தென்காசி தலைமை அரசு மருத்துவமனையில் எக்ஸ்ரேவுக்கு பதிலாக ஜெராக்ஸ் எடுத்துக் கொடுத்ததாகவும், கையில் எலும்பு முறிவு என வந்த நோயாளிக்கு எக்ஸ்ரே பிலிம்க்கு பதிலாக ஜெராக்ஸ் எடுத்து கொடுத்ததாகவும் ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் செய்தி வெளியாகியது. இந்த செய்தி முற்றிலும் தவறானது என தென்காசி தலைமை மருத்துவமனை நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து தென்காசி அரசு தலைமை மருத்துவமனையின் கண்காணிப்பாளர் ஜெஸ்லின் தெரிவித்துள்ளதாவது, தென்காசி அரசு மருத்துவமனையில் டிஜிட்டல் எக்ஸ்ரே வசதி 15 வருடங்களுக்கும் மேலாக இயங்கி வருகிறது. தென்காசி மருத்துவமனையில் எக்ஸ்ரே பிரிவில் நவீன வசதியாக பேக்ஸ் ( PAX) என்னும் வசதி கடந்த ஒரு வருடமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. அதாவது எக்ஸ்ரே பிரிவில் எடுக்கப்படும் எக்ஸ்ரே மருத்துவமனை வெளி நோயாளிகள் பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, அறுவை அரங்கு ஆகிய இடங்களில் உள்ள கணிணியில் மருத்துவர்கள் உடனடியாக பார்க்கும்படி வசதி உருவாக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் எக்ஸ்ரே எடுக்கும் நபர்களுக்கு எக்ஸ்ரே படம் வழங்குவதற்கு, அரசு நிர்ணயித்த கட்டணம் ஐம்பது ரூபாய் பெற்றுக் கொண்டு, வழங்கப்பட்டு வந்தது. தற்போது அவர்களுக்கு கையிருப்பில் கட்டாயம் எக்ஸ்ரே பிலிம் வேண்டும் எனும் பட்சத்தில் மட்டும் அதற்கான அரசு நிர்ணயித்த கட்டணம் 50 ரூபாய் பெற்றுக் கொண்டு வழங்கப்பட்டு வருகிறது. நோயாளிகளுக்கு அவர்களுடைய பணம் தேவை இல்லாமல் செலவழிக்கப்படுவதை தடுக்கும் நோக்கத்தில் மட்டுமே இந்த வசதி நடைமுறைப்படுத்தப்பட்டு A4 தாளில் கட்டணம் ஏதுமின்றி பிரிண்ட் எடுத்துக் கொடுக்கப்படுகிறது. எக்ஸ் பிலிம் கட்டாயம் தேவைப்படும் நோயாளிகளுக்கும், நிர்பந்தித்து வேண்டும் என கேட்கும் நோயாளிகளுக்கும் அரசு நிர்ணயித்த தொகையான ஒரு படத்திற்கு 50 ரூபாய் பெற்றுக் கொண்டு படம் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், கடையநல்லூர் பகுதியை சேர்ந்த நோயாளி காளிபாண்டி என்பவர், A4 தாளில் எக்ஸ் ரே பிரிண்ட் எடுத்து மதியம் 12:45 மணிக்கு அவசர சிகிச்சை பிரிவில் பணியில் இருந்த எலும்பு முறிவு மருத்துவரிடம் சிகிச்சைக்கு சென்றுள்ளார். மருத்துவர் இவரது கையில் இருந்த எக்ஸ்ரே பிரிண்ட் அவுட்டை வாங்கிப் பார்க்காமல் நேரடியாக கணினியில் பதிவான இவருடைய எக்ஸ்ரே படத்தைப் பார்த்து அதன் அடிப்படையில் எலும்பு முறிவு எதுவும் இல்லை எனவும், மூன்று நாட்களுக்கு மாத்திரைகளும், கைக்கு ஓய்வும் எடுத்துக் கொண்டால் சரியாகி விடும் எனவும் கூறியிருக்கிறார்.
தன் கையில் உள்ள எக்ஸ்ரே பிரிண்ட் அவுட்டை வாங்கி சரியாக பார்க்காமல் மருத்துவர் அக்கறையில்லாமல் சிகிச்சை அளித்து விட்டார் என்ற தவறான புரிதலோடு நோயாளி புகார் அளித்துள்ளார். இந்த தவறான செய்தியே ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது என மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின் தெளிவுபடுத்தியுள்ளார். மேலும் தென்காசி அரசு மருத்துவமனை தொடர்பான செய்திகளின் உண்மை தன்மையை அறிந்து கொள்ள மருத்துவமனை நிர்வாகத்தை எந்த நேரத்திலும் தொடர்பு கொள்ளலாம் என ஊடகத் துறையினருக்கு கண்காணிப்பாளர் ஜெஸ்லின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.