தென்காசி மாவட்டம், கடையநல்லூர் வட்டம், நகரம் (ம) இராமசாமியாபுரம் கிராமம் ஜெயராம் திருமண மண்டபத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் 67 பயனாளிகளுக்கு ரூ.24 இலட்சத்து 91 ஆயிரத்து 200 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் வழங்கினார். தென்காசி மாவட்டம் கடையநல்லூர் வட்டத்திற்குட்பட்ட நகரம் (ம) இராமசாமியாபுரம் கிராமம் ஜெயராம் திருமண மண்டபத்தில் 09.10.2024 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் தலைமையில், தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் மரு.ராணி ஸ்ரீகுமார், வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் மரு.சதன் திருமலைக்குமார் ஆகியோர் முன்னிலையில் மனுநீதிநாள் முகாம் நடைபெற்றது.
இம்முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்தாவது, தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாட்டில் பல்வேறு எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். கடந்த வாரம் தமிழ்ப்புதல்வன் திட்டத்தினை துவக்கி வைத்தார். இதன் மூலம் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பயன்பெறுவர். இது போன்று சுகாதாரத்துறையின் மூலம் வருமுன் காப்போம் திட்டம் மற்றும் அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தையும், பல்வேறு நலன்களையும் கருத்தில் கொண்டு தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் சீரிய முறையில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம், பொதுமக்கள் அனைவரும் பல்வேறு சிகிச்சைகளுக்கு பணம் இல்லாமல் மருத்துவனைகளில் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். எனவே, உங்கள் பகுதியில் உள்ள அரசு அலுவலகங்களை தொடர்பு கொண்டு அரசின் அனைத்து சலுகைகளையும் பெற்று வாழ்வில் முன்னேற வேண்டும். மேலும், பொதுமக்கள் தங்கள் பகுதியில் ஏதேனும் குறைகள் இருந்தால் மாவட்ட ஆட்சியரின் வாட்சப் எண்: 7790019008 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். அளிக்கப்பட்ட புகார்களில் தகுதி வாய்ந்த கோரிக்கை மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டு கோரிக்கை நிறைவேற்றப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தெரிவித்தார்.
இம்முகாமில் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் மரு. ராணி ஸ்ரீகுமார் தெரிவித்ததாவது. தமிழ்நாடு முதலமைச்சர் மக்களின் இருப்பிடத்திற்கே சென்று கோரிக்கை மனுக்களைப் பெற்று அனைத்து மக்களின் குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்வதற்காக உங்களைத்தேடி உங்கள் ஊரில் என்ற உன்னத திட்டத்தினையும், மனுநீதி நாள் முகாமினையும் மாதம் ஒரு முறை மனுக்களை பெற்று நலத்திட்ட உதவிகள் பொதுமக்களுக்கு சென்றடைகிறதா நேரடியாகக் கண்காணித்து மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி வருகிறார். மகளிருக்கு மாதம் தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம், மகளிருக்கு கட்டணமில்லா பயணம் விடியல் திட்டம், புதுமைப்பெண் திட்டம் போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. எனவே, பொதுமக்கள் அனைவரும் தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ள அனைத்து திட்டங்களையும் கேட்டறிந்து பயன்பெற வேண்டுமென்று தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் மரு.ராணி ஸ்ரீகுமார் தெரிவித்தார்.




இம்முகாமில் வருவாய்த் துறையின் மூலம் 35 பயனாளிகளுக்கு ரூ.22,68,000 மதிப்பிலான இலவச வீட்டுமனைப் பட்டாக்களையும், சமூக பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் 03 பயனாளிகளுக்கு மாதம் ரூ.1500 (வாழ்நாள் முழுவதும்) மொத்தம் ரூ.54,000-க்கான முதியோர் ஓய்வூதியத்திற்கான ஆணையினையும், சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 4 பயனாளிகளுக்கு புதிய உறுப்பினர் பதிவினையும், குடிமைப்பொருள் வழங்கல் துறையின் மூலம் 14 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அடையாள அட்டைகளையும், வேளாண்மைத்துறை மூலம் 07 பயனாளிகளுக்கு ரூ.1,35,500-க்கான மக்காச்சோளம், உழுந்து கிட், தூயமல்லி 10 கிலோ களை எடுக்கும் கருவிகளும், தோட்டக்கலைத் துறையின் மூலம் 04 பயனாளிகளுக்கு ரூ.33,700-க்கான கொய்யா அடர்நடவு, நெல்லி பரப்பு விரிவாக்கம், வெங்காய பரப்பு விரிவாக்கம், வீரிய காய்கறி நாற்றுகள், கத்தரிகளும் என மொத்தம் 67 பயனாளிகளுக்கு ரூ.24 இலட்சத்து 91 ஆயிரத்து 200 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் வழங்கினார்.
மனுநீதி நாள் முகாமில், தோட்டக்கலை துறை, வேளாண்மை துறை, சமூகநலத்துறை, குழந்தை வளர்ச்சித்துறை மற்றும் பல்வேறு துறைகளின் மூலம் அரசு திட்டங்கள் குறித்து பொது மக்கள் அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியினையும் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டார்கள். இந்நிகழ்ச்சியில், தென்காசி வருவாய் கோட்டாட்சியர் லாவண்யா, கடையநல்லூர் வருவாய் வட்டாட்சியர் பொ.பாலசுப்பிரமணியன், வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் பொன் முத்தையா பாண்டியன், துணைத்தலைவர் மோகன், நகரம் ஊராட்சி மன்ற தலைவர் அமுதா ரமணிபாய், இராமசாமியாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் அந்தோணியம்மாள் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள், பொது மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.