தென்காசியில் புறவழி ரயில் பாதை அமைக்க வேண்டும்; தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் தீர்மானம்..

கூடுதல் ரயில்கள் இயக்குவதில் உள்ள சிக்கலை போக்க தென்காசியில் புறவழி ரயில்பாதை அமைக்க வேண்டும் என தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்க ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தின் மூன்றாவது முக்கிய ஆலோசனை கூட்டம் சங்க தலைவர் பாண்டியராஜா தலைமையில் பாவூர்சத்திரத்தில் நடைபெற்றது. கூட்டத்தில், சங்க செயலாளர் ஜெகன் முன்னிலை வகிக்க தென்காசி மாவட்டம் சார்ந்த பல்வேறு ரயில்வே கோரிக்கைகள் மற்றும் குறைகள் குறித்து விவாதிக்கப்பட்டு பின்னர் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

செங்கோட்டையில் புறப்படும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலின் நேரத்தை 7 மணிக்கு மேல் புறப்படும் வகையில் மாற்றம் செய்து பொதிகை எக்ஸ்பிரஸ்-ன் வேகத்தை அதிகரிக்க வேண்டும். செங்கோட்டை – சென்னை எழும்பூர் சிலம்பு வாரம் மும்முறை ரயில் மற்றும் செங்கோட்டை – தாம்பரம் வாரம் மும்முறை ரயில் ஆகியவற்றில் பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரித்து சேவைகளின் நாட்களை அதிகரிக்க வேண்டும். செங்கோட்டை – மயிலாடுதுறை மற்றும் செங்கோட்டை – ஈரோடு ரயில்களில் முன்பதிவு பெட்டிகளையும் சேர்த்து கூடுதல் பெட்டிகளை இணைத்து இயக்க வேண்டும்.

செங்கோட்டை – நெல்லை காலை ரயில், நெல்லை – செங்கோட்டை மாலை ரயில் ஆகியவற்றில் தனியாக மகளிர் பெட்டி ஒன்றையும் சேர்த்து கூடுதல் பெட்டிகள் இணைத்து ரயிலை இயக்குதல் வேண்டும். தென்காசி வழியாக புதுடெல்லி மற்றும் மும்பை ரயில்களை இயக்குதல் வேண்டும். மீட்டர்கேஜ் காலத்தில் இயங்கியதைப் போல தென்காசி வழியாக நெல்லை – கொல்லம் நேரடி பகல் நேர ரயில்களை இயக்க வேண்டும். தென்காசி வழியாக கோவை மற்றும் பெங்களூருக்கு நிரந்தர ரயில்களை இயக்க வேண்டும். ஞாயிற்றுக்கிழமை தோறும் இயங்கும் சிறப்பு ரயில்களான நெல்லை – தாம்பரம் மற்றும் நெல்லை – மேட்டுப்பாளையம் ரயில்களை நிரந்தரமாக வேண்டும்.

அடிப்படை கட்டமைப்பை பொருத்தவரையில், கீழப்புலியூர், பாவூர்சத்திரம், கீழக்கடையம், அம்பை, கல்லிடை, சேரன்மகாதேவி, நெல்லை டவுண் ஆகிய ரயில் நிலையங்களில் நடைமேடையை 24 பெட்டிகள் நிறுத்தும் அளவுக்கு நீட்டிக்க வேண்டும். கீழப்புலியூர் ரயில் நிலையத்தை தென்காசி டவுண் என பெயர் மாற்றம் செய்து கீழப்புலியூரிலிருந்து கடையநல்லூர் செல்லும் வகையில் புறவழி ரயில் பாதை அமைக்க வேண்டும். தென்காசி – செங்கோட்டை மற்றும் நெல்லை டவுண் – நெல்லை சந்திப்பு இடையே இரட்டை அகல ரயில் பாதை அமைக்க வேண்டும். நெல்லை டவுண் மற்றும் தென்காசி சந்திப்பு ரயில் நிலையங்களில் ரயில்களுக்கு நீரேற்றும் வசதி ஏற்படுத்தி ரயில் முனையங்களாக மாற்ற வேண்டும்.

சங்கரன்கோவில் – ராஜபாளையம் இடையே கரிவலம் வந்தநல்லூர் ரயில் நிலையத்தை மீண்டும் திறக்க வேண்டும். நெல்லை சந்திப்பில் கூடுதலாக 2 நடைமேடைகளும், செங்கோட்டையில் கூடுதலாக ஒரு நடைமேடையும் அமைக்க வேண்டும். நெல்லை தென்காசி ரயில் வழித்தடத்தில் உள்ள ரயில் நிலையங்களின் நடைமேடைகளில் உள்ள செடிகொடி முட்புதர்களை சுத்தம் செய்ய வேண்டும். மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆலோசனைக் கூட்டத்தில் துணைத் தலைவர் சுரேஷ், நிர்வாகிகள் சந்துரு மகேந்திரன், ராம்குமார் சிவகுமார், ராஜசேகர், செல்வா, காசி பாண்டியன் ஆகியோர் பங்கேற்றனர். துணைச் செயலாளர் தினேஷ் பாபு நன்றி கூறினார்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!