தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதியில் மூன்றரை வயது சிறுமி 5 கிலோ மீட்டர் தூரத்தை ஸ்கேட்டிங் மூலம் 50 நிமிடத்தில் கடந்து புதிய சாதனை படைத்துள்ளார். சாதனை சிறுமியை தென்காசி எம்எல்ஏ பழனிநாடார், சுரண்டை நகரமன்ற தலைவர் வள்ளிமுருகன் உள்ளிட்ட பலரும் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர். தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதியை சேர்ந்தவர் அகஸ்டின் செல்வராஜ். இவர் தனியார் வங்கியில் உதவி மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி திவ்யா. இவர்களுக்கு கேடன்ஸ் மார்ஷியா என்ற மூன்றரை வயது பெண் குழந்தை உள்ளது. சிறுமி மார்ஷியா சுரண்டை எய்ம் பார் லைப் மூலம் 3 மாதம் ஸ்கேட்டிங் பயிற்சி பெற்று 5 கி.மீ தூரத்தை கடந்து உலக சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்துள்ளார்.



இந்நிலையில், சிறுமியின் ஸ்கேட்டிங் நிகழ்ச்சியை தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார், சுரண்டை நகர்மன்ற தலைவர் வள்ளி முருகன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். சுரண்டை அருகே உள்ள இரட்டை குளம் பகுதியில் தொடங்கி சுரண்டை அண்ணா சிலை வரையிலான 5 கிலோமீட்டர் தூரத்தை 50 நிமிடத்தில் கடந்து சாதனை படைத்தார் சிறுமி மார்ஷியா. சாதனை படைத்த சிறுமியை வழி நெடுகிலும் பெற்றோர், உறவினர்கள், பொதுமக்கள் அனைவரும் உற்சாகத்துடன் பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தனர். அண்ணா சிலை வந்தடைந்த சிறுமிக்கு உலக சாதனைக்கான சான்றிதழும், கேடயமும் சிவராமன் வழங்கினார். அதனை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார், சுரண்டை நகர்மன்ற உறுப்பினர் வள்ளி முருகன் வியாபாரிகள் சங்க தலைவர் காமராஜ், ரத்னா சில்க்ஸ் ரத்தினசாமி, எய்ம் பார் லைப் நிர்வாகி முருகேஸ்வரி, ஜெயராஜ் ஸ்கேட்டிங் மாஸ்டர், தமிழ்நாடு ஸ்பீடு ஸ்கேட்டிங் சங்க தென்காசி மாவட்ட செயலாளர் சக்திவேல் ஆகியோர் பரிசுகள் வழங்கி பாராட்டினர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.