சட்ட விதிமுறைகளை மீறி கால்நடைகளை கடத்துவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தெரிவித்துள்ளார். தென்காசி மாவட்டத்தில் கால்நடைகளை வாகனங்களில் ஏற்றிச் செல்லும் போதும் இறைச்சிக் கூடங்களில் கால்நடைகள் வெட்டப்படும் போதும் பின்பற்றப்பட வேண்டிய சட்டப்பூர்வமான விதிமுறைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்காசி மாவட்டத்தில் ஆறு கால்நடை சந்தைகளும், இரண்டு சோதனை சாவடிகள் புளியரை மற்றும் மேக்கரை பகுதிகளில் அமைந்துள்ளன.
இம்மாவட்டத்திலுள்ள கால்நடை சந்தைகளில் விற்கப்படும் மற்றும் வாங்கப்படும் கால்நடைகள் மற்றும் அருகிலுள்ள மாவட்டங்களிலிருந்து கேரள மாநிலத்திற்கு கொண்டு செல்லப்படும் கால்நடைகள், லாரிகள், மினிவேன்கள், அல்லது லோடு ஆட்டோக்களில் கொண்டு செல்லும் போது போக்குவரத்து விதிமுறைகள் முழுமையாக கடைபிடிக்கப்படுவதையும் அவ்விதம் கொண்டு செல்லப்படும் கால்நடைகளுக்கு போதுமான இடவசதி, தீவனம் மற்றும், தண்ணீர் ஆகிய அத்தியாவசிய தேவைகள் அளிக்கப்படுவதை உறுதி செய்யவும், இப்பொருள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், காவல்துறை, வருவாய்துறை, போக்குவரத்துத் துறை, உள்ளாட்சிதுறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு வாகனங்களின் மூலம் கொண்டு செல்லப்படும் கால்நடைகளுக்கு அந்தந்தப் பகுதிகளில் உள்ள கால்நடை உதவி மருத்துவர்கள் மூலம் உரிய உடல் தகுதிச் சான்று பெற்ற பின்பே அக்கால்நடைகள் போக்குவரத்திற்காக அனுமதிக்கப்பட வேண்டும். மேலும் நகரப் பகுதிகளில் செயல்பட்டு வரும் இறைச்சிக் கூடங்களில் உணவுக்காக கால்நடைகள் வெட்டப்படும் போது முறையான சட்டவிதிகள் மற்றும் அறிவியல் பூர்வமான நடைமுறைகள் கடைபிடிக்க வேண்டும் எனவும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாநில எல்லைப் பகுதிகளில் போக்குவரத்து வாகனங்களின் மூலமாக சட்ட விதிமுறைகளை மீறி கால்நடைகளை கடத்துவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.