பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் தமிழ்நாடு அணி சார்பில் பங்கேற்ற தென்காசி மாவட்டத்தை சேர்ந்த அரசுப் பள்ளி மாணவிகள் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். ஸ்கூல் கேம்ஸ் பெட்ரேஷன் ஆப் இந்தியா சார்பில் 2024-25ஆம் ஆண்டுக்கான விளையாட்டுப் போட்டிகள் மாநில அளவில் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு நடந்தது. சிவகங்கையில் நடந்த போட்டியில் தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் ஒளவையார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் மு.சந்தியா மற்றும் சி.யோக தர்ஷினி ஆகியோர் 14 வயதுக்கு உட்பட்ட பிரிவில் கலந்து கொண்டனர். மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகள் இருவரும் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றனர். இதையடுத்து பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் நடைபெற்ற 2024 – 25 ஆண்டுக்கான 68-வது தேசிய கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாடு மாநிலம் சார்பில் மாணவிகள் சந்தியா மற்றும் யோகதர்ஷினி ஆகியோர் பங்கேற்றனர். 14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் விளையாடிய இவர்கள் 3-வது இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

தமிழ்நாட்டிற்கும், தென்காசி மாவட்டத்திற்கும், பாவூர்சத்திரம் ஒளவையார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கும் பெருமை சேர்த்துள்ள மாணவிகளை பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜான்சிராணி, உதவி தலைமை ஆசிரியர் ஜெகத் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர். சாதனை மாணவி எம்.சந்தியா, கீழப்பாவூர் பகுதியை சேர்ந்த பா.முத்துக்குமார் – உமாமகேஸ்வரி தம்பதியரின் மகள் ஆவார். மாணவி யோகதர்ஷினி பாவூர்சத்திரம் பகுதியை சேர்ந்த வே. சிவபிரகாஷ் – சங்கீதா தம்பதியரின் மகள் ஆவார். யோகா ஆசிரியர்கள் வி.சிவபிரகாஷ் (தென்காசி மாவட்ட கராத்தே அசோசியேஷன் தலைவர்) மற்றும் எஸ்.சங்கீதா சிவ பிரகாஷ் (திருநெல்வேலி அரசு மாடல் பள்ளி பயிற்சியாளர்) ஆகியோர் இவர்களுக்கு பயிற்சி அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.