வடகரை சாம்பவர் தெரு பகுதியில் முறையான சாலை வசதி இல்லை எனவும், மழைக்காலங்களில் பல்வேறு இன்னல்களை இப்பகுதி மக்கள் சந்தித்து வருவதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். தென்காசி மாவட்டம் செங்கோட்டை தாலுகா வடகரை கீழ்பிடாகை பேரூராட்சிக்கு உட்பட்ட சாம்பவர் தெரு பகுதியில் சுமார் 20-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சாலை வசதியின்றி மழைக் காலங்களில் மக்கள் சேற்றில் வசிக்கும் அவலநிலை உள்ளது. இப்பகுதியில் சாலை அமைக்க பல முறை மனு அளித்தும் இதுவரை சாலை வசதி செய்யப்படவில்லை என வேதனை தெரிவிக்கும் பொதுமக்கள், இப்பகுதியில் விரைவாக சாலை அமைத்திட நடவடிக்கை எடுத்து அரசு பொதுமக்களின் சிரமங்களை போக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
இது குறித்து வடகரை நகர எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் தெரிவித்து உள்ளதாவது, பத்தாண்டு காலமாக இந்த அவல நிலை தொடருவதாகவும், இப்பகுதியில் முறையாக சாலை அமைக்கும் விதிகளுக்கான ஒத்துழைப்பை பொதுமக்கள் அளித்திருந்தும் இன்று வரை சாலை வசதி செய்யப்படாத நிலை உள்ளதாகவும், இதனை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லுமாறும் பொதுமக்கள் எஸ்டிபிஐ கட்சியிடம் முறையிட்டு வருகின்றனர். எனவே வடகரை பேரூராட்சி மற்றும் தென்காசி மாவட்ட நிர்வாகம் இப்பகுதியில் ஆய்வு செய்து பொதுமக்களுக்கு தேவையான சாலை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் விரைவில் செய்து தர வேண்டும் என பொதுமக்களின் கோரிக்கையை எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம் என தெரிவித்துள்ளனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.