்ற உறுப்பினர் புணமாலை, ஆகியோரின் துரித நடவடிக்கையின் பேரில், ஆய்க்குடி பகுதி பேரூராட்சி பணியாளர்களைக் கொண்டு இறந்த ஆட்டு உடல்கள் அனைத்தும் தண்ணீரிலிருந்து மீட்கப்பட்டு கால்நடை உதவி இயக்குனர் மகேஸ்வரி, கால்நடை ஆய்வாளர் சாமிநாதன், கால்நடை மருத்துவர்கள், ராதா கிருஷ்ணன், சசிகுமார், சிவக்குமார், கடையநல்லூர் துணை வட்டாட்சியர் சுடலை ஆண்டி, வருவாய் ஆய்வாளர் சங்கரன், கிராம நிர்வாக அலுவலர் தமிழ்ச்செல்வி, சுகாதார மேற்பார்வையாளர் தர்மர் ஆகியோரின் கூட்டு முயற்சியுடன் உடற்கூறு ஆய்வுக்கு பின்னர் புதைக்கப்பட்டது. ஆடுகளை இழந்தவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கிட பேரூராட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!