போக்சோ எனும் என்கவுண்டர்; கருணையாளர்கள் காக்கப்பட வேண்டும்-சிந்தனையை முன் வைக்கிறார் தென்காசி மாவட்ட சமூக ஆர்வலர் பூ.திருமாறன்..

சகித்துக் கொள்ள முடியாத ஒருவருக்கு முடிவு கட்டவோ, தற்காப்புக்காகவோ, தப்புவதை தடுக்கும் போதோ என்கவுண்டர் நடைபெறுகிறது. எனினும் தவறான என்கவுண்டரில் இருந்து கருணையாளர்கள், சமூக சேவை புரிபவர்கள் காக்கப்பட வேண்டும் என்ற அழுத்தமான சிந்தனையை முன் வைக்கிறார் தென்காசி மாவட்டம் வெங்கடாம்பட்டியை சேர்ந்த சமூக நல ஆர்வலர் பூ.திருமாறன். இது குறித்து அவர் விவரித்துள்ளதாவது, அமைதி, ஒழுக்கம், அப்பழுக்கற்ற அன்பு நிறைந்திருந்த நம் முன்னோர்கள் வாழ்ந்த பூமியின் இப்போதைய நிலை மிகவும் கவலைக்குரியதாக இருக்கிறது. யுத்த சப்தம், இரத்தக்களறி, அருவருக்கத்தக்க மனித நடவடிக்கைகள், சூது, சூழ்ச்சி, அசிங்கமான உறவுகள் என நாஸ்டர்டாம் கணிப்புகளை மிஞ்சி, அகிலத்திரட்டு பதிவுகளை விஞ்சி மனிதனின் வாழ்க்கை “உயிருடன் நரகம்” என்ற நிலைக்குப் போய்விட்டது.

மனித உரிமை பேசுபவர்கள், அதற்கான சட்டம் எல்லாம் இருந்தும் துப்பாக்கி சத்தம் ஆங்காங்கே கேட்டுக் கொண்டு தான் இருக்கிறது. “இது நரகாசுர வதம், தேவையான ஒன்றுதான்” என்கிறது அதனை ஆதரிக்கும் கூட்டம். இது முற்றிலும் தவறானது என்கிறது ஒரு ஜீவகாருண்ய கூட்டம். சுட்டுக் கொல்லப்பட்டவருக்கும் மனைவி, மக்கள், வாழும் ஆசை என எல்லாம் இருந்திருக்கும். அவர் இறந்ததால் குடும்பத்திற்கு கஷ்டம், படிப்பு, திருமணம், பாதுகாப்பு எல்லாமே கேள்விக்குறியாகி விடும். இந்த வலி ஆழமானது.

ஆனால் சமீப காலமாக ஒரு என்கவுண்டர் வேறு முகவரியில், வேறு அடையாளத்துடன் சமூகத்தில் ஊடுருவியுள்ளது. அதுதான் “போக்சோ என்னும் என்கவுண்டர்”. குழந்தைகள் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்ட சட்டம் தற்போது நல்லவர்களையும், ஒழுக்கமானவர்களையும், அசிங்கப்படுத்த சுயநலவாதிகளால் பயன்படுத்தப்படுகிறதோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. சிறார் பாதுகாப்பிற்கான சட்டம், தவறாக நடக்காதவர்களையும் சமூகத்தில் அசிங்கப்படுத்தவும், அந்நியப்படுத்தவும் பயன்படும் ஒரு கருவியாகி விடுமோ என்ற பேரச்சம் நிலவுகிறது.

போக்சோ குறித்த பயம் குழந்தைகளை சீரழிப்பவர்களுக்கு இல்லை. மாறாக ஆசிரியர்கள், மருத்துவர்கள், குழந்தைகளுக்காக சேவை புரியும் அனைவரையும் இந்த பயம் கவ்வியுள்ளது. இந்த “போக்சோ என்கவுண்டரில்” ஒரு குற்றமற்றவர், ஒழுக்கமானவர் மாட்டப்படும் போது அவர் உயிருடன் இருக்கும் போதே நடைப்பிணமாகி விடுகிறார். சில சமயங்களில் குடும்பத்துடன் உயிரை மாய்த்துக் கொள்ளும் சூழல் கூட வரலாம். கட்டிய வீடு, வாழ்ந்த ஊர் எல்லாவற்றையும் விட்டுவிட்டு வெளியேற வேண்டிய அவமானம். குற்றம் சுமத்தப்பட்டவரை ஊரார் சொல்லும் இழிச்சொல், கிண்டல், கேலி!

ஒரு மருத்துவர் இனி ஒரு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கும் போதும், ஏன் அறுவை சிகிச்சையின் போதும் அந்த அறுவை சிகிச்சை அரங்கில் பெற்றோரை வைத்துக் கொள்ள வேண்டியுள்ளது. ஆசிரிய பெருமக்கள் காலை முதல் மாலை வரை அவர்களுக்கு எந்த குழந்தையால், எந்த பெற்றோரால் மானம் போகுமோ என்ற கவலை! உரக்கப் பேசும் ஒரு உண்மையான ஆசிரியரை ஒரு மட்டமான மனிதர் பொய்க் குற்றச்சாட்டால் மாட்டி விட முடிகிறது. சமூகத்தில் கௌரவமாக வேலை செய்யும் ஒரு மருத்துவரை எளிதாக மானபங்கப்படுத்த தோதுவாக இருக்கிறது சூழல்.

