கனரக வாகனங்களை மாற்றுப் பாதையில் இயக்கிட வேண்டும்; தென்காசி ஆட்சியரிடம் கோரிக்கை..

கனரக வாகனங்களை மாற்றுப் பாதையில் இயக்க வேண்டும்; சமூக நல்லிணக்க கூட்டமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை..

தென்காசி மாவட்டம் கடையம் அருகே முதலியார் பட்டியில் உள்ள, அரசு தொடக்கப்பள்ளி புதிய கட்டிடத்தை சமீபத்தில், தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதனைப் பார்வையிட முதலியார் பட்டி வந்த தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் இடம் சமூக நல்லிணக்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கட்டி அப்துல் காதர் கனரக வாகனங்களை மாற்றுப் பாதையில் இயக்க கோரி மனு அளித்தார்.

அந்த மனுவில், தென்காசி மாவட்டத்தில் இருந்து நாள்தோறும் நூற்றுக் கணக்கான கனரக வாகனங்களில் கனிம வளங்கள் அண்டை மாநிலமான கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. சுமார் 20க்கும் மேற்பட்ட டயர்களைக் கொண்ட ராட்சத லாரிகள் நகருக்குள் வந்து, செல்வதால் ஏராளமான விபத்துக்கள் ஏற்படுகிறது. சாலைகள் மோசமாக சேதம் அடைகின்றன. சாலை ஓரம் உள்ள வீடுகள் குலுங்குகிறது. சில நேரங்களில் சாலைகளில் நெருக்கடி ஏற்பட்டு நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் காத்துக் கிடக்கின்றன. இவைகள் செல்லும் சாலை ஓரங்களில் சில பள்ளிக்கூடங்கள் உள்ளன. இந்த பள்ளிக் கூடங்களில் ஆயிரக் கணக்கான மாணாக்கர்கள் படிக்கிறார்கள். அவர்களின் பெற்றோர்கள் உயிரை கையில் பிடித்துக் கொண்டு வாழ்கின்றனர். இதனால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர்.

குறிப்பாக கடையம், பொட்டல்புதூர் போன்ற நெருக்கடியான சாலைகளில் அன்றாட மக்கள் படும் அவதிக்கு அளவே இல்லை. இது சம்பந்தமாக ஏற்கனவே கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஆலங்குளம் காவல் துறை கண்காணிப்பாளர் தலைமையில் நடந்த கூட்டத்தில் குறிப்பிட்ட நேரங்களில் கனரக வாகனங்களை நகருக்குள் செலுத்தக் கூடாது என்று அறிவுறுத்தி இருந்தும், தொடர்ந்து கனரக வாகனங்கள் சென்று வருகின்றன.

எனவே மாவட்ட ஆட்சியர் தயவு கூர்ந்து, தென்காசி திருநெல்வேலி, நான்கு வழிச்சாலை வழியாக கனரக வாகனங்கள் செல்ல ஏற்பாடு செய்யுமாறும், கடையம் பொட்டல்புதூர், போன்ற நெருக்கடியான சாலைகளில் கனரக வாகனங்கள் செல்வதை தவிர்க்க உதவி செய்யுமாறும் “சமூக நல்லிணக்க கூட்டமைப்பு” சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. முழுமையாக கேட்டுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் தற்போது பள்ளி நேரங்களில் கனரக வாகனங்கள் செல்வதற்கு விலக்கு அளித்துள்ளதாகவும், விரைவில் கோரிக்கையை பரிசீலிப்பதாகவும் தெரிவித்தார். அப்போது தாசில்தார் பட்டமுத்து, முதலியார்பட்டி ஊராட்சி மன்ற தலைவி முகைதீன் பீவி அசன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!