தென்காசியில் பாலியல் வன்முறைக்கு எதிரான பிரச்சார பேரணி; மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் துவக்கி வைத்தார்..

தென்காசி மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் பாலியல் வன்முறைக்கு எதிரான பிரச்சார பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் கொடியசைத்து துவக்கி வைத்தார். தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், தென்காசி மாவட்டத்தில் பாலின பாகுபாடு மற்றும் வன்முறைக்கு எதிரான பிரச்சாரம் 3.0 நிகழ்வு 25.11.2024 முதல் 24.12.2024 வரை மாவட்ட அளவிலும், வட்டார அளவிலும், அனைத்து ஊராட்சிகளிலும் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் பாலியல் வன்முறைக்கு எதிரான மாபெரும் கையெழுத்து இயக்கம் மற்றும் பாலியல் வன்முறைக்கு எதிரான பேரணியினை 25.11.2024 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் வைத்து கொடி அசைத்து துவக்கி வைத்தார். 

இப்பேரணி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுலவக வளாகத்திலிருந்து புறப்பட்டு புதிய பேருந்து நிலையம் சென்றடைந்தது. இப்பேரணியில் கலந்து கொண்ட மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் ஒன்றிணைவோம் குரல் கொடுப்போம், வன்முறைக்கு எதிராக, பொறுக்க மாட்டோம் குரல் எழுப்புவோம், குழந்தை திருமணத்தை ஒழிப்போம், குடும்ப வன்முறையைத் தடுப்போம். குழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்போம். புதுமைப் பெண் திட்டத்தைப் பரவலாக்குவோம். பெண் கல்வியை ஊக்குவிப்போம், பாலின பாகுபாட்டைக் களைவோம். பாலின வன்முறைக்கு எதிராக குரலெழுப்புவோம், பெண்களுக்கு சமூகத்தில் சம வாய்ப்புகளை வழங்குவோம். பாலின சமத்துவத்தைப் பரப்புவோம், பெண்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமையளிப்போம். பாலின வன்முறைக் குற்றங்களுக்கு எதிராக, குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்வோம், பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்வோம்.

புறக்கணிப்போம் புறக்கணிப்போம் பெண்களை இழிவுபடுத்துவதை, பெண்களுக்கு குடும்பத்தில் முடிவெடுக்கும் அதிகாரத்தை வழங்குவோம். பெண்களுக்கு ஊட்டச்சத்தான உணவு கிடைப்பதை உறுதி செய்வோம். வன்கொடுமையால் பாதிக்கப்பட்டோருக்கு துணைநிற்போம், பெண் உரிமையைப் பாதுகாப்போம். பாலின வன்முறைக்கு முடிவுகட்டுவோம் பாலின வன்முறையை அடியோடு ஒழிப்போம் பாலின வன்முறைக்கு தீர்வு காணுவோம். பாலின வன்முறையை முற்றிலும் ஒழிப்போம். பாலின சமத்துவத்தை ஆதரிப்போம், தடுப்போம் தடுப்போம் பெண் சிசுக்கொலையைத் தடுப்போம் காப்போம் காப்போம் பெண் குழந்தைகளைக் காப்போம் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி விழிப்புணர்வு வாசகங்களை கூறிக்கொண்டே பேரணியில் சென்றனர்.

இப்பேரணி முடிவில் பேரணியில் கலந்து கொண்ட அனைவரும் பாலின வன்முறைக்கு எதிரான உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க அலுவலர்கள், பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர். இப்பேரணியில் மாவட்ட வருவாய் அலுவலர் சீ.ஜெயச்சந்திரன், மகளிர் திட்ட இயக்குநர் இரா. மதி இந்திரா ப்ரியதர்ஷினி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மைக்கேல் அந்தோணி பெர்னாண்டோ, மாவட்ட சமுக நல அலுவலர் மதிவதனா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் கவிதா, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க உதவி திட்ட அலுவலர்கள் அ. பிரபாகர், மாரீஸ்வரன், சாமதுரை, கலைச்செல்வி, காமராஜ் மற்றும் வட்டார இயக்க மேலாளர்கள், வட்டார இயக்க ஒருங்கிணைப்பாளர்கள், சமுக நல துறை அலுவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தை சார்ந்த அலுவலர்கள், வட்டார வள வல்லுநர்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் உட்பட 1500 நபர்கள் பேரணியில் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!