தென்காசி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறையினரால் கால்நடை கணக்கெடுப்பு பணி தொடங்கப்பட உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்துள்ளார். இது பற்றிய செய்திக்குறிப்பில், இந்தியாவில் கால்நடை கணக்கெடுப்பு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை எடுக்கப்படுகிறது. இதுவரை 20 கால்நடை கணக்கெடுப்புகள் நடைபெற்றுள்ளன. விரைவில் 21வது கால்நடை கணக்கெடுப்பு நாடு முழுவதும் தொடங்க உள்ளது. தென்காசி மாவட்டத்திற்கும் இந்தப்பணி கால்நடை பராமரிப்புத் துறையினரால் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இந்தப் பணியினை மேற்கொள்ள தென்காசி மாவட்டத்தில் 169 கால்நடை கணக்கெடுப்பாளர்கள் மற்றும் 33 மேற்பார்வையாளர்களுக்கு நேர்முகப் பயிற்சி மற்றும் களப்பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இக்கணக்கெடுப்பு வருவாய் கிராமம் வாரியாகவும், நகர்ப்பகுதியில் வார்டு வாரியாகவும் நடைபெற உள்ளது.
இந்த கணக்கெடுப்பின் மூலம் கிராம மற்றும் நகர்ப்பகுதிகளில் வளர்க்கப்பட்டு வரும் 16 வகையான கால்நடைகளின் எண்ணிக்கை, இனம், வயது பாலினம் கால்நடைகளின் எண்ணிக்கை போன்ற துல்லியமாக விவரங்கள் சேகரிக்கப்படும். கணக்கெடுத்தால் தான் கால்நடை பராமரிப்பிற்கான எதிர்கால திட்டங்களை தீட்டுதல், செயல்படுத்துதல் மற்றும் கண்காணித்தல் ஆகியவை சிறப்பாக செய்ய இயலும். கால்நடைகளுக்கு எதிர்காலத்தில் தேவைப்படும் தீவனம், கால்நடை நோய்த்தடுப்பூசி, கால்நடை மருந்துகள் உற்பத்தி போன்றவற்றை தட்டுப்பாடு இல்லாமல் தயாரிக்க கால்நடைகளின் எண்ணிக்கை அவசியமானது. வேகமாக வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப கால்நடைகளில் இருந்து உணவுப் பொருட்களான பால், பாலாடைக்கட்டி, பன்னீர், தயிர், வெண்ணெய், நெய், ஆட்டிறைச்சி, பிற இறைச்சிகள், முட்டை போன்றவற்றை தட்டுப்பாடின்றி உற்பத்தி செய்ய கால்நடை கணக்கெடுப்புப் பணி மிகமிக முக்கியமானதாகும்.
கால்நடைகளில் இருந்து மனிதர்களுக்கு பரவக்கூடிய விலங்குவழி தொற்று நோய்களான ரேபிஸ் எனப்படும் வெறிநோய், புரூசெல்லா எனப்படும் கருச்சிதைவு நோய், எலிக்காய்ச்சல் எனப்படும் மஞ்சள் காமாலை போன்ற 100க்கும் மேற்பட்ட நோய்களை தடுக்கவும், கட்டுப்படுத்தவும் கால்நடைகளின் எண்ணிக்கை அவசியமானது. கடும்மழை, புயல், வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களால் கால்நடைகள் பாதிக்காமல் தடுக்கவும், கால்நடைகளுக்கு பாதிப்புஏற்பட்டால் உரிய நிவாரணம் அளிக்கவும் கால்நடை கணக்கெடுப்பு முக்கியமானதாகும். கால்நடைகளுக்கான கொட்டகை வசதி, கால்நடை காப்பீடு வசதி, கால்நடை தீவனஉற்பத்தி போன்றவற்றை திட்டமிட கால்நடை எண்ணிக்கை இன்றியமையாதது.
கால்நடை கணக்கெடுப்பின் வழிமுறைகள்: அனைத்து கிராமங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் இக்கணக்கெடுப்புப் பணி நடைபெறும். கால்நடை உள்ள மற்றும் இல்லாத அனைத்து வீடுகள், நிறுவனங்கள் அரசு மற்றும் தனியார் பண்ணைகள், வழிபாட்டுத்தலங்கள் விலங்கு நலமையங்களில் உள்ள பசுமடங்கள் உள்ள விவரங்கள், தொலைபேசிஎண், முக்கிய தொழில், அவரிடம் உள்ள நிலத்தின் அளவு, அவரிடம் உள்ள கால்நடை எண்ணிக்கை, இனம், வயது, பாலினம் போன்ற விவரங்கள் சேகரிக்கப்படும். கால்நடை வைத்துள்ளவரின் பெயர், முகவரி, ஆதார் சேகரிக்கப்படும். எனவே கால்நடை கணக்கெடுப்பாளர்கள் உங்கள் பகுதியில் விவரங்கள் சேகரிக்க வரும் போது அவர்களுக்கு ஒத்துழைப்பு நல்கி. உரிய விவரங்களை அளித்து கால்நடை கணக்கெடுப்புப் பணி ‘துல்லியமாக நடைபெறவும், எதிர் எதிர்காலத்தில் கால்நடைகள் வளம் மற்றும் நலத்துடன் மனிதர்களுக்கான உணவுப் பாதுகாப்பு மற்றும் திட்டமிடவும் நமது மாவட்டத்தில் உள்ள ஒவ்வொருவரும் தேவையான தரவுகளை அளித்திட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.