தென்காசி மாவட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிகளுடன் கலந்தாய்வு கூட்டம்..

தென்காசி மாவட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் வாக்காளர் பெயர் சேர்த்தல் மற்றும் இறந்தவர்கள் பெயர் நீக்குதல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக தேவையான அறிவுரைகள் வழங்கப்பட்டது. இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறைத்திருத்தம் 2025க்கு 01.01.2025-ஐ தகுதி நாளாக கொண்டு 18 வயது பூர்த்தி அடைந்தவர்களை (அதாவது 31.12.2006 அல்லது அதற்கு முன்னர் பிறந்தவர்கள்) புதிய வாக்காளராக சேர்ப்பது தொடர்பான நடவடிக்கையாக 28.11.2024 வரை மனுக்கள் பெற திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்தால் (16.11.2024) மற்றும் (17.11.2024) ஆகிய நாட்களில் அனைத்து வாக்குசாவடி அமைவிடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு படிவம் 6, 6A, 6B, 7 மற்றும் 8 ஆகியவை பெறப்பட்டுள்ளன.

அந்த வகையில், தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் 17.11.2024 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் முன்னிலையில் இந்திய தேர்தல் ஆணையத்தால் தென்காசி மாவட்டத்திற்கு வாக்காளர் பட்டியல் கண்காணிப்பு அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ள விவேகானந்தன் (நிருவாக இயக்குநர். தமிழ்நாடு நகர்புறநிதி உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனம்) தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோருடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் புதிய வாக்காளர்கள் பெயர் சேர்த்தல், இறந்தவர்கள் பெயர்கள் நீக்குதல் ஆகியவை தொடர்பாக அரசு அலுவலர்களுக்கும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கும், பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அறிவுரைகள் வழங்கப்பட்டது. மேலும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளிடம் கேட்கப்பட்ட கருத்துகளுக்கு உரிய விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் வருகின்ற (23.11.2024) மற்றும் (24.12.2024) வாக்குசாவடி அமைவிடங்களில் நடக்கும் சிறப்பு முகாம்களை பயன்படுத்தி 18 வயது பூர்த்தியடைந்த புதிய வாக்காளர்களை சேர்க்கவும், காலம் சென்ற வாக்காளர்களை நீக்கம் செய்யவும், குடியிருப்பினை மாற்றம் செய்தவர்கள் முகவரி மாற்றம் செய்யவும் புதிய வாக்காளர் அடையாள அட்டை தேவைப்படுவோர் விண்ணப்பிக்கவும், மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் தங்களை மாற்றுத்திறனாளி வாக்காளர் என குறியீடு செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

எனவே, வாக்காளர்கள், பொதுமக்கள், இளைஞர்கள் இந்த நல்வாய்ப்பினை பயன்படுத்தி பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், முகவரி மாற்றம் போன்றவற்றிற்காக தங்களது வாக்குசாவடி அமைவிடங்களுக்கு நேரில் சென்று உரிய விண்ணப்ப படிவங்களை பெற்று பூர்த்தி செய்து வழங்கி பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். மேலும் https://voters.eci.gov.in/ என்ற இணையதள முகவரி மூலமாகவும், voter help line app என்ற கைப்பேசி செயலி மூலமாகவும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். மேலும் இது தொடர்பான சந்தேகங்களுக்கு 04633 1950 என்ற கட்டணமில்லா தொலைப்பேசியினை தொடர்பு கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

பூர்த்தி செய்து வழங்கும் படிவங்கள் விபரம்..

படிவம்-6. 18-வயது பூர்த்தி அடைந்தவர்கள் புதிய வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், படிவம் 6A வெளிநாடு வாழ் வாக்காளர்கள் தங்கள் பெயரை பதிவு செய்யவும், படிவம் 6 B வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைத்தல் படிவம் 7 ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர்களை நீக்கம் செய்யவும், படிவம் 8 முகவரி மாற்றம் செய்யவும், வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள விபரங்களை திருத்தவும் அல்லது புகைப்படத்தை மாற்றவும், புகைப்பட அடையாள அட்டை இல்லாதோர் புதிய அட்டை கோரி விண்ணப்பிக்கவும், மாற்றுத் திறனாளி வாக்காளர்கள் தங்களை மாற்று திறனாளி என பதிவுகள் செய்யவும் உரிய படிவங்களை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர், தெரிவித்துள்ளார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சீ.ஜெயச்சந்திரன், வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் துணை வாக்காளர் பதிவு அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி அரசியல் பிரமுகர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!