பட்டாவில் பெயர் சேர்க்கும் விவகாரத்தில், தன் மீது அடிப்படை ஆதாரமற்ற மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தென்காசி கோட்டாட்சியர் லாவண்யா விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளதாக கோட்டாட்சியர் தெரிவித்துள்ளார். தென்காசி மாவட்டம், ஊத்துமலை பகுதியை சேர்ந்த விவசாயி கண்ணையா பட்டாவில் தனது மனைவி பெயரை சேர்ப்பது தொடர்பாக ரூ.50 ஆயிரம் கேட்டதாக கூறி கோட்டாட்சியர் மீது மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் மனு அளித்திருந்தார்.
இந்நிலையில் இது தொடர்பாக தென்காசி கோட்டாட்சியர் அளித்துள்ள விளக்கம்: அடிப்படை ஆதாரமற்ற மோசடியான புகார் தன் மீது அளிக்கப்பட்டுள்ளதாகவும், பட்டாவில் பெயர் சேர்ப்பது தொடர்பான விவகாரத்தில் விசாரணை நடத்தப்பட்ட போது பட்டா கோரும் நிலத்தின் மீது உரிமையியல் பிரச்னை இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக வழக்கும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஆகவே பட்டாக்கோரும் நிலத்தின் மீது உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது, ஒருதலைபட்சமாக பட்டா வழங்க முடியாது என உரிய விளக்கத்துடன் கடிதம் கொடுக்கப்பட்டது. மேலும் என் மீது கொடுக்கப்பட்ட புகார் குறித்து அரசு உயர் அதிகாரிகளுக்கு உரிய விளக்கம் அளித்துள்ளேன். அதேசமயம், என் மீது அவதூறு பரப்பும் நோக்கத்துடன் மாவட்ட ஆட்சியரிடம் பொய் புகார் அளித்த விவசாயி கண்ணையா மீது நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளேன். இவ்வாறு கோட்டாட்சியர் விளக்கம் அளித்துள்ளார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.