தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், தென்காசி மற்றும் சங்கரன்கோவில் குருதி மையங்கள் சார்பாக குருதி கொடையாளர் தினம் 08.11.2024 வெள்ளிக்கிழமை மாலை 3.30 மணி அளவில் கொண்டாடப்பட்டது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 1 ஆம் தேதி தேசிய தன்னார்வ இரத்ததான தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் “இந்தியாவில் இரத்த மாற்ற மருத்துவத்தின் தந்தை” என்று கருதப்படும் ஒரு இந்திய மருத்துவர் டாக்டர் ஜெய் கோபால் ஜாலியின் பிறந்தநாளை நினைவு கூறுகிறது. அக்டோபர் மாதம் முழுவதும் தேசிய தன்னார்வ இரத்த தான மாதமாக கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில், தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் R.ஜெஸ்லின் வழிகாட்டுதலின் படி, 08.11.2024 வெள்ளிக் கிழமை மாலை 3.30 மணி அளவில் CME ஹாலில் வைத்து இந்திய தேசிய தன்னார்வ குருதி கொடையாளர் தின விழா கொண்டாட முடிவு செய்யப்பட்டது. தென்காசி மற்றும் சங்கரன்கோவில் குருதி மையங்கள் இணைந்து இவ்விழாவை நடத்தியது. தென்காசி அரசு மருத்துவமனை குருதி மைய மருத்துவர் டாக்டர் எம்.பாபு அடங்கிய மருத்துவ குழு போதிய ஏற்பாடுகளை செய்தனர். தென்காசி மாவட்டத்தில் கொண்டாடப்படும் முதலாவது தேசிய தன்னார்வ குருதி கொடையாளர் தின விழா என்பது இதன் சிறப்பு.



தென்காசி மற்றும் சங்கரன்கோவில் குருதி நிலையம் சார்பாக இந்த அக்டோபர் மாதம் முழுவதும் பல்வேறு ரத்த தான முகாம்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்டு அதிக அளவில் ரத்த அலகுகள் சேகரிக்கப்பட்டுள்ளது. மேலும் ரத்த வகை கண்டறியும் முகாம்களும் நடத்தப்பட்டுள்ளன. கல்லூரி மாணவர்களிடமும், பொதுமக்களிடமும் இரத்ததானம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பல்வேறு கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளன. தென்காசி மாவட்டத்தில் சிறப்பான ஒத்துழைப்பை வழங்கி அதிக ரத்த அலகுகளை குருதி வங்கிக்கு பெற்றுத்தந்த தன்னார்வ குருதி கொடையாளர் ஒருங்கிணைப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கி பாராட்டப்பட்டனர். அக்டோபர் மாதம் முழுவதும் தேசிய தன்னார்வ மாதமாக கருதப்பட்டு இதன் நிறைவு விழா சிறப்பாக நடைபெற்றது.
கடந்த 2023 ஆம் ஆண்டு தென்காசி மருத்துவமனை குருதி நிலையம் சார்பாக 32 ரத்ததான முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 1239 குருதி அலகுகள் சேகரிக்கப்பட்டுள்ளது. இதனுடன் தன்னார்வ கொடையாளர்கள் வழங்கிய ரத்த அலகுகளையும் சேர்த்து மொத்தமாக 2005 ரத்த அலகுகள் 2023 ஆம் ஆண்டு சேகரிக்கப்பட்டுள்ளது. இதேபோல் சங்கரன்கோவில் குருதி நிலையம் சார்பாக 30 ரத்ததான முகாம்கள் நடத்தப்பட்டு சுமார் 722 இரத்த அலகுகள் சேகரிக்கப்பட்டுள்ளது. தன்னார்வ கொடையாளர்கள் வழங்கிய குருதி அலகுகளையும் சேர்த்து சுமார் 1133 அலகுகள் சேகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தென்காசி குருதி மையம் சார்பாக 701 லிட்டரும், சங்கரன்கோவில் குருதி நிலையம் சார்பாக 396 லிட்டர் ரத்தமும் சேர்த்து மொத்தமாக 1097 லிட்டர் ரத்தம் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த நோயாளிகளுக்கு முழுமையாக பயன் படுத்தப்பட்டுள்ளது.
தன்னார்வ குருதி கொடையாளர் ஒருங்கிணைப்பாளர்களை பாராட்டும் விதமாக நடந்த இவ்விழாவில் சிறப்பு தலைமை விருந்தினராக தென்காசி மாவட்ட இணை இயக்குனர் நலப்பணிகள் டாக்டர். பிரேமலதா கலந்து கொண்டு அதிக ரத்ததானம் வழங்கிய குருதிக்கொடையாளர் மற்றும் ஒருங்கிணைப்பாளர்களை வாழ்த்தி பாராட்டி சிறப்பு சான்றிதழும் பதக்கமும் வழங்கினார். சுமார் 90-க்கும் மேற்பட்ட ஒருங்கிணைப்பாளர்கள் இந்த விழாவில் கவுரவிக்கப்பட்டனர். நிகழ்ச்சியின் நிறைவாக செவிலியர் சண்முகப்பிரியா நன்றி கூறினார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.