அயோக்கியர்கள் எல்லா துறையிலும் இருக்கிறார்கள். ஆசிரியரும், மருத்துவரும் விதிவிலக்கல்ல. ஒரு ஆணும், சிறுவனும், பெண்ணும் சிறுமியும் பேசுவதையே உலகம் சந்தேகக் கண்ணோடு பார்க்கும் வகையில் போக்சோவின் அறிமுகம் போபால் விஷவாயு தாக்கியதை காட்டிலும் தாக்கி வருகிறது. ஒரு பெண் ஆசிரியரும் ஒரு மாணவியும் சகஜமாக பேச முடியாத மனோநிலை உருவாகியுள்ளது. பேச்சு, ஸ்பரிசம், பார்வை தவறாகப் புரியப்பட்டாலே உதவப் போனவருக்கு ஆபத்து தான். காப்பகங்கள், கருணை இல்லங்கள், ஆதரவற்றோர் விடுதிகள் நடத்தும் கன்னியாஸ்திரிகள், கல்வி போதிக்கும் ஆசிரியர்கள் தற்போதைய சூழ்நிலையை கண்டு மிகவும் வேதனைப்படுகின்றனர். இந்நிலை தொடர்ந்தால் ஆசிரியர்களும் கூட மாணவ, மாணவிகளை கண்டிக்க இயலாது. கண்டிப்பாரற்ற குழந்தைகளின் எதிர்காலம் என்னவாகும்?

கொரோனாவுக்கு பிறகு இளம் வயது குற்றங்கள் அதிகரித்துள்ளன. போக்சோ பிரிவில் வழக்குகள் பதிவு செய்யும் காவல்துறை மீது முழுமையாக குற்றம் சாட்ட முடியாது. சந்தர்ப்ப சாட்சியங்கள், வாக்குமூலம், வற்புறுத்தல், கர்வம், அரசியல், சாதி மத துவேஷம், அற்ப சண்டைகள், வஞ்சம் என பல மூலக்கூறுகள் இதில் உள்ளன. அடிப்படை பொது விழிப்புணர்வு, பெற்றோருக்கான பிரத்தியேக விழிப்புணர்வு, பிள்ளைகள் போக்சோவை தவறாக பயன்படுத்தாதிருக்க வீடு மற்றும் பள்ளிகளில் விழிப்புணர்வு உடனடியாக அரசு தரப்பிலும், கல்வி நிலையங்கள் தரப்பிலும் செய்தாக வேண்டும்.

“வேலியே பயிரை மேய்கிறது” என்பதை உண்மையாக்கும் வகையில் குழந்தைகள் நலம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்பவர்களே குழந்தைகளுக்கு எதிரான செயல்களில் கமுக்கமாக ஈடுபடுவதும், மாட்டுவதும், தப்பிப்பதும் என தகவல்கள் கிடைக்கின்றன. போக்சோ தவறாக பயன்படுத்தப்பட்டிருப்பதை யாரும் மறுக்க முடியாது. போக்சோ வழக்கு போடப்பட்டு திருமணம் செய்து கொண்டவர்களும் ஏராளம். எய்ட்ஸ் நோய்க்கு செய்த பிரச்சாரத்தை விட போக்சோ சட்டம் பற்றிய பிரச்சாரம் 10 மடங்கு பெரிதாக செய்தாக வேண்டும்.

மைனர், மேஜர் வயது வரம்பை மறுசீராய்வு செய்ய வேண்டும். பள்ளிகளில் சீருடை ஒழுங்காக இருத்தல் வேண்டும். போதனை வகுப்புகள், ஒழுக்கக் கல்வி, படிப்பினை தரும் கதைகள், பாலர் வகுப்பிலிருந்து உடனடியாக துவக்கப்பட வேண்டும். ஒழுக்கமுடைய அலங்காரம் பற்றி போதிப்பவர்கள் முதலில் ஒழுக்கமான நேர்த்தியான உடையணியப் பழக வேண்டும். மருத்துவர்கள், நோயாளிச் சிறுவர் சிறுமியர், ஆசிரியர், மாணவர், விடுதி வார்டன், தங்கியுள்ள சிறுவ சிறுமியர் என எல்லோருக்கும் வரம்பு மீறல் குறித்து தெரிந்திருக்க வேண்டும், வரம்பு மீறுபவர்கள் எங்கே இருப்பர், எப்படி வருவர், வரம்பு மீறுவது எத்தகைய தவறு, அதன் விளைவுகள் எவ்வாறு இருக்கும் என்று தெரிந்திருத்தல் இக்கால அவசியம்.

பால் மணம் மாறாத பச்சிளங் குழந்தைகளுக்கும் சரியான தொடுதல் தவறான தொடுதல் குட்டச், பேட்டச் பற்றி சொல்லிக் கொடுக்கும் நிலை உள்ளதால், சரியான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். சட்டங்கள் தொலைநோக்குப் பார்வையோடு மட்டுமின்றி தனி மனித உரிமை மீறல் இல்லாமல், தாய், தந்தை, ஆசிரியர், மருத்துவர், சமூக சேவைகளில் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணிப்பவர்களையும் கவனத்தில் கொண்டு உருவாக்கப்பட வேண்டும். தவறானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். கருணையாளர்கள் காக்கப்பட வேண்டும். நல்ல ஆசிரியர் அசிங்கப்படக்கூடாது. மக்கள் சேவையாற்றும் மனிதநேய மருத்துவர் தவறு செய்யாமல் அவமானப்படக்கூடாது. குழந்தைகள் இல்லம் நடத்துபவர்கள் உரிய காரணமின்றி களங்கப்படக்கூடாது. போக்சோ என்னும் அஸ்திரம் நிஜமான குற்றவாளிகளை நிர்மூலமாக்கட்டும்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!