அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என சமூக நல்லிணக்க கூட்டமைப்பு தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்த பத்திரிகை செய்தியில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆங்காங்கே பாலியல் துன்புறுத்தல்கள், ஃபோக்ஸோ நடவடிக்கைகள் தினந்தோறும் நடந்து வருகிறது. மேலும் ஆசிரியர்கள் மாணவர்களை கடுமையாக தாக்குவது, மாணவர்கள் ஆசிரியர்களை தாக்கும் செயல்களும் ஆங்காங்கே நடைபெறுகிறது.
பள்ளியில் உள்ள துப்புரவு வேலைகளை, மாணவ மாணவிகளை செய்ய வைப்பது, மாணவர்கள் சிலர் மாணவிகளிடம் தகாத முறையில் நடந்து கொள்வது, ஆசிரியர்கள் செல்போனை பயன்படுத்திக் கொண்டு பாடம் எடுக்காமல் நேரத்தை கழிப்பது, வருகை பதிவேட்டில் பதிவு செய்த பின்னர் பள்ளியை விட்டு வெளியேறுவது, உள்ளிட்ட சம்பவங்களை தடுக்கும் விதத்தில் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் கண்காணிப்பு கேமராக்கள் ஒவ்வொரு வகுப்பிலும் அமைக்கப்பட வேண்டும். இதனை தலைமை ஆசிரியர்கள் முறையாக கண்காணித்து தேவையான நேரங்களில், உரிய நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். அப்போது தான் பள்ளிகளில் நடக்கும் குற்றங்கள் குறையும்.
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில், கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட உள்ளதாக சமீபத்தில் பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார். அதேபோல் அரசு பள்ளிகளிலும், தனியார் பள்ளிகளிலும் ஒவ்வொரு வகுப்பிலும் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க அரசு உத்தரவிட வேண்டும் என்று சமூக நல்லிணக்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கட்டி அப்துல் காதர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.