தென்காசி ரயில் நிலையத்தில் புற வழி ரயில் பாதை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார், ரயில்வே ஆலோசனை குழு உறுப்பினரும் தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத் தலைவருமான பாண்டியராஜா இணைந்து தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில், தென்காசி மாவட்டத்தில் ரயில் தேவைகள் மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப அதிகரித்துக் கொண்டே வருகிறது. நெல்லை ரயில் நிலையத்தில் ரயில்களை பராமரிப்பு செய்யக்கூடிய வசதிகள் இருப்பதாலும், செங்கோட்டை ரயில் நிலையத்தில் கூடுதல் வசதிகள் இல்லாத காரணத்தாலும் கூடுதல் ரயில்கள் இயக்குவதற்கு தென்காசி ரயில் நிலையத்தில் புறவழி ரயில் பாதை என்பது அவசியமாகிறது.
கீழப்புலியூர் ரயில் நிலையத்திலிருந்து தென்காசி ரயில் நிலையத்திற்குள் வராமல் புற வழியாக கடையநல்லூர் செல்லும் வகையில் புறவழி ரயில் பாதை (பைபாஸ் லைன்) என்பது அவசியமாகிறது. தென்காசி பைபாஸ் லைன் இல்லாத, காரணத்தினால் தெற்கு ரயில்வே சார்பாக தென்காசி மாவட்டத்திற்கு கூடுதல் ரயில்கள் இயக்க முடியாத சூழல் உள்ளது. ஆதலால், தாங்கள் இந்த தொழில்நுட்ப குறையை தீர்க்கும் வகையில் தென்காசி ரயில் நிலையத்துக்கு கிழக்கே பைபாஸ் ரயில்வே லைன் அமைப்பதற்கு தெற்கு ரயில்வேயை வலியுறுத்துமாறும், நிலம் கையகப்படுத்தும் பணியைத் தொடங்குமாறும், கீழப்புலியூர் ரயில் நிலையத்தை தென்காசி டவுன் ரயில் நிலையம் என மாற்றும் படியும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என தென்காசி எம்எல்ஏ பழனிநாடார் தெரிவித்துள்ளார்.
மேலும், பாவூர்சத்திரம் மற்றும் ஆலங்குளத்தில் போக்குவரத்து காவலர்களை நியமனம் செய்து நகர் பகுதிக்குள் ஏற்படும் விபத்துக்களை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தென்காசி எம்எல்ஏ பழனிநாடார், தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தலைவர் பாண்டியராஜா இணைந்து மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில், பாவூர்சத்திரம் ரயில்வே மேம்பாலத்தை தவிர மற்ற பகுதிகளில் நெல்லை தென்காசி நான்கு வழிச்சாலை பணிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், பாவூர்சத்திரம் மற்றும் ஆலங்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் விபத்துக்கள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதற்கு புதிதாக அமைக்கப்பட்ட நான்கு வழிச்சாலையை பயன்படுத்துவதற்கு வாகன ஓட்டிகள் இடையே போதுமான விழிப்புணர்வு இல்லாததும் காரணமாக உள்ளது.
ஆதலால், ஆலங்குளம் பாவூர்சத்திரம் சுற்று வட்டார பகுதிகளில் நடைபெறும் சாலை விபத்துக்களை தடுப்பதற்கு போக்குவரத்து காவலர்களை கூடுதலாக நியமனம் செய்து ஆசாத் நகர் ஆலங்குளம் இடையே நடைபெறும் சாலை விபத்துக்களை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும், வாகனங்கள் கடக்கும் பகுதியில் கூடுதலாக சாலை பாதுகாப்பு தடுப்புகள், எச்சரிக்கை விளக்குகள் அமைக்கும் படியும் தென்காசி எம்எல்ஏ பழனிநாடார் கேட்டுக் கொண்டுள்ளார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.