தென்காசி மாவட்டம் சுரண்டை காமராஜர் அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலகு எண் 191 சார்பாக பேரிடர் மேலாண்மை பயிற்சிப் பட்டறை நிகழ்ச்சி கல்லூரி முதல்வர் ஜெயா தலைமையில் நடந்தது. என்எஸ்எஸ் திட்ட அலுவலர் வீரபுத்திரன் முன்னிலை வகித்தார். மாணவி அபிதா பெல்சியா வரவேற்றார். சுரண்டை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி துறை நிலைய அலுவலர் உ.ரமேஷ் தலைமையில் பேரிடர் மேலாண்மை குறித்த சிறப்புரை மற்றும் பயிற்சி வழங்கினார். அவருடன் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் ஏழு பேர் வந்திருந்தனர். பேரிடர் சமயத்தில் பாதிப்புக்கு உள்ளான நபர்களை எப்படி மீட்பது பற்றிய செயல்முறை மூலம் விளக்கம் அளித்தனர். திடீர் தீ விபத்தை தடுப்பதற்கான வழிகளை விளக்கி அணைக்கும் முறைகளை செய்து காட்டினர்.



நீர் நிலைகளில் எதிர்பாராத விபத்தில் இருந்து மீளும் வழிமுறைகள், காடுகள் சார்ந்த பகுதிகளில் பயணத்தின் போது தயார் நிலையில் இருக்கக்கூடிய பாதுகாப்பு வழிமுறைகள் போன்றவை குறித்த விழிப்புணர்வையும் பாதுகாப்பிற்கான பயிற்சிகளையும் வழங்கினர். பொருளியல் துறைத் தலைவர் முனைவர் பா.செல்வகணபதி, தமிழ்த்துறை தலைவர் முனைவர் தா.திருநாவுக்கரசு மற்றும் வணிக நிர்வாகவியல் துறைத் தலைவர் முனைவர் ஆ. பிரான்சிஸ் ஆபிரகாம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இப்பயிற்சிப் பட்டறையில் மாணவ, மாணவிகள் 600 பேருக்கு மேல் கலந்து கொண்டு பயன் பெற்றனர். தமிழ்த்துறை கௌரவ விரிவுரையாளர் முனைவர் விஜய் தொகுத்து வழங்கினார். முதுநிலை முதலாமாண்டு நுண்ணுயிரியல் துறை மாணவர் அருண்குமார் நன்றி கூறினார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